வல்லினம் 27 - கோபிகை!!

 


குளித்து, சாப்பிட்டுவிட்டு அனைவரோடும் கதைத்தபடி அமர்ந்திருந்தான் கடல். அப்போது, கேட்ட மெல்லிய காலடி ஓசை, அவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை உண்டாக்கியது. 

கானகிதான் வந்துகொண்டிருந்தாள். காலையிலேயே கானகியுடன் அவர்களின் வீட்டிற்குச் சென்றுவிட்டிருந்த பாடினியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்தாள். தோற்றத்தில் ஓரளவு தந்தையை கொண்டிருந்ததனால்  அது சித்தப்பாதான்,  என்பது புரிந்துவிட, அப்படியே நின்றுவிட்டாள். வளர்ந்து பெரிய பெண்ணாக நின்ற பாடினியை கடலுக்கு அடையாளம் தெரியவில்லை. 

அத்தையின் ஒருபுறம் வந்தமர்ந்தவளை நன்றாகப் பார்த்தான். ஆரபிதான்....'தம்பி....இது யார் சொல்லு பாப்பம்....?' என்றாள்.

ஒருநொடி யோசித்தவன், ஆழமாய் பார்த்துவிட்டு, 'பாடினி' என்றான். 

எப்பிடிடா? தம்பியிடம் ஆச்சரியமாய் கேட்டார் சின்ன அண்ணன். 

'அதுதான் அண்ணியை அப்பிடியே உரிச்சுவைச்சிருக்கிறாளே' அவன் சிரிப்போடு சொல்ல, 'சித்தப்பா..' என்றபடி அவனருகில் வந்து கரம் பற்றிக்கொண்டாள். அப்போதுதான் திரும்பிவிட நினைத்து, நடந்த கானகியைக் கண்ட ஆரபி,

'கானு...ஏன் போறாய், வா....வந்து இரு....'என்றதும் வேறு வழியின்றி சங்கடத்துடன் வந்து ஆரபியின் அருகில் அமர்ந்துகொண்டாள். 

கானு....என்ற ஒற்றைச்சொல் வித்தகனின் மனதில் வினாக்களை எழுப்பியது....'கானகி என்பதன் சுருக்கம் கூட கானு என்பதாக இருக்கலாமே', 

ஆனால் அவளுடைய முழுப்பெயரை எப்படி அறிவதென்ற யோசனையில் பேசாமல் இருந்தான். வந்த அன்றே அவனது கடித வாசகியை சந்திப்பதென்பது சாத்தியமில்லையே என நினைத்தவன், 

'அவளாக இருக்குமோ, இதனால்தான்..மனம் கண்டபடி அடித்துக்கொண்டதோ,' என பலவாறாக நினைத்துக்கொண்டே அவளை நிமிர்ந்தும் பாராமல் மௌனமாக இருந்தான். 

கனத்த மௌனம் குடிகொண்டிருந்தது அந்த இடத்தில். ஆரபிதான் மௌனத்தின் ஆட்சியை மெல்ல முடித்துவைத்தாள். 

'கானு, இது யார் தெரியுமா, தம்பி, மகஸின் சிறைச்சாலையில் இருந்தான், நேற்றுத்தான் விடுதலை....நாங்கள் போய்ப்பாக்கவெண்டு இருக்க, அவனே வந்திட்டான்.' சொல்லிக்கொண்டிருக்க, அவசரமாய் நிமிர்ந்து அவனைப் பார்த்த கானகி, 

'கடலும் அந்த சிறைதானே, அப்ப இவருக்கு தெரிஞ்சிருக்கும்' என நினைத்துக்கொண்டே, . 'எப்படிக்கேட்பது' எனத்தவித்தபடி பேசாமல் இருந்தாள். 

'கேட்பதா, வேண்டாமா' என்ற மனப்போராட்டத்தில்,  தன் மனதில் பூட்டிவைத்துள்ள அந்த நேசத்தை, கால் விரல்களை உரசும் பூனையைப் போல அவள் நினைத்து நினைத்து இதம் கண்ட அந்தப் பெயரை, அவன் மீதான நினைவுகளை, வேறு யாரிடமும் கொட்டிவிட அவளுக்கு மனதில்லாமல் இருந்தது. எண்ணங்களில் நேரம் கரைந்து மடிய, 

அவன், 'சரி....கதையுங்கோ வாறன்,' என்றபடி எழுந்து சென்றுவிட்டான். 

அதற்குப்பிறகு ஒரு வாரமாக, ஆரபி வீட்டிற்கு வரும் சந்தர்ப்பம் கானகிக்கு கிடைக்கவில்லை. தோட்டத்தில் மிளகாய் பழம் பிடுங்கும் வேலை நடந்ததால், தாயோடு சேர்ந்து, தோட்டம், வீடு, என நேரமில்லாமல் சுழன்றுகொண்டிருந்தாள். 

கடலும் அவளைப்பற்றி யாரிடமும் கேட்கவில்லை, வந்ததும் வராததுமாய் பக்கத்துவீட்டுப் பெண்ணைப்பற்றிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம், அவனை மௌனமாக்கியது. 

நாட்கள் உருண்டோடின, கானகியும் பல்கலைக்கழகம் சென்றுவிட்டாள். அப்போதுதான் வித்தகனின் கடிதம் ஒன்று வந்திருந்தது. வாசிக்க நேரமின்றி காலையில் பையில் வைத்துவிட்டு, படிப்பு நேரம் முடியத்தான் எடுத்துப் பார்த்தாள். 


அன்புள்ள கானகிக்கு,

வித்தகனின் அன்பு வணக்கங்கள்....

ஒரு பெண்ணின் எழுத்துகளை நான் இந்த அளவிற்கு நேசிப்பேன் என்றோ, அதற்காக காத்திருப்பேன் என்றோ நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் காத்திருக்கிறேன். 

உங்கள் கடிதம், எனக்கு எவ்வளவு ஆறுதல் தந்தது தெரியுமா, அதை வெறும் வார்த்தைகளில் கணக்கிட்டுவிட முடியாது, தாயன்பை தருவதென்பது சாதாரண விடயமல்ல, அப்படி ஒரு வார்த்தையைச் சொல்கின்ற பெண், நிச்சயமாக சாதாரண பெண்ணாகவும் இருக்கமுடியாது. 

'தேவதைகள்தான் பெண்களாக மண்ணில் பிறக்கிறார்கள்' என என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நீங்களும் ஒரு தேவதை என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. ஆனால், சற்று அதிக அன்பின் சாயலான தேவதைபோல என எண்ணிக்கொண்டேன். இது ஒன்றும் வார்த்தை வர்ணிப்பிற்காக எழுதிய வரிகள் அல்ல, என் மன ஆழத்தில் உதித்தவை...நன்றாக படியுங்கள், கல்வி ஒன்றுதான் எம்மிடம் தற்போதுள்ள சொத்து, அதனை எப்போதும் கைவிடக்கூடாது...

அன்புடன் 

கடல் 

என முடித்திருந்தான். 

தொடரும்.....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.