தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை!


மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோவாக ஆயர் திகழ்கின்றார் என பேரவை குறிப்பிட்டுள்ளதுடன், ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயரின் பணியைத்  தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும் என தெரிவித்துள்ளது.

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து முல்லைத்தீவு மாவட்ட தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “முள்ளிவாய்க்கால், சமூக-அரசியல் வரலாற்றுத் தளத்தில் தமிழினப் படுகொலை தொடர்பாக உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்

ஈழத் தமிழினத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணயக் கோரிக்கைகளை, தமிழினத்திற்குரிய அரசியல் தீர்வாகத் தொடர்ந்தும் வலிறுத்திவந்த ஆயர், தமிழினப் படுகொலைக்கும், வடக்கு-கிழக்கில் நடந்தேறிய திட்டமிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்ற  உண்மையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறியதன் விளைவாக பயங்கரவாத முத்திரை  குத்தப்பட்டு அரச இயந்திரத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பலமுறை  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நீதி தவிர்ந்த அல்லது அந்நியப்படுத்தப்பட்ட சூழலில்  நல்லிணக்கம் அசாத்தியமானது என்பதை மிகத் தெளிவாக ஆயர் எடுத்துரைத்தார்.

இலத்தீன் அமெரிக்காவில், எல்சல்வடோர் நாட்டு அரச அடக்குமுறைக்கெதிராக  மக்கள் விடுதலையை மையப்படுத்தி எவ்வாறு பேராயர் ஒஸ்கார் றொமேறோ உருவானாரோ, அதே சமூக, அரசியல் வரலாற்றுச் சூழலில் சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோவாக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை திகழ்கின்றார்.

தமிழ்  மக்களின் கூட்டுரிமைக்காக, சிங்கள-பௌத்த மயமாக்கலுக்கெதிராக, வடக்கு-கிழக்கு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்னு எதிராக, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வடக்கு-கிழக்கு இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, தமிழினப் படுகொலைக்கு உள்ளக விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி என ஈழத் தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்த ஆயரின் பணியைத்  தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.