இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள்-மனோ


 முன்னணியில் இருந்த எமது நாட்டின் வீழ்ச்சிக்கு அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்து வருகின்றமைதான் காரணம்  என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார். அவரது ஊடக அறிக்கையிலேயே் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். முன்னணியில் இருந்த எமது நாட்டின் வீழ்ச்சிக்கு அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்து வருகின்றமைதான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்விட்டர்  பக்கத்தில் இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டில், சிங்கள – பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம்.

உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான “இல்லை”களின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம். இப்போது இந்நாடு, இலங்கை தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது என தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது.

எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன். இன்று இந்நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950 களில், இந்நாட்டின் வெளிநாட்டு செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது.

கடன் கொடுக்க கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கிறோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்தமைதான். தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள்.

சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா வியட்னாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம். நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டி பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாக கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவை பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972ல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்தி போகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

இன முரண்பாடுகள், யுத்தம், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு செலவாணி பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகிறேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலி தேசியவாதம்தான் என்பதை உணருங்கள்.

முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.