வாழ்க்கைத்துணை வரம்!!

 


உன்னை சரணடைந்தேன்

உன்னுள்ளே நான் பிறந்தேன்

என்னில் உறைந்திருந்தேன்

உன்னுள்ளே நான் கரைந்தேன்

கண்கள் இமையை விட்டு

 உன்னையே நம்பி நிற்க

சுவாசம் காற்றைவிட்டு 

உன்னையே தேடி செல்ல

தாயாக மாறிப் போனாயே

வேராக தாங்கி நின்றாயே

அயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க

கண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை போலே

உந்தன் உள்ளே நான் இருப்பேனேதினம்தோறும் சாமிகிட்ட

தீராத ஆயுள் கேட்டேன்

நீ பார்க்கும் பார்வை போல

பூவெல்லாம் பூக்க கேட்டேன்

நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்

நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்

உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்

உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்

காதல் என்ற சொல்லில் 

காதலே இல்லை என்பேன்

வாழும் வாழ்கை இதில் 

காதலாய் வாழ்வோம் என்பேன்

சொந்தங்கள் யாவும் ஆனாயே

சோகங்கள் ஆற்றி விட்டாயே

அடைக்காக்கும் தாய்குருவி

சிறகாகி நீ அணைக்க

முட்டை கூட்டின் ஓடு உடைத்து

முட்டிமோதும் குஞ்சை போல

தினமும் புதிதாய் நான்

பிறப்பேனே


மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட   கணவன்.......இச்செய்திதான் என்னை இந்த கட்டுரையை எழுதத்தூண்டியது. 


இல்லறம் என்பது இனிமையான பந்தம்,  புரிந்துணர்வில் தான் அந்த உறவு உயிர்ப்படைகின்றது. புரிதல் இல்லாத இல்லறங்கள் நீண்டு நிலைப்பதில்லை. அவை பாதியில் துவண்டுவிடுகின்றன. வாழ்க்கைத் துணை என்பது சாதாரணமானதல்ல, வாழ்வு முழுமைக்குமானது. 


இல்லற வாழ்வில் மனைவிக்கு கணவன் தூணாகவும் கணவனுக்கு மனைவி தாயாகவும் மாறுகின்றனர். உண்மையான இல்லறம் என்பது ஒளிவுமறைவுகளற்றது. ஒருவருக்கொருவர் எப்போதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரவணைப்பும் ஆறுதலும் கொடுக்கவேண்டியது. நோயுற்ற  அல்லது இயலாமைக் காலங்களில்தான் அவரவர் துணைகளின் அவசியமும் தேவையும் மற்றவருக்கு  முழுமையாகப் புரிகின்றது. 


எல்லா உறவுகளும் வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் எம்மைவிட்டு நீங்கிவிடுகின்றது. ஆனால் கணவன்- மனைவி உறவு மட்டும்தான் தொடர்ந்துவரும் உறவாகிறது. அதுதான் உயிர்ப்புள்ள உறவு. 


தற்போதைய காலகட்டத்தில் இல்லற பிரிவுகளும் வாழ்க்கைத்துணையே வாழ்வை முடித்துவைக்கும் அவலங்களும் கணக்கின்றி நடக்கின்றது. இதற்கு என்ன காரணம், எம் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் போக்கை நாம் மாற்றிவிட்டதா, அவர்களின் பண்பின் ஆழத்தை மறந்துவிட்டதா? 


தவறு,  ஆணிடம்தான், பெண்ணிடம்தான் என்று வரையறை செய்து சொல்லமுடியாது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதோடு தம் அன்பின் நிமித்தம் இந்த உலகத்தில் உயிர்ப்பெடுத்த குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் நினைத்தாலே இத்துன்பம் ஓரளவு குறைந்துவிடும். முடிந்தவரை ஒன்றாக வாழ எத்தனிக்கலாம், முடியாத போது, விலகி வாழலாமே தவிர கொலை செய்யுமளவிற்குச் செல்வது நியாயமே அற்ற செயல். 


குழந்தைகள் வராதவரைதான் கணவனும் மனைவியும் அவரவர் விருப்பு வெறுப்பு பற்றி சிந்திக்கவேண்டும். பிள்ளைகள் என்றானபின் தத்தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். விட்டுக்கொடுத்து போகும் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஓரளவு இருக்கவே செய்யும். 


மனதில் மெல்ல மெல்ல தோன்றும் வெறுப்பும் எரிச்சலும் உள்ளத்தில் புகைய,  உள்ளே கோபத்துடனும்  வெளியே சிரித்தபடியும்  வாழும் நிலைதான் இன்று பலரிடம் உள்ளது. அந்தகைய பந்தத்தில் ஒரு பற்றுக்கோடு இருப்பதில்லை. புரிந்துகொண்டால் விட்டுக்கொடுப்பது அத்தனை கடினமில்லை. ஒருவரை ஆழமாக உணர்தல் என்பது அவரது குணங்களோடு இயைதலே ஆகும்.  நீயா, நானா என வாழ்க்கை நடத்தாமல் நீயும் நானும் என புரிதலோடு வாழ்ந்தால் இல்லறம் என்ன வானமே வசப்பட்டுவிடும். கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.