இடைநிறுத்தப்பட்டது கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம்!


முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபகஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் இதுகுறித்து, விசேட குழுவொன்றை அமைத்து ஆராயவுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கான புதிய கணக்காய்வாளரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை குறித்துப் பேசப்பட்டதுடன் எல்லை நிர்ணய ஆணைக்குவின் அறிக்கை வெளியான பின்னர் எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் காணி நிர்வாகத்தினைப் பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தவும் அமைச்சர் பணித்துள்ளதுடன் இதுகுறித்துக் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாது என சமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதனைவிட, முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இந்நிலையில், குறித்த திட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த பிரச்சினைகளுக்கு அமைச்சர் சாதனமான பதில் வழங்கியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.