வல்லினம் 20 - கோபிகை!!


 மாமரத்தில் அணில்கள் ஒன்றையொன்று துரத்திபடி ஓடும் ஒலி ஆரபியை கண்விழிக்கச் செய்தது. கண்விழித்தவளின் நினைனவுக்குள் முதல்நாள் சின்னஅண்ணன் போனில் சொன்ன விடயங்கள்தான் திரும்ப திரும்ப ஒலித்தபடி இருந்தது. 'இந்த வாழக்கை தான் எப்படி மாறிப்போய்விட்டது?' கடவுளே!!

அண்ணா, பொத்தி பொத்தி வளர்த்த குழந்தை பகலவன், கடைசியில் இப்படி ஒரு நிலைமையா, போதைப் பொருள் பாவித்தாக கைது செய்யப்படும் அளவிற்கு? அகிலினி கூட இந்த அளவிற்கு போவாள் என நினைக்கவில்லையே, 

'எல்லாவற்றிற்கும் அண்ணி கொடுத்த செல்லம்தான் காரணம்'  என்றாலும் இந்த நேரத்தில் குறைசொல்லவோ, அப்படி நினைக்கவோ அவளால் முடியவில்லை. அண்ணிக்கோ அண்ணனுக்கோ பிள்ளைகளை யாரும் ஏதும் சொன்னால் பிடிக்காது, அவர்களோடு இருந்த நாட்களிலேயே, அவள் அண்ணனிடம் 'பிள்ளைகளை கொஞ்சமேனும் கண்டியுங்கள்' என ஒருநாள் சொன்னதை அண்ணி கேட்டுவிட்டு, எவ்வளவு சண்டை? எவ்வளவு பிரச்சினை? 

அண்ணிக்கு சகோதரர்கள் எல்லோரும் வெளிநாட்டில், காசுக்கு குறைச்சல் இல்லை, பிள்ளைகள் இருவருக்கும் காசுக்கஸ்ரமே தெரியாது, சாப்பிடுவதெல்லாம் பீட்சாவும் கொத்தும் பர்கரும் தான். உயர்தரம் படிக்கும் போதே அப்பிள் போன், சாம்ஸங் போன் என்று போட்டிக்கு வாங்கினார்கள், 

அப்படி பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பதில் அண்ணிக்கு ஏக சந்தோசம். மற்றவர்களிடம் பெருமை பாராட்டாமல் இருக்கமுடியாது அவவால்....இப்போது எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது, சற்றே கோபம் வந்தாலும் ஒரு மனம் அண்ணிக்காக இரங்கியது. 'பாவம் அண்ணி,'  எந்த தாயும் தன் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்து செய்யவேண்டும் என்றுதானே ஆசைப்படுவார்? அண்ணி மட்டும் என்ன விதிவிலக்கா? 


'ஏனோ, பகலவனை உடனே பார்க்கவேண்டும் போல' மனம் பரபரத்தது அவளுக்கு. ஆரபி தடுப்பில் இருந்து சென்றபோது, பகலவனுக்கு பத்து வயது, அகிலினிக்கு எட்டு வயது, பத்து வருடங்களாக அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள், அத்தை என்றாலும் பல பொழுதுகளில் தாயாகவே இருந்திருக்கிறாள். 


அண்ணி, 'கூட்டம், கலியாணவீடு, மரணவீடு, அந்தியேட்டி, துவசம்,  என்று ஒன்றும்விடாமல்போய்விட அவள்தான் பிள்ளைகள் இருவரையும் பார்ப்பது, அவர்கள் இருவருக்கும் என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதெல்லாம் அவளுக்குத்தான் தெரியும். அவர்களும் சின்ன வயதில் அவளிடம் பசைபோல ஒட்டிக்கொண்டவர்கள்தான். 

'வளரவளர அவளது கண்டிப்பு பிடிக்காமல் போய்விட, அப்படியே விலகிவிட்டனர். அண்ணி விலக்கிவிட்டா என்றுதான் சொல்லவேணும்....' 'முன்னரெல்லாம் வீட்டிலும் பள்ளியிலும் எவ்வளவு கண்டிப்பு? யாரும் எதுவும் சொன்னதில்லை, இப்போது, வீட்டில் தண்டித்தாலும் கேட்பதில்லை, ஆசிரியர் கண்டித்தாலும் , உடனே மனித உரிமையில் முறைப்பாடு....'வீடு தண்டிக்காத பிள்ளையை வீதி தண்டிக்கும்' என்பது எத்தகையதொரு உண்மை. அகிலினிக்கு பேஸ்புக் பிரச்சினையாம், வரைமுறையற்ற கதைபேச்சு வாழ்க்கையை பாழாக்கிவிட்டிருக்கிறதே, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அண்ணன் தேம்பி தேம்பி குழந்தை போல அழவும் ஒருகணம், ஆரபி பதறித்தான் போய்விட்டாள். 


'பெரியப்பாவும் சித்தப்பாவும் அருகில் இருக்க வளர்ந்திருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? அண்ணன் என்றாலும் ஓரளவு பரவாயில்லை, கோபம் வருவது குறைவு, தம்பி, 'கட்டிவைத்து உரித்துவிடுவான்' என நினைத்தாள் ஆரபி. அண்ணன்தான் வரமுடியாத தூரத்திற்குப் போய்விட்டார், ஆனால் தம்பி? சிறைக்கம்பிகள் அவனுக்கு எப்போது விடுதலை கொடுக்கப்போகிறதோ, அவனுக்காக பார்த்துப் பார்த்து சமைத்துப் பரிமாறும் நாள் எப்போதோ, எண்ணியதும் மனம் கனத்துப் போனது ஆரபிக்கு, 


தம்பி வெற்றிக்கு அவளென்றால் உயிர், வீட்டிலிருந்த காலங்களில் 'அக்கா...அக்கா...' என அவளையே சுற்றிக்கொண்டிருப்பான். கடைசி நாட்களில் கூட, அடிக்கடி அவளை விசாரித்தபடிதான் நிற்பானாம். ஆனால் இந்த பத்து வருசத்தில் ஒருமுறை கூட அவனைப்பார்க்க அவளால் போகமுடியவில்லை. வீட்டில் இருந்தபோது வசதியிருந்தது, அண்ணன் அப்பப்போ தரும் காசை சேர்த்து வைத்திருந்தாள். ஆனால், அண்ணியின் வீண் வாதங்கள், சின்ன அண்ணனையோ, அவளையோ போகவிடாமல் செய்துவிட்டது. இங்கு வந்தபிறகு, தன் தம்பி சிறையில் இருப்பதையே அவள் சொல்லவில்லை. நீண்ட பெருமூச்சை வெளிவிட்டபடி அலைபேசியை எடுத்து சின்ன அண்ணனுக்கு அழைப்பை எடுத்தாள். தானும் பகலவனைப் பார்க்க வருகிறேன் என்பதைச் சொல்வதற்காக.....


தொடரும்...

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.