கனிமொழிக்கு கொரோனா!

 


மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவை திமுக உறுப்பினரும் அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’, மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் ஆகிய திமுக முன்னெடுத்த பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதிப் பங்கீடு குழுவில் இருந்த கனிமொழி, கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், திமுகவின் தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்பட்டார். எனவே, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இரு தினங்களுக்கு முன் தேனி மாவட்டம், நேற்று (ஏப். 02) திருநெல்வேலி மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்பட்டதால் உடனடியாக கனிமொழி சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு இன்று (03) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

நாளை (04) மாலை 7 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.