ஆயர் பெருந்தகைக்கு தமிழ் அரசியல் கைதிகள் சிரம் தாழ்த்தி அஞ்சலி!


முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தமிழ் அரசியல் கைதிகள்  தெரியப்படுத்தியுள்ளனர்.

அந்த இரங்கல் செய்தில், ‘உண்மையான இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டிய முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நிரந்தர ஓய்வுக்குள் தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.

வேடம் அணிந்து கோசமிட்டு முதன்மை இருக்கைகளை தம்வசப்படுத்தி மாலை மரியாதைகளுடன் வலம்வருகின்ற வெற்றுச்சமூக பற்றாளர்களைப் போலன்றி, சொல்லுக்கும் செயலுக்குமுள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி நீதி, நேர்மைக்காக துணிவோடு போராடிய அறப்போராளியாக தன் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றிருக்கின்றார் ஆயர் பெருந்தகை.

அத்துடன், சிறைக் கொட்டடிகளில் சிதைவுற்றுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அத்தியாவசிய விடயங்களில் அழையா விருந்தாளியாக தன்முனைப்புக் கொண்டு பலநற்காரியங்களை ஆயர் செய்திருந்தார்.

மனித நேயமும். பிறரன்பும் மிகுந்த பெருந்தகையான இவர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களைத் தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி ஒரு அன்னையை போல ஆற்றுப்படுத்தி ஆசிர் வதித்து வந்திருந்தார்.

அரசில் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரச தலைவர், பிரதம நீதியரசர் முதற்கொண்டு சட்டமா அதிபர், நீதி மற்றும் சட்டத்துறை சார் அதிகாரிகளையும் அரசியற் தலைவர்களையும் நேரடியாகச் சென்று சந்தித்து கலந்துரையாடி வந்திருந்தார்.

இவ்வாறு சொற்கோர்வைகளுக்குள் மாத்திரம் வரையறுத்துவிட முடியாத பரந்து விரிந்த செயலெல்லையை கொண்டிருந்த வணக்கத்துக்குரியவாரின் அர்ப்பணிப்புக்களில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது பெரும் வருத்தத்திற்குரியதே.

ஆண்டகையின் ஆத்மா பரம பதமடைய சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.