அகதியின் நாட்குறிப்பு 2 - குடத்தனை உதயன்!!

 


 அட்டைப்படம் -கருணாகரன் ஆசிரியர் இலங்கை


சென்ற வார தொடர்ச்சி.....


நடேசர் தொண்டையைச் செருமியவாறு கேட்டார். ‘’தம்பி’’ அது சரி மும்பையில அந்தப்பிள்ளை உன்னுடன் உரசி..... உரசி கதைத்துக் கொண்டிருந்தாளே என்னவாம்..?

   ஆதியின் நெஞ்சு கனத்து  பட்ட பனை முறிந்து விழுகின்றது போன்று அவனது இதயம் 'சிர்....சிர்... ' என்றது. 

   பின்பு,  இருவருக்குள்ளும்  நிலவிய  இறுக்கத்தைத் தளர்த்துவதற்குத்தான் நடேசர் இப்படிக் கதை விடுகிறாரென நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான். 

நடேசர் தொடர்ந்து ,

‘’ பிறாங்போட்டில நம்பர் எல்லாம் கைமாறியது போல இருக்கு ? ”

என அடுத்த குண்டை வெடிக்க வைத்தார். 

 “அட அறுவான் எல்லாத்தையும் கவனித்திருக்கான்”. என மனதில் நினைத்தவாறு ஆதி  நடக்கையில் அடுத்த சர வெடி...... 

 “என்ன தம்பி ? ‘’ மௌனம் சம்மதம் என்று வைத்துக் கொள்ளலாமோ..?'

கெட்டிக்காரன்ரா நீ அதற்கிடையில் கொழுக்கி போட்டிட்ட !”

   முகத்திலே பட்டுத்தெறித்த சூரிய ஒளிக்கிடையில், அவரைப் பார்த்து , சிறிய கோபத்துடன் முறைத்தவாறு.. 

 “அண்ண ’’  "என்ன விசர்க்கதை கதைக்கிறியள். விட்டா கல்யாணம் கட்டி வைப்பியள் போல”.

      “அந்தப் பிள்ளைக்கு சுவிஸில்  தகப்பனும் , தமையனும் இருக்கிறார்கள். முறை மச்சானுக்கு கல்யாணம் பேசித்தான் பிள்ளை போகிறாள். ஆனால் பிள்ளைக்கு சொந்தத்திற்குள்ள செய்ய விருப்பமில்லையாம்.”

அதற்கிடையில் குசுவுக்கு முந்திய “ஏதோ போன்று”  

நடேசர்...  ஏனாம்..? என்றார்.

     “அண்ண’’ இப்படியான ஆற்றையும் ஒசிக்கதைகள் என்றால்  தலையை ஆட்டி, ஆட்டிக் கேட்க நல்லா இருக்கும்" என்றான் ஆதி.

 "சரி , சரி .... நீ சொல்லு.."

“அண்ண’’ நான் என்ன சாத்தியமா சொல்கிறன். ஒருத்தியின்ர வாழ்க்கைப் பிரச்சனை சொல்கிறன்.

சரி சொல்லடப்பா என்றார் நடேசர்.

பெடியன் சரியான உயரம் குறைவாம், அவர் கொஞ்சம் மாநிறமாம், தனக்கு பொது நிறத்திற்கும் கறுப்புக்கும் இடப்பட்ட நிறம் தான் பிடிக்குமாம், ஆம்பிளை என்றால் உயரமா இருக்க வேணும் அதோட வயதும் கூடவாம். என்று பிள்ளை கவலைப்படுது.

நடேசர் பின்னுக்குக் கையைக் கட்டியவாறு இப்படிக் கூறினார். 

“தம்பி’’ ஆள் கொஞ்சம் வித்தியாசமான ரேஸ்ட் உள்ளவா போல இருக்கு..!

அப்ப சிக்னல் ஒரேயடியா பச்சைக்கு விழுந்திட்டுது..!

அதற்கு நீங்க என்ன சொன்னீங்க ?” 

திடீரென மரியாதை கலந்த குரலில் கேட்டார்.

“இடையில ஒரு கர.. கரத்த குரலில், மாமாவும் வாறார் பேசி முடிச்சிடலாம்.”

    “ஆதிக்கு வந்த கோவத்திற்கு இழுத்து வைத்துக் குத்த வேண்டும் போல இருந்து.”

“அண்ண ’’ தெரியாமத்தான் கேட்கிறன்! என்னைப் பார்த்தால் என்ன வி ..... பை ... மாதிரி இருக்கே ?” . 

அப்படித்தான் கேட்க நினைத்தான். .மரியாதை கருதி தொண்டை மட்டும் வந்ததை நிறுத்திய பின்பு... 

“என்னைப் பார்த்தால் நாக்கத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிற மாதிரியா இருக்கு ?”.

“ அண்ண ‘’ இது வாழ்க்கை..! என்றேன்.

   இல்லையடாப்பா நான் அப்படிச் சொல்ல வரல. இந்தக் காலத்தில் யாரை நம்புவது.! ஒ.... ! ஒ.....! அது தான் பிறகு மற்றப் பெடியனுடன் கதைக்க துவங்கினவாவோ..? என்றார் நடேசர்.

  “ அண்ண ‘’ இந்தியன் ஆமி, மாற்று இயக்கத்திட்ட தப்பி வந்த பதட்டம் இன்னும் போகல. வல்வெட்டித்துறையில் சந்தைக்குள் சனத்த இழுத்துப்போட்டு  சுட்டது இன்னும் கண்ணுக்குள் படமா ஓடுது. அங்க நிலமை என்னாகுமோ..? நாங்கள் உயிர் தப்பி வந்தாப் போதுமே..?

நாங்கள் எல்லாம்  மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை விட்டிட்டம். எல்லாம் சுயநலம் என்றான் கவலையுடன்.

    நடேசர் நீண்ட யோசனையில்  கையைப் பின்னுக்குக் கட்டியவாறு. சூக் காலை நிலத்தில் அழுத்தித் தேய்த்தவாறு நடந்து கொண்டிருந்தார்.

    இருவர் மனதிலும் தாயகத்தில் நடந்த குரூரக்காட்சிகள் , துயர் படிந்த நினைவுகளாக , ஓடிக்கொண்டிருந்தன. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.  காரணம் ஒருவர் அழுவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்கு.

நீண்ட இடைவெளியின் பின்பு , நடேசர் சொன்னார். 

“தம்பி ஒன்றுக்கும் யோசிக்காதை.. ஒன்றில் நிலமை மாறும். இல்லா விட்டால் மாற்றுவினம்.”

  “ஆதி  கண்கள் மினு மினுக்க அவரை நிமிர்ந்து பார்க்க , அருகில் வந்த சிகப்புக் கார் பிறேக் போட்டு நின்றது. ஓட்டுனருக்கு அருகிலிருந்தவர்  கையிலே வரைபடம் விரித்து  வைத்தபடி, கார்க் கண்ணாடியைக் கீழே இறக்கினார்.  மென்மையான சிரிப்புடன் கேட்போரின் காதுகள் நோகாமல்.. 

‘’ வணக்கம் ‘’ 

என்று அவரின் குரல் ஒலித்தது.”

     நடேசரும் முழி பிதுங்க எருமை மாடு தலையாட்டுவது போன்று  ஆட்டினார். தமிழர் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வது ஒரு புதுமையாகவும், செயற்கைத்தனம் நிறைந்ததாகவும் ஆதிக்கு இருந்தது.

      சூரியன் இப்பவும் விளையாட்டுக் காட்டிக் கொண்டுதானிருந்தது.   ஆதி காருக்குள் எட்டிப் பார்த்தான். 

“மாமா”..!

 என்று சத்தம் போட்டுக் கூப்பிட வேண்டும் போல அவனுக்கிருந்தது.

   மாமா நடு உச்சி பிரித்துத் தலைவாரி பார்ப்பதற்கு ஐயர் பெடியன் போலிருந்தார். மாமா காரிலிருந்து இறங்கியதும் வாஞ்சையுடன் கட்டி அணைத்தார். மாமாவின் சிரிப்பு மட்டும் மாறவில்லை என நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

     நடேசரைப் பார்த்தான் கருமுகில்கள் மேகத்தை சூழ்ந்து கொண்டது போன்று அவரின் முகத்தோற்றம் இருந்து. அதை வெளிக்காட்டாமல், மற்ற இருவருடனும் கதைத்துக் கொண்டிருந்தார்.

    அவர்களின் கேள்வி குறிப்பாக நாட்டு நிலவரம் கேட்பதிலேயே  மையங்கொண்டிருந்தது. 

வரைபடம் வைத்திருந்தவர். 

என்ன... ஆதி மாவோட பேசுங்க..?

அவரின் தமிழில் கொழும்பு வாசனை அள்ளித் தெளித்துச் சென்றது.

    “நடேசர் மனதில் ஒரு துணிச்சலை வரவழைத்துத் தனது நிலமையைச் சொல்லி , தயவு செய்து என்னையும் உங்களுடன் கூட்டிச் செல்ல முடியுமா..? எனக் கெஞ்சும் குரலில் கேட்டார்.”   

   அங்கு சிறு அமைதி நிலவியது. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆதி மனதிற்குள் நடேசா..! நீ கெட்டிக்காரன்தான், என நினைத்தவாறு மாமாவைப் பார்த்தான்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



அவலம் தொடரும்..........

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.