ஆசையோடு -என் ஆருயிர் தோழிக்கு ..!

 


சுண்டிக் குளத்தில் நாம் இருவரும் சுதந்திரமாய்  உலாவந்த

சுகமான நாட்களை -மனச்சுமையோடு எண்ணிப் பார்க்கின்றேன்...


அந்திப்பொழுதில் இருவரும்

அருகருகே அமர்ந்து

 அமைதியான கடலின் அழகை ஆனந்தமாய் ரசிப்போமே...


இடைவிடாத வேவு பயிற்சியின் இடைவேளைகளில் எல்லாம் 

இன்புற்று மகிழ்ந்தோமே

 இன்சுவை நாவற்பழத்தை 

 இரசித்து சுவைத்தோமே...


நித்தம் நித்தம் சண்டைகள் பெரிதாகி யுத்தங்கள் திசை மாறியபோது

 எத்தனை நாள் பசி பட்டினியோடு நித்திரையின்றி புத்தனின் வழி வந்தவரை  எதிர்த்து  நின்றோம் முனைப்போடு...


காயப்பட்ட வலியோடு  போராடுகையில் கலங்கிடாது என்னையும் மண்ணையும் இணைத்தே காப்பாற்றிய விலையேறப் பெற்ற வீரப்பெண்அல்லவா நீ...?


உன் நினைவுகளின் சுமைகளை உவகையுடன் சுமக்கின்றேன் நான்

 உலகில் நீ எங்கே இருக்கின்றாய் ?

 கலக்கத்தோடு ஏங்குகின்றேன்...


நினைவுகளின் நிதர்சனங்கள்- தினம் 

நெஞ்சத்தை நிறைக்குதடி

தூரக் கடற் பயணத்தில்

 துடுப்பு இழந்த படகாக

 துடிக்கின்றேன் உன்னைக் காண...


வருடங்கள் 12 கடந்தும் 

வஞ்சியவள் முகம் காண

 வாஞ்சையுடன் வாடுகின்றேன் 

 வலியோடு  தினம் வாழ்கின்றேன்...


இதயத்தில் ஏராளம் ஆசைகள் உதயமாகிறது உன்னை நினைத்து இன்பத்தில் இணைந்து இருந்து துன்பத்தில் துணை இருந்து 

தோள் கொடுத்த தோழமையே...


தோள் சாய்ந்து துயர் பகிர

 தோழி நான் ஏங்குகின்றேன் 

 துயரோடு வாடுகின்றேன்

 துடிக்கின்றேன் உனைக் காண...


இருக்கின்றாயா..? இல்லையா..? என்றே அறிந்திட முடியாத பாவியாய்..!

 அலைகின்றேன் தவிப்போடு 

 பறவையாய் நான் மாறி உனைத் தேடி பறந்திடத்  தோணுதடி...


            💕அருந்தமிழ்💕

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.