அரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்!


யாழில் உள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் கிழக்கில் தனியாக வசிக்கும் தேவராசா தேவராணி என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயார் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருவதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்காகக் குரல்கொடுத்தார்.

அன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபரொருவர் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர், தொடர்ச்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களிலும் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் குறித்த விடயத்தைத் தெரியப்படுத்திய நிலையில், இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் வெளியில் சொல்வதற்குப் பயப்படும் நிலையும் உள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.