புத்தாண்டில் கைதிகளை பார்வையிடலாம்


 சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 13,14ம் திகதிகளில் சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“.. கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக சிறைகைதிகளுக்கு அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட உணவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர்களுக்கான உணவை சிறைச்சாலையின் உணவகத்தில் வழங்கப்பட்டதுடன் , அதற்காக கைதிகளின் குடும்பத்தினரால் வாரத்திற்கு 2,000 ரூபாய் பணத்தை உணவகம் பெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது சிறைகைதிகளை மாதத்திற்கு ஒரு முறையும் , சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை வாரத்திற்கு ஒருமுறையும் அவர்களது குடும்பத்தினர் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சிறைகைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது குடும்பத்தினர் பார்வையிட முடியும்.

இதன்போது கைதிகளை பார்வையிட வருபவர்கள் உரிய சுகாதார சட்டவிதிகளை பின்பற்றி இருப்பதுடன் , சிறைச்சாலை சட்டவிதிகளுக்கு அமைவாகவும் வருகைத் தந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதன்போது குடும்பத்தினரால் கைதிகளுக்கு எவ்வித உணவுப் பொருட்களையும் வழங்க முடியாது. ஆனால் கைதிகளுக்கு தயார் செய்யப்பட்ட உணவுகள் , சிற்றுண்டிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்காக சிறைச்சாலையின் உணவகத்திற்கு 1,000 ரூபாய் பணத்தை செலுத்த முடியும்.

இந்த பணத் தொகையை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும். சிறைச்சாலைக்குள் பரவிய கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் , மீண்டும் வைரஸ் பரவலடைவதை தவிர்க்கும் நோக்கத்திலே சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது..”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.