செம்மிலி - ப.தனஞ்ஜெயன்!!

 


திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்தவாறே வெற்றிலையை இடித்தாள் பொற்கலை ஆத்தா.வெற்றிலை இடிக்கும் சப்தம் வெண்கல சப்தமாக போன்று ‘டங் டங் டங்..’.என்று வந்தது.அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த இரண்டு பெண்கள் “கிழத்தைப்பாரு, கூனு கிழவி பாம்படத்தை மாட்டிகினு ரவிக்கை இல்லாம,கூனா இருந்தாலும் இன்னா கட்டுமஸ்தா உட்கார்ந்திருக்கா” என்றாள் ஒருத்தி. "அடியேய் பொக்கைவாய்க்கு வெற்றிலை வேற,அதில ராகம் வேற" என்று கிண்டலாகப் பேசிக்கொண்டே சென்றாள் மற்றொருத்தி.


மாலை வெயில் திண்ணையைத்தாண்டி வீட்டுக்குப் பின்புறம் சென்றது.தொலைவில் மாடுகள் வரும் சப்தம் கேட்டது.பொற்கலை கைத்தடியை ஊனிக்கொண்டு மாராப்பை இழுத்து விட்டுக்கொண்டே வெற்றிலையை அதக்கி அங்கிருந்த மண்சட்டியில் துப்பிக்கொண்டே எழுந்தாள்.

எழுந்து, மாடுகள் செல்லும் கதவருகே வந்து ஒவ்வொரு மாடுகளாகப் பார்த்தாள்.அனைத்து மாடுகளும் உள்ளே சென்று தொழுவத்திற்குள் வந்தது.மாடு மேய்த்த குச்சியை கீழே போட்டுவிட்டு செங்கேணி தண்ணீரைத் தொட்டியில் ஊற்றினான்.செங்கேணிக்கும் லேசாக கூன் முதுகாக மாறிப்போயிருந்தது.மாட்டுத்தொழுவத்தில் கீழே குனிந்து சாணியை வாரி வாரி முகுது வளையத்தொடங்கியது அவனுடைய முதுகு  சொல்லியது.

செங்கேணியின் பாட்டன் காலத்திலிருந்தே படி ஆளாக மாடு மேய்க்க வந்தவன்.பாட்டனும் அப்பனும் சுடுகாட்டுக்குப்  போய்விட்டாலும் செங்கேணி மூன்றாம் தலைமுறையாக

பொற்கலை ஆத்தா வீட்டில் வேலை செய்தான்.தலைமுறையாய் இப்படியே அடிமை ஜீவனம்தான்.

தொட்டியில் தவிட்டைக் கொட்டி ஒவ்வொரு மாட்டிற்கும் காட்டினான்.அதற்குள் பால்காரர் வந்தார்.கன்றுகள் கத்தத்தொடங்கியது.கறவை மாடுகளைப் பால்கறந்து வைத்து விட்டு பால்காரர் மாணிக்கம் செல்லும் முன் "டேய் மாணிக்கம் டவுனுக்கு போனா இந்த போயிலையும் தூள் பாக்கும் கொஞ்சம் வாங்கிவாடா" என்றாள் பொற்கலை."சரி ஆத்தா "என்றான் பால்கார் மாணிக்கம்.

இருள் கவிய ஆரம்பித்தது.மாடுகளுக்குத் தவிட்டைக் காட்டிவிட்டு அந்த அந்த இடத்தில் மாடுகளைக் கட்டினான் செங்கேணி.இருள் முற்றிலும் நிலத்தில் சரிந்தது.பொற்கலை தோட்டத்து விளக்கைப் போட்டாள்.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு,கை கால்களைக் கழுவி சாப்பிட அமர்ந்தான் செங்கேணி.

சாப்பாட்டை ஒரு இலையில் வைத்தாள் பொற்கலை.அருகில் நாய் உட்கார்ந்திருந்ததால்  அதற்கும்  கொஞ்சம் சோறு வைத்தாள். காரகொழம்பை  ஊற்றினாள். வாழையிலையின் வாசம் கமகமத்தது. அவனுக்கென்று தனி டம்பளரில் தண்ணீரை ஊற்றினாள்.நன்றாகச் சாப்பிட்டு விட்டு மாட்டுத்தொழுவத்தில் ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டான் செங்கேணி.அவனருகிலேயே  கறுப்பு நாயும் படுத்துக்கொண்டது.

 ஆத்தா உள்ளே சென்று மருமகள் கொடுத்த சாப்பாட்டைத்தட்டில் போட்டுச் சாப்பிட்டாள்.இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலையைக் கிழித்தாள்.தெருவில் வண்டி சப்தம் கேட்டது."யாரு என்றாள்" பொற்கலை.நான் தான் ஆத்தா மாணிக்கம் என்ற குரல் தெரு வாசற்படியில் கேட்டது."ஏம்மா.. மாணிக்கத்திடம் பாக்கும் போயிலையும் கேட்டேன் போய் வாங்கி வா"என்று தன் மருமகளை அனுப்பினாள்.

மருமகள் திரும்பி வந்து பொட்டலத்தைக் கொடுத்தாள்.அந்த பொட்டலத்தை வாங்கி ஓரம் வைத்துவிட்டு வெற்றிலையை மீண்டும் இடித்தாள்.

“கெழக்கால சுடுகாடு

ஆளாளுக்கு  தனி காடு

 துக்க குரல் கேட்குது

 வடக்கால அழைக்கிது

 வாய்க்கரிசி பொடைக்கிது

 தெற்கால அழைக்கிது

 தென்னங்கீத்து அசையுது

 மேற்கால அழைக்கிது

 அந்தி சாய்ந்து அழுவுது

 விதி எங்க அழைக்கிது

 என்ன தாண்டி நடக்குது”

என்ற பாடலை பாடிக்கொண்டே ஒப்பாரி ராகத்தைப் போட்டவாறே கண்ணீரைத்துடைத்து விட்டு ,மூக்கை சிந்தினாள்.வெற்றிலை இடுக்கியிலிருந்து சப்தம் வந்தது.”என்ன ஆச்சி உங்களுக்கு... ஏன் இந்த ஒப்பாரி” என்றாள் மருமகள்.“விதைநெல்லை விதைக்கப் போன மனுசன் கரெண்ட் அடிச்சி செத்து மூனு வருசம் ஆச்சி,என்ன பண்ணறது அந்த விதி வந்து என்னையும் கூப்பிடலையே”என்று அழுதாள் பொற்கலை.

"சரி சரி..படுங்க அத்தை" என்று சமாதானப்படுத்தினாள் மருமகள் சுப்புலட்சுமி.

செங்கேணி, "ஆத்தா… கொசுக் கடி தாங்கலை,வத்திப்பெட்டியை கொடு" என்று கொட்டகை அருகிலேயே மூட்டம் போட்டான்.அங்கிருந்த கூளத்தை எடுத்துக் கொளுத்தினான்.அது பொழைந்து கொண்டேயிருந்தது.

நள்ளிரவு வரை கூளம் பொழைந்து அணையும் நேரத்தில் நிலவின் வெளிச்சம் பிரகாசித்தது.அப்படியே அசந்து தூங்கிப்போனான் செங்கேணி.காலையில் நிலவு மறையும் போது வந்தவன்,இரவு மீண்டும் பிரகாசிக்கும் வரை வேலை.பிறருக்காகச் சகமனிதர்கள் ஒரு பக்கம் கடுமையாக உழைக்கும் படி உலகம் அமைந்துவிட்டது கொடுமைதான்.

நடு சாமத்தில குரல்கள் கேட்டது.பக்கத்து வீட்டிலிருந்து சப்தம் பலமாக வந்தது.”டேய் செங்கேணி இங்க வாடா” என்று கத்தினார்கள்.தூக்கதிலிந்து மீண்ட செங்கேணிக்கு ஒன்றும் புரியவில்லை பின்புறம் இருந்த மாட்டுக்கொட்டகையிலிருந்து முன் வாசலுக்கு ஓடினான்.

ஆத்தாவிற்குத்தான் ஏதோ நடந்துவிட்டது என்று அலறி ஆத்தா என்று கத்திக்கொண்டே எதிர் முற்றத்திற்கு ஓடினான்."சின்னம்மா என்ன ஆச்சி சின்னமா.." எனக் கேட்டுக்கொண்டே லேசான கூன்முதுகோடு கூனிந்த வாறே ஓடினான்.வீட்டினுள் இருந்து எந்த சப்தமும் காணவில்லை.சின்னவர் வேலையா வெளியூருக்குப் போனவர் நாளைதான் வருவார்.அவர் வீட்டில் இல்லாது போனால் மட்டும் காவலுக்கு இங்கே தங்கிவிடுவான் செங்கேணி.

பொற்கலை ஆத்தா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.பக்கத்து வீட்டிலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தார்கள்.பொற்கலை ஆத்தாவும் எழுந்து கொண்டாள்.

“என்னடா செங்கேணி சப்தம்" என்றாள்.அதற்குள் பக்கத்து வீட்ல “வெளியில கட்டிப்போட்டிருந்த செனை மாட்டைக்காணோம்.எந்த மடையன் ஆவுத்துகினு போனோனுவுலோ” என்று சப்தம் வந்தது. “என்னங்க சாமி” என்று குரல் கொடுத்தவாறே ஓடி வந்தான் முனுசாமி."இந்தாடா பேட்டிலைட்டு..., போய் என்னன்னு பாருங்க" என்று லைட்டை கொடுத்தாள் ஆத்தாள்.

"டேய் வாங்கடா"என்ற குரலுக்குப் பின்னால் செங்கேணியும் ஓடினான்.அவன் பின்னால் கறுப்பு நாய் குரைத்துக்கொண்டே ஓடியது.நிலவு வெளிச்சமும் அமைதியும் அப்படியே இருந்தாலும் இவர்கள் அதைக்கலைத்தார்கள் நீண்ட தூரம் சென்றார்கள். கருப்பங்கொல்லை, நெல்லி கொல்லைனு தேடியும் எங்குமே மாடு கிடைக்கவில்லை.

களைத்துப்போய் வீட்டிற்கு வந்தார்கள்.சேவல் கத்தியது.காலை வெளிச்சம் வரும் நேரத்தில் இருள் பிரியத்தொடங்கியது.அவரவர் அவர் திசைகளுக்குச் சென்றார்கள்.மாட்டுத் தொழுவத்திற்குள் போனான் செங்கேணி.

அந்த நேரத்தில்,"பனஞ்சாறு... பனஞ்சாறு..." என்று குரல் கேட்டது."ஆத்தா எனக்கு இன்னைக்கு நீராகாரம் வேணாம்.ஒரு டம்பளார் பனஞ்சாறு வாங்கித்தா" என்றான் செங்கேணி.

பொற்கலை ஆத்தா,"காசி இல்லடா மொவன் வந்தால் தான்..இரு.. இரு.. கடனா வாங்கித்தரேன்" என்று "பனஞ்சாறு இங்கவா" என்று அழைத்தாள்.அருகில் வந்து குடத்தை இறக்கி ஊற்றினாள் பனஞ்சாறு விற்பவள்.தனக்கு என வைத்திருந்த தனி யானத்தில் ஊற்றிக் குடித்தான் செங்கேணி.

சாணத்தை வாரிவிட்டு பால்கறவை முடிந்து மீண்டும் தவிடு வைப்பதற்குள் சூரியன் பிரகாசமாக எரிந்தது.வாளியில் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டு மாடுகளையும் வீட்டிலிருந்த ஆட்டையும் நீண்ட கம்பு ஒன்றையும் எடுத்துக்கொண்டு மாட்டை மேய்ச்சலுக்குப் ஓட்டிக்கொண்டு புறப்பட்டான் செங்கேணி.

ஆத்தா, “என் பொண்சாதி மச்சகாந்தி வந்தா ஏரிப்பக்கம் மாட்டுக்கிட்ட வரச்சொல்லுங்க” என்றான்.

“டேய் செங்கேணி அவளுக்கு அரிசி பொடைக்கிற வேலை இருக்குதுடா,அதை முடிச்சா சொல்லி அனுப்புறேன்” என்றாள் பொற்கலை ஆத்தா.

ஏரியிலும் தண்ணீர் இல்லாமல் புற்கள் தரை பரப்பி இருந்தது.ஒரு இடத்தில் திட்டாகப் பள்ளத்தில் தண்ணீர் இருந்தது.அதனருகில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது.அங்கு மாடுகளை விட்டுவிட்டு ஆலமரத்தின் கீழ் தன் சகாக்களோடு அமர்ந்திருந்தான் செங்கேணி.

"டேய் செங்கேணி,நேத்து பக்கத்து ஊட்டுல மாட்ட காணாமாமே" என்றான் ஒருவன்."ஆமாங்க, வெகுநேரம் தேடியும் அகப்படலை ஆண்டா"என்றான் செங்கேணி.

"மாடுகளை மேய்ச்சலுக்கு நாம விடுகிற மாதிரி மனுசனும் யார் ஏமாறுவார்களோ அவங்கள மேஞ்சி புடறாங்க.இது அனேகமாகப் பக்கத்து ஊர் முனுசாமி மாமர் ஆளுங்க வேலையாகத்தான் இருக்கும்" என்றான் மரத்தின் கீழ் படுத்திருந்த மற்றொருவன்.

அதற்குள் செங்கேணியின் ஆடு வெகுதூரம் சென்றிருந்தது.தன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு ஆட்டை நோக்கி ஓடினான்.இரண்டு ஆடுகளைக் காணவில்லை.

வெகுதூரம் சென்று தேடினான். ஆடுகள் கிடைக்கவில்லை .வருத்தத்தோடு மரத்தடிக்குத் தேடிச்சென்ற செங்கேணியும் மற்ற இருவரும் வந்தனர் .பொதர்,பக்கத்து ஓடை என எல்லா எடத்திலையும் தேடிட்டோம் ஒன்னும் அகப்படலை என்றான் மற்றொரு மாடுமேய்க்கும் சகாக்களில் ஒருவன்.என்ன பன்னறது ஆத்தாவுக்கு என்ன பதிலை சொல்லப்போறனோ என்று இடுப்பிலிருந்த துண்டைபோட்டு உட்கார்ந்து கண்ணுக்கு எட்டிய தொலைவிற்குப் பார்த்தான். எதுவும் புலப்படவில்லை.

அந்தப்பக்கமாக வந்தாள் வனசுந்தரி,”ஏம்மா அந்தப்பக்கம் ஏதாவது ஆட்டை பார்த்த” என்று கேட்டான் செங்கேணி.”பக்கத்தில ஓடைவாய்க்கால தாண்டி இரண்டு ஆட்டை இரண்டு பேர் சைக்கிளில் கட்டி தூக்கிபோனாங்க, கேட்டதற்கு விலைக்கு வாங்கிப்போவதாகச் சொன்னார்கள்” என்றாள் உறவுக்காரி வனசுந்தரி.அவள் ஓட்டிவந்த மாட்டைப் பார்த்துக்கொண்டே மரத்தடியில் ஒக்கார்ந்தாள்.

மாடு மேய்க்க வந்த ஆண்களும் பெண்களும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.செங்கேணிக்கு சாப்பிட ஓடலை.பழைய சோத்தை பிழிந்து நீராகாரத்தைக் குடித்துவிட்டு,வனசுந்திரியிடம் கொடுத்தான்.”என்ன மாமா கொஞ்சம் சூடா வடிச்சி போட்டாத்தான் இன்னா,மாட்டை விடக் கேவலமாக நடத்தராங்களே” என்றாள்.   

கூட்டமாக கொக்குகள் ஏரிக்குள் வந்தது. இவர்களுக்கு அருகில் திட்டாக இருந்த நீர்நிலையில் வந்தமர்ந்தது.இவர்கள் அமர்ந்திருந்த பக்கம் முழுவதும் வெய்யில் சரிந்தது.தொலைவில் ஒரு குரல் டேய் செங்கேணி எனக்கேட்டது.திடுக்கிட்டான், ஆடுதான் கிடைத்து விட்டது என நினைத்து என்னங்க சாமி என்றான்.

"அங்க மோட்டுல ஓன் ஆடு ரெண்டு குட்டி போட்டிருக்குடா என்றான்.இரண்டும் பொட்டை டோய்" என்றான் ஆடு மேய்த்த மற்றொருவன்.செங்கேணிக்கு சந்தோஷம் பொங்கியது.அந்தி சாய்ந்துவடுவதற்குள் செங்கேணிமட்டும் மாட்டையும் ஆட்டையும் வீட்டிற்கு ஓட்டினான்.அன்று போட்ட ஆட்டுக்குட்டிகளைக் கையில் தூக்கிக்கொண்டு கிளம்பினான்.

ஆட்டு கொட்டிலுக்கு வந்தவுடன் ஆத்தாவிடம் நடந்ததைச் சொன்னான்.இரண்டு குட்டிகளும் தாய் ஆட்டின் மடியில் பால் குடித்தது.ஆத்தா நம்பவில்லை.இரண்டு குட்டிகளையும் கொஞ்சினாள்.செங்கேணியை முறைத்தாள் பொற்கலை ஆத்தா.என்னடா வேலை செய்யற ஆட்டையும் மாட்டையும் பார்த்துக்கொள்ளத் துப்பு இல்லை ஒனக்கு என்று கத்தினாள்.துப்புக் கெட்டவன் என முணுமுணுத்தாள்.

"வாழ்நாள் பூரா வேலை செஞ்சா கூட தொலைஞ்சு போன இரண்டு ஆட்டு காசியை அடைக்க முடியாதுடா உன்னால" என்றாள்.செங்கேணி அமைதியாக இருந்தான்.எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை வாங்கி பழக்கப்பட்டவன். ஆத்தாவின் அத்தனை பேச்சுகளையும் வாங்கிக்கொண்டான்.

ஊரிலிருந்து சின்னையாவும் வந்துவிட்டார் .ஆடு காணாமல் போன செய்தியை மேலும் விபரமாக செங்கேணியிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். செங்கேணியும்  சின்னாய்யாவும் பக்கத்து ஊரு முனுசாமி மாமரை பார்ப்பதற்குப் போனார்கள்.”முனுசாமி அரசியல் செல்வாக்கு உள்ள ஆளு,அடிதடி,வெட்டுக்குத்து,மனுசங்கள மதிப்பதே குறைவு. என்ன பன்னறது அவங்கிட்ட நேரா நம்ம ஊர்ல நேற்று திருடு போன மாட்டையும் ஆட்டையும் நீதான் திருடனன்னு சொல்லவும் முடியாது கேட்கவும் முடியாது.சாடையா பிராது கொடுப்பும் டா செங்கேணி” என்று பேசிக்கொண்டே நடந்தார் சின்னயா.

பக்கத்து ஊரில் முனுசாமி வேண்டிய பேருக்குக் கண்டு பிடித்து தரேன் என்று சொல்லி காச வாங்கிக்கொண்டு திருடின ஒன்னுரெண்டு திருப்பி தருவது வழக்கம். அந்த நம்பிக்கையில் செங்கேணியும் சின்னையாவும் உள்ளே போனார்கள்.முனுசாமி மாமர் வீட்டுக்கு வெளியில் கூட்டம்.முனுசாமி பார்ப்பதற்கு முனீஸ்வரன் மாதிரி மொந்தையில் பனங்கள்ளோடு கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,பெரிய வயிறு நல்ல உயரம்.தோளில் கட்சி துண்டு தொங்கியது.ஆட்களை  மிரட்டுவதற்காகவே வைத்திருந்த மீசையை உருட்டிவிட்டான்.”வாங்க சின்னையா என்ன இந்த பக்கம்” என்றான் முனுசாமி.

முனுசாமிக்கு இரவில் ஆடு,மாடுகள்,தேங்காய்,வாழைத்தார் மற்றும் விளை நிலங்களில் விளைந்தவற்றைக் கோணிப்பையில் ஆட்களை ஏவித் திருடுவது வேலை என்பது வெகு பேருக்குத் தெரியும்.

பக்கத்து ஊரு பஞ்சாயத்து அதான் பேசிக்கிட்டுருக்கோம்.எது எப்படியோ எல்லாம் நல்லா சாப்பிட்டு போங்க இன்றைக்கு ஆட்டுக்கறிதான் என்று பேசிக்கொண்டேயிருந்தவர் சின்னவரையும் செங்கேணியையும் பார்த்து மீண்டும் உங்களுக்கு நூறு ஆயுசு என்றார் மாமர்.

“நேத்து ஊர்ல ஒரு மாட்டையும் இரண்டு ஆடுகளையும் காணாங்க,அதான் நம்ம ஆளுங்க யாராவது...”என்று இழுத்தவாறே வந்த விபரத்தைச் சொன்னார்கள்.

டேய் கட்டையா நேற்று ஏம்பலத்திற்கு ஏதாவது போனயாடா என்று கேட்டார் முனுசாமி மாமர்.

தலைகவிழ்ந்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, இல்லைங்க என்று சொன்னான்.”நம்ம பயலுவல நம்ம எல்லைக்குள்ள வர விடமாட்டனே, அவனுங்கள நம்ம பகுதியில திருட அனுமதி தரலையே.பக்கத்து ஊர் பக்கமில்ல போகச்சொன்னேன்.நம்ம சாதிகாரனுங்க முகத்தில எப்படி முழுச்சி அரசியல் பன்றது.சரி..சரி பார்த்துக் கண்டுபிடித்து தரேன் சாப்பிட்டு போங்க” என்றார் மாமர்.

மாமர் வீட்டில் சின்ன முதலாளி நடையிலும் செங்கேணி தோட்டத்துக்குப் பின்னாலும் அமர்ந்து ஆட்டுக்கறியைச் சாப்பிட்டார்கள்.இவர்கள் இருவருக்கும் புரிந்து போனது ஆடு எப்படி களவு போகிறது என்று.அடி ஆட்கள் சகிதமாக அனைவரும் சாப்பிட்டார்கள்.

செங்கேணிக்கு இப்ப சாப்பிட்டது நம்ம ஆடுகளா இருக்குமோ என்று சந்தேகம் கிளம்பிக்கொண்டேயிருந்தது.வெளியில் வந்து, சின்னையா..... இதை எல்லாம் பார்த்தா சரிப்பட்டு வராது .நாம பிராது கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டே வந்தான் செங்கேனி.இருவரும் பேசிக்கொண்டே செல்வதைக் கேட்ட அடி ஆள் ஒருவன் முனுசாமி மாமர் காதில் இந்த செய்தியை முணுமுணுத்தான்.

ஆத்தா… மல்லாட்டை புடுங்க ஆட்களைக் கூட்டி போனாங்க போய் மல்லாட்டைய அளந்து எல்லோருக்கும் கூடைக்கு ஒரு படிப் போடு என்று சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார் சின்னையா.

செங்கேணி நிலத்திற்குச் சென்றான். மல்லாட்டை ஆஞ்சி முடித்தவுடன் அளவுக்கூடையை கொண்டு அளந்து அவர்களுக்குக் கூலியாகக் கூடைக்கு ஒரு படி, ஒரு கையென மல்லாட்டையை போட்டான்.மல்லாட்ட கொடியைக் கட்ட யாரையும் அனுமதிக்கவில்லை செங்கேணி.

இருள் சூழ்ந்து அமைதியானது நிலம்.அன்று இரவு மல்லாட்டைக் களத்தில் காவலுக்கு இருந்தான் செங்கேணி. நள்ளிரவு தாண்டி இரண்டு பேர் சாக்குகளோடு வந்து மல்லாட்டையை அள்ளினார்கள்.யாரு என்று குரல் கொடுத்தான் செங்கேணி. அவ்வளவுதான்  அவர்கள் எடுத்து வந்த பிச்சுவா கத்தியின் கைபிடியால் குத்தினார்கள் ஆட்கள்.ஆங்காங்கே உள் அடிபட்டுத் துடித்தான் செங்கேணி.சில மூட்டைகள் களவு போனது.மயக்கமாக கிடந்தான் செங்கேணி.

விடிந்ததும் மாட்டு தொழுவத்திற்கு இன்னும் செங்கேணி வரவில்லையே என மல்லாட்டை களத்திற்கு விரைந்தார் சின்னையா.

களத்தில் மயக்கத்தோடு கிடந்தான் செங்கேணி.டேய் செங்கேணி என்று கேட்ட குரலில் சற்று தள்ளாடி எழுந்து நின்றான்.

தொழுவத்திலும் மேய்ச்சல் நிலங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட செங்கேணி ஒரு கணம் யோசித்தான் தன்னுடைய மேய்ச்சல் நிலம் எங்கு இருக்கிறது என்று கேட்டவாறே தன் உடலைப்பார்த்தான்.தன் கூன் வீழ்ந்த முதுகைத் தொட்டுப்பார்த்தான்.ஒரு குடும்பத்திற்காக உடலின் வடிவமே மாறிப்போயிருந்தது.வயிற்றுப்பசிக்காக உடல் மாறிப்போனது அவனுக்கு எந்த அவமானத்தையும் தரவில்லை.பிறருக்காகக் களப்பலி ஆவதை சந்தோஷமாக ஏற்றுப் பிறருக்காகத் தன்னை மாற்றிக்கொண்டே வாழும் மனிதர்கள் எப்பொழுதும் தன் தலையை நிமிர்த்தாமல் செல்வது ஒன்றும் புதிதல்ல. செங்கேணி கூன் முதுகோடு கீழே வீழ்ந்தான்.தூக்கி அணைக்க சில கைகள் வருமா எனப் பார்த்து ஏங்கியது அவனது கண்கள் திறந்தவாறே.முதலாளி அவனைத் தொடவில்லை.

வாடா ஆஸ்பத்திரிக்குப் போகலாம் எனக் குரல் எழுப்பிய சின்னையாவிடம்  ஆண்ட, “நான் போய்விட்டாலும் பரவாயில்லை,அவனுங்க பேர்ல புகார் கொடுங்க…அப்புறம் என் பொண்னுக்குப் பேரன் பொறந்திருக்கான் ஆண்ட,அவன் பேரு செம்மிலிங்க.

செம்மிலிய வேலைக்கு வைச்சுகிங்க” என்று வாய் குளறியது.மாட்டு வண்டியில் சில ஆட்களோடு செங்கேணியை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு பின்னால் வண்டியில் புறப்பட்டார் சின்னையா. திண்ணையில் வெற்றிலையை இடித்து மென்று துப்பினாள் பொற்கலை ஆத்தா.பூமியெங்கும் கறை படிந்துவிட்டது.செம்மிலியின் குரல் மாட்டுத் தொழுவத்தில் கேட்ட ஆரம்பித்தது.


 ப.தனஞ்ஜெயன்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.