அகதியின் நாட்குறிப்பு 3 - குடத்தனை உதயன்!!

 


நெடுஞ்சாலையில் கார் வேகமெடுத்தது. மின்னல் வெட்டிற வேகத்தில் ஒவ்வொரு காரின் வேகமிருந்தது.

       ஆதி கண்களை அகலவிரித்துச் சாலையைப் பார்த்தான். பார்ப்பதற்கு அழகாக இருந்தது..! என்ன வேகம்...!  மரணத்தின் கடைசிப் பிடியைக் கையில் பிடித்துக் கொண்டு கண்கள் இமைக்கும் நொடிப் பொழுதுகளில், ஒவ்வொரு வாகனமும் ஓடி மறைகின்றன... என மனதிற்குள் வியந்து கொண்டான். மனதிலே ஒரு வித அச்ச உணர்வு தோன்றி மூளைக்குள் செருகிக் கொள்கிறது.         

இடையிடையே நடேசரை நினைத்துக்கொண்டான். 

முன்னுக்கு இருந்தவரின் பெயர் “சிறி” என மாமா கூப்பிடும் போது தெரிந்து கொண்டான்.

  சிறி அண்ணா மாமாவுக்கு இப்படிச் சொன்னார். அந்த மனிசனைப் பார்க்கப் பாவமாக இருக்கு. நல்ல மனிதராகவும் தெரிகிறார்.. 

இங்கால கூப்பிடுவமா..? எனக்கேட்டார்.

    அவரின் கேள்வியால் ஆதியின் மனம் குளிர்ச்சியடைந்தது. அவன் மாமாவின் பதிலுக்கு காத்திருந்தான். அவனின் முக மலர்ச்சியைக் கண்ட மாமா.

”ஆள் எப்படி..? 

எனக் கேட்டார்.”

“நல்ல பெடியன் “

      நடேசர் வெளிநாடு வந்த கதையைச் சொன்னான். மாமா போராளிகளையும், அதற்கு ஆதரவானவர்களையும் மதிப்பவரென்பதை விட நேசிப்பவரென்று சொல்வது தான் பொருத்தம்.

     ஆதியின் மனதில் மாமாவின் வீடு எப்படி இருக்கும்..? இவர்களில் யார் , யார் சேர்ந்து இருக்கிறார்கள்..? அந்தச் சுற்றுப் புறச் சூழல் எப்படியிருக்கும்..? போன்ற கற்பனை மனதில் கோலம் போடத் துவங்கின.

      “அங்க போய்” நன்றாகக் குளிக்க வேண்டும். நல்ல தாயகச் சாப்பாடு சாப்பிட வேண்டும். என பலதும் பத்தும் அவன் மனதில் நினனைத்துக்  கொண்டான்.

     காருக்குள்... “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற பாடல் தவழ்ந்து வந்தது. நீண்ட நாட்களின் பின்பு தமிழ்ப் பாடல் கேட்கும் போது அவனது மனது சிறு பிள்ளை போன்று துள்ளிக் குதித்தது.

     இதய நரம்புகள் புடைத்து உடல் முழுவதும் சொல்ல முடியாத உணர்வுகள் உயிர் பெறுவதை உணர்ந்து கொண்டான்.

     அந்நிய தேசத்தில் சொந்த மொழியும், இசையும் அருமருந்து என அந்தக் கணப்பொழுதில் ஆதி உணரவில்லை.

   அந்தப் பாடலின் அடுத்த வரிகள் “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே “ என ஒலித்தது. ஆதி மனதிற்குள் ,”கலங்காதே” என்று வந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தான். 

  அத்துடன் மாமாவின் “குறட்டைச் சத்தமும்” சேர்ந்து பாடலுக்கு மெருகேற்றின.

   காரில் முன்னுக்கிருந்த இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள். “ரைமிங் காமடி” போன்று இருந்தது. மாமாவைத் திரும்பிப் பார்த்தான். 'பாவம்..! வேலை அலுப்பாக இருக்கும்' என அவனது மனம் இரங்கியது.  

ஓட்டினர் சொன்னார்.... 

“தம்பி”...

    “மாமா” ஏறும் போது குறட்டை விட்டால் , இறங்கும் போது தான் நிற்பாட்டுவார். இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.

    ஆதி மாமாவைத் திரும்பிப் பார்த்தான்,  அப்போதும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.

   ஊரிலே சொல்வார்கள்... வெளியூரில் இருந்திட்டு வந்தால் அந்த ஊரின் தண்ணிக்கும், சாப்பாட்டுக்கும் ஒரு வித குளிர்ச்சி தெரியுமென்று. வெளிநாடு என்றால் சொல்லவா வேண்டும். மாமா அப்படியிருந்தார்.

     ஆதிக்கு ஊர் நினைவுகள் ...... நீர்க்காகம் நீருக்குள் தலையைக் குத்தி இரை மீட்டிக் கொண்டெழுவது போன்று நிமிர்ந்து எழுந்தன.

    அந்த நினைவுகளுக்கிடையில் சாலை ஓரத்தில் வரிசை கட்டி நிற்கும்.. கட்டிட.. காடுகளையும், தாமரை இதழ்கள் போன்ற மின் விளக்குகளையும், ஆதி பார்த்து வியந்தான்..! இந்த பிரமாண்டந்தான் வெளி நாடோ..! என நினைக்கத் தோன்றியது அவனுக்கு.

*********************************************

      மனம் தனிமை கொள்ளும் போதோ, வேதனையடையும் வேளைகளிலோ, அம்மா தான் தங்கு தடையின்றி மனதிற்குள் அடிக்கடி ஒடி வந்தாள். 

     அம்மாக்களின்றி இந்த உலகமும், மனிதமும் ,சுடு காடாய்ப் போய்விடும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

       அம்மா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், பனியுருகி வழிந்தோடுவது போன்று சொட்டுச் சொட்டாக மூளையிலிருந்து. மனதிற்குள் விழுந்த வண்ணமிருந்தன. சில விழுகைகள் பன்னீர் தெளித்தது போன்று குளிர்ச்சியாகவும், பல விழுகைகள் கொழுந்து விட்டு  எரிந்து கொண்டிருக்கின்ற தீப் பிழம்பில் கசிந்து விழுந்து  பொசிந்து போகிற நீர்த் துவளைகள் போன்று ஆதி உணர்ந்தான்.

    அவன் ஊரில் இருந்த பொழுதுகளில் அம்மா விரும்பிய பிள்ளையாக இருக்கவில்லை. அதற்காக அவன் கெட்டுப் போகவுமில்லை.

    அவன் மனதில் ஆயிரமாயிரம்.... நினைவுகள் புரையோடிக் கிடக்கின்றன. எந்த நினைவுகளைச் சொல்ல..? என்னவோ தெரியாது.. எதிர் மறை எண்ணங்கள் தான் மூளையின் மேல் தட்டில் இருக்கிறதோ ?, அவை தான் முதல் தோன்றியவண்ணம் இருக்கின்றது.

    ஆதிக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். அம்மாவுடன் பெரிய கருத்து முரண்பாடு. அவனும் வார்த்தைகளை வயதிற்கு மீறிக் கொட்டி விட்டான். அந்த வார்த்தைகள் “கற்றாளை முள்” குத்தியது போன்று அவாவின் இதயத்தைத் தைத்து விட்டது. அம்மாவின் சொற்கள் இப்படி வந்து விழுந்தன.

“என்னைப் படுத்துகிற பாட்டுக்கு ஒரு நேரம் நினைத்து , நினைத்து அழுவாய்.”

   அம்மாவின் தளு தளுத்த குரல், கோபம் நிரம்பிய கண்கள்,  ஏனோ தெரியேல... இந்த வழிப் பயணத்தில் தோன்றிய வண்ணமிருந்தன.  அந்த நினைவுகளுடன் அவனும் உறங்கி விட்டான்.

*********************************************

     திடீரெனக் காரின் வேகம் குறைந்து ஓடுவதை, ஆதி உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.  ஆனால்.. அவன் கண்களைத் திறக்க மனமின்றி இறுக மூடிக்கொண்டான் . 

    அவனுக்கு அம்மாக் காய்ச்சல் பிடித்து விட்டதென நினைக்கிறேன். சில மணி நேரப் பயணத்தின் பின்பு கார் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது.

     இரண்டு பேரும் கும்பகர்ணன் ஊருக்கு பக்கம் போல.., இறங்குங்கோ..  என அதே சிரிப்புடன் சிறி அண்ணா கூறினார்.

     சிலருக்கு சிரிப்பு வரம்..! பலருக்கு சாபம்..! ஆனால் சிறி அண்ணாவுக்கு வரமே..,  என ஆதி நினைத்துக் கொண்டான்.

    ஆதி காரினால் இறங்கி சோம்பல் முறித்தவாறு,  ஒரு பரந்த வெளியில் தனிமையில் வானை.. நோக்கி உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தவாறு நின்றான்..!

    வாகன ஓட்டினர் ஒரு சிகரெட்டை உதட்டில் செருகி, அதற்கு உயிர் கொடுத்து, புகையை ஆழமாக உள்ளிழுத்து,. அமைதியாக, மெதுவாக வெளிவிட்டவாறு... 

“ஆதி என்ன பார்க்கிறீர்...?” 

“உது தான் மாமாவின் வசந்த மாளிகை..”

   அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது அவர் மாமாவுடன்  இங்கு இருப்பதில்லையென்று.

    மாமா முன் செல்ல.. அவன் பின் தொடர்ந்தான். அந்தக் கட்டிடத்தின் தோற்றம் சொல்லியது.. “ஒரு விடுதியை அகதிகளுக்காகக் குடுத்துள்ளார்களென்று.”

      டானா வடிவத்தில் அவர்களின் அறையிருந்தது. இரண்டடுக்கு கட்டில் சுவரோரத்தில் போடப்பட்டிருந்தன. அதனருகில் சிறிய மேசை,  நெருகுப் பெட்டி போன்று சிறிய தொலைக்காட்சிப் பெட்டி,  ஒரு வீட்டுக்குள் என்ன எல்லாம் இருக்குமோ..? அத்தனையும் அதற்குள் இருந்தன. அவனின் கணக்கு பிழைக்கா விட்டால் அவனுடன் சேர்த்து ஐந்து பேர் அங்கு தங்க வேண்டும்.

    அந்த அறையைப் பார்த்ததும், அவனது கற்பனைகளும் , எண்ணங்களும், அவன் கண் முன்னே செல் பட்டுச் சிதறுண்ட கூரை வீடு போன்று உருக்குலைந்து போனது.

“வாடா ஆதி வா......” 

உன்னைப் பார்க்க வேண்டுமென்று அவன் துடித்த, துடிப்பு எனக்குத்தான் தெரியும்...

அவர் மாமாவைச் சொல்கிறார் எனப் புரிந்து கொண்டான். 

“என்னடா தம்பியவை..”

ரீ போடவோ..? அல்லது சாப்பிடப் போறியளோ..?

அங்கிருந்த வயது முதிர்ந்தவர் பரிவு கலந்த குரலில் கேட்டார்.”

“செல்லப்பா”... 

ஒரு பிளேன் ரீ போடுங்கோ... 

என்றார் அதே சிரிப்புடன் சிறி அண்ணா.” 

ஒகோ ......!

இவரா செல்லப்பா...!  

வரும் போது இவரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டதை அவன் நினைவில் வந்துகொண்டிருந்தது...தொடரும்.........Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.