அகதியின் நாட்குறிப்பு 5 - குடத்தனை உதயன்!!

 


ஆதியின் மனதிற்குள் ஊர் நினைவுகள் புகுந்து கூத்தாடிய  மௌன இடைவெளியில்.. இருவரும் அந்தப் பகுதியிலிருந்த ஒருவழிப் பாதையூடாக  ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொன்டிருந்தனர்.

           ஆதியின் பார்வை அந்த வழியில் ஆங்காங்கே சிறு குன்றுகளாகவும், சமதரையாகவும் விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் பாதி ஆடை அவிழ்த்துக் களவாடப்பட்டது போன்ற நிர்வாணத் தோற்றத்தில் வளர்ந்த மரங்களும், சிறிய மரங்களுமாகக் காட்சியளித்தன. அதையொட்டி சிறிய நடைபாதை எட்டுப் போட்டது போன்று விரிந்து சென்றன.

              அந்த நடைபாதையில் மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டது. அவர்களுடன் வந்த வளர்ப்பு நாய்கள் சில அக்குன்றுகளில் ஏறி விளையாடுவதும், திரும்பி வருவதுமாக இருந்தது. 

 ஆதி அக்காட்சியைப் பார்த்ததும் மெய்சிலிர்த்துப் போனான்...!

ஊரிலுள்ள “நாய்கள்”..?  ம்......ம்........

என மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான்.  

    ஆனால் இங்கு... ஒரு பிள்ளையின் மீது காட்டும் அன்பை விட வளர்ப்பு மிருகங்களில் அவர்கள் காட்டும் பரிவு , அதனுடன் பேசும் குரலின் ஓசையிலிருந்து புரிந்து கொள்வது அவனுக்குக் கடினமாக இருக்கவில்லை.

 ஆதிக்கு மரம், செடிகள், வளர்ப்பு மிருகங்களென்றால் போதும் தன்னையே மறந்து விடுவான்.

****************************************************

    ஆதிக்குக் கருப்பனின் நினைவு வந்தது. இப்படித்தான் ஒரு காலைப் பொழுதிற்கும், மதியப் பொழுதிற்கும் இடைப்பட்ட வேளையில் கருப்பனையும் கூட்டிக் கொண்டு காட்டுப்பக்கம் சென்றான்.

     அந்த நடுக்காட்டில் மணற் கும்பியருகில் நீண்ட கிளை பரப்பி...... நன்றாகக் குருத்துப் பச்சையெறிந்து, கைகளை நீட்டி வானத்தை அழைப்பது போன்று ஒரு வீரை மரம் நின்றது.

           அதன் தோற்றம் சொல்ல முடியாத உணர்வலைகளை ஆதியின் மனதிற்குள் சீண்டி சிலிர்ப்பை ஏற்படுத்தின. .

     கருப்பனும் , அவனும் பிடித்த இரண்டு முயல்களைப் பாடாகப் பிணைத்து நீண்டிருந்த மரக்கிளையில் தொங்க விட்டான். கருப்பனை அதில் இருக்கச் சொல்லி விட்டு, மணலிலே விழுந்து கிடந்த  குச்சிகளைக் காலால் தட்டி விட்டுத் தலையில் கட்டியிருந்த துவாய்த் துண்டை அவிழ்த்து, விரித்து , அந்த வீரை மரத்தின் குமரி போன்ற அழகை ரசித்தவாறு நீட்டி நிமிர்ந்து படுத்தான் . 

 மெல்லிய ஜில்லென்ற காற்று உடலுக்குச் சொல்ல முடியாத சுகத்தை வாரி அள்ளிக் கொடுத்து கடந்து போனது.

        கருப்பன் அண்ணாந்து தொங்கிக் கொண்டிருக்கும் முயல்களைப் பார்ப்பதும்...... ஆதியின் கால்களைத் தனது மூஞ்சையால் தேய்ப்பதும், அனுங்கி.. அனுங்கி.. வாலை ஆட்டி... ஆட்டி... அவனை கொஞ்சுவதுமாக இருந்தது.

           வேட்டையாடிய களைப்பு, வீசும் காற்றின் மந்தாரத் தழுவல் எல்லாம் சேர்த்து ஆதியின் கண்களைச் சொருகின.

   பேரமைதியான காட்டுக்கரையில் ஒரு சிறு சல.... சலப்பும் காற்றுடன் கலந்து வந்து காதுக்குள் புகுந்து விடும். 

    ஆதி தலைவைத்துப் படுத்திருந்த நேரெதிரேயுள்ள பற்றைக்குளிருந்து ஒருவித வித்தியாசமான சிணுங்கல், சருகுகளின் சரசரப்பு அவன் காதில் வந்து விழுந்த வண்ணமிருந்தன.

 கருப்பன் தனது காதுச்செவிகளை விரித்து வைத்து எழும்புவதும், திரும்புவதுமாக இருந்தான்.

ஆதி மெதுவாக எழும்பும் போது, கருப்பனும் எழுந்து கொண்டான். அவனை தலையிலே தட்டி, வாயில் விரலை வைத்து.

உஷ்.....

என்று மெல்லிய சத்தத்தைக் காட்டி அவனை அடக்கினான்.

முனுகலை அடக்கி வாலைச் சுருட்டிக்கொண்டு ஆதியின் முகத்தையே பார்த்தாவாறு இருந்தான் கறுப்பன்.

   வேட்டை நாய்களுக்கு இருக்கும் விசேட குணங்களுடன் சேர்ந்து கறுப்பனிடம் அதிவிசேடமான குணங்களும் இருந்தன. அதில் இதுவும் ஒன்று.

ஆதி மெதுவாக எழுந்து சென்று மரக்கிளைகளை விலத்தி எட்டிப் பார்த்தான். ஆதியின் மனதில் ஒருவித பதட்டம், வெட்கம், ஆர்வக் கோளாறு, போன்ற உணர்வுகள் தோன்றின. என்ன செய்வதென்று அறியாமல் பற்றைக்குள் வைத்த கண்களை எடுக்க மனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது மனதும் உடலும் ஒரு சேர சண்டை போட்டுக் கொண்டதென்பது  என்னவோ உண்மைதான்.

 மெதுவாகத் திரும்பி வந்தான் . பாழாய்ப் போன மனது பற்றையைத்தான் நாடியது. கறுப்பனைப் பார்க்கிறான்.. அவனும் ஏதோ விளங்கியவன் போன்று பார்க்கத் துடிப்பதையறிந்து மீண்டும் அவனை அடக்கினான்.

     அன்று செல்லனும், வள்ளியும் இயங்கு நிலையிலிருந்த காட்சி இன்று தொலைதூர தேசத்திலும் மின்னல் வெட்டிச் சென்றது. இருவரும் தம்பதிகள் தான், ஆனால்...

ஏன்...... இப்படி..?

என்ற கேள்வி இன்றளவும் அவன் மனதில்...!

************************************************************

மாமா நகர மண்டபத்திற்கு முன்பு ஒருவருடன் கதைத்துக் கொன்டிருந்தார். அருகில் சென்ற அவனைப் பார்த்து அவர்..

“ இவரா மருமகன்..? “

என வினாவினார்.

 அவர் போட்டிருந்த குளிர்க் கோட்டு, அவரது பானைபோன்ற வயிறு இன்றோ நாளையோ வெளியில் குதித்து விடுவேனோ என்ற கேள்விக் குறியிட்டு நின்றது.

அவரின் முகத்தில் படித்த ஒரு சாந்தம் தழுவியது.

அவரிடமிருந்து விடைபெற்று சிறிது நடைதூரத்தின் பின்பு மாமா சொன்னார். 

“இவரை ஊசி மாமா என்று தான் கூப்பிடுறனாங்கள்...”

என்றவரை திரும்பிப் பார்த்தான்.

அவரின் தோற்றம் ஊசி மாதிரியா இருக்கு....

என மனதிற்குள் நினைத்துச் சிரித்தான்.

ஒவ்வொருத்தரின் செயற்பாட்டை வைத்துக் காரணப் பெயர் வைப்பதில்...

 “அப்ப...ப்பா எங்கட ஆட்கள் கில்லாடிகள்தான்.” 

அவனின் நினைவுகளிடையே மாமா சொன்னார் ,

அவருக்கு சர்க்கரை வியாதியாம். அதனால் இன்சுலின் ஊசி போடுகிறவராம் .....,  மாமா  மேலும் சொன்னார். எங்களது ஆசியன் சாமான்கள் வீடு வீடாகக் கொண்டு சென்று விற்பனை செய்கிறவராம்.”

�“அவரின் தயவால் எங்களின்  ஊர்ச் சாப்பாடு சாப்பிடுகிறம்... என உள்ளார மகிழ்ச்சி கொண்டான் ஆதி.

 “எங்கடைககள்” முட்டையில மயிர் பிடுங்கிறதுகள் தானே....

ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சலிப்புடன் மாமா கூறினார்.

“ம்  ம்

எங்கட சனம் எதில் தான் தன் நிறைவு கொள்ளினம்..

என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.”

   நகர மண்டபத்தில் அவனது பதிவை உறுதிப்படுத்திய பின்பு,  இருவரும் நகருக்குள் நுழைந்தனர்.  நடையின் போது இடையிடையே மாமாவைப் பார்த்தான்.  அவரின் பேச்சும், சிரிப்பும் அமைதியின் உறைவிடம் போன்று தோன்றியது.

“பாவம் வஞ்சகமில்லா மனிதன் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டும்.. என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்”

*********************************************************************

“ஆதிக்குப் பதினொரு வயதிருக்கும், மாமாவுக்கு வருத்தமென்று   யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தி என்ற பெயரில் ஒரு வைத்தியசாலை இருந்தது. அங்கு மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் அம்மம்மாவும், சின்ன மாமாவும் காட்டிக்கொண்டு வந்தவை.”

அம்மம்மா எவ்வளவு கவலையாக இருந்தாலும் “மனிசி காட்டிக்கொள்ளாது”. ஆனால் தனிமையில் இருந்து யோசிப்பா.  “அன்று இரவு அம்மா..

“டேய் “தம்பி..

வா அம்மம்மா  வீட்டை  ஒருக்கால் போட்டு வருவம்.” 

 “அவனுக்கோ” விளையாடிய அலுப்பு ஆளைவிட்டால் போதுமென்றிருந்து.

இப்ப என்ன அவசியம்....?

உனக்குப் பின்னேரம் போகத் தெரியாதோ.

என எரிஞ்சு விழுந்தான்.”

“குட்டிமாமாவுக்கு சுகமில்லையென்று “ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போனவை.. என்னவெண்டு கேட்டுக் கொண்டு வருவம்.”

அவன் மறு பேச்சுப் பேசவில்லை.. சரி வாறன் என்றான்.

    எங்களூரில் அப்போது மின்சாரமில்லை. இரவு நேரம் வெளியில் போவதாயின் லாம்பு வெளிச்சத்தில் தான் போவார்கள்.  அதன் பொன்மஞ்சல் நிறம் இருளைக் குடைந்து வெண் மணற்பரப்பில் குவியும் போது பார்ப்பதற்குப் பல சித்திரங்கள் மணற்பரப்பில் வரைந்து கொண்டு போகும் காட்சி மிகவும் உன்னதமாக இருக்கும்.

    அதே நேரத்தில் வீதி முழுவதும்.. கும்..! என்ற இருள் பசை படிந்தது போன்று அப்பியிருக்கும். வீதி ஓரத்தில் ராட்சத உருவமாக உயர்ந்து நிற்கும் பனைமரங்கள்,  எங்கள் பின்னால் கரிய உருவங்கள் தொடர்ந்து வருவது போன்ற பிரமையை உண்டு பண்ணி மனப்பீதியை உண்டு பண்ணும்.  ஆனாலும் மனப்பீதியைக் காட்டிக் கொள்ள மாட்டம்.

ஆதி கேட்டான்..

எண அம்மா..

“உந்த வேப்ப மரத்தில் இரவு பேய் உலவுவதாக அப்பு சொல்கிறவர் உண்மையோண..”

 டேய்...

உன்ர கொப்பு குடிச்சுப் போட்டுக் கதைக்க கதையில்லாமல் சும்மா அலம்புவார்.. பேயுமில்லை , பிசாசுமில்லை பேசாம வா.”

 ஆதிக்குத் தெரியும் அம்மா பேய் என்ற பெயரைக் கேட்டதும் பயந்து “போனா என்று.” 

    அம்மம்மா வீட்டை எல்லோரும் முற்றத்தில் இருந்தார்கள். லாம்பு வளையில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சிறு வெளிச்சத்தினை ஊடறுத்து அவர்களின் வீட்டு முற்றத்தில் ஒரு மௌனமான வெளி உறங்கிக் கொண்டிருந்தை ஆதி உணர்ந்து கொண்டான்.

   அம்மம்மா தனது பெருவிரலாலும்,  ஆட்காட்டி விரலாலும் தனது உதடுகளை இழுத்து,  இழுத்து, விட்டுக் கொண்டிருந்தா. “அம்மம்மா அப்படி இருந்தால் மற்றவருடன் கதைக்க முடியாத கவலையில் இருப்பதான வெளிப்பாடு.”

 அம்மா கேட்டா.. டாக்குத்தர்... என்னவாம்...?

என்னத்தைச் சொல்கிறது கொழும்பு கொண்டு போய்த்தான் ஒப்பிறேசன் செய்ய வேண்டுமாம்.

சொல்லும் போதே மனிசி அழத்துவங்கி விட்டா.”

    அவனுக்கு அம்மாவில் பயங்கரக் கோபம் வந்தது. வாயை வைத்துக் கொண்டிராமல் ஏன்... இப்ப உந்தக் கேள்வியைக் கேட்டவா..? என்று.

அம்மா தலையைக் கவிழ்ந்து கொண்டா. அவன் அம்மம்மாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான். ஆனாலும்  மனிசியால் அழுகையை அடக்க முடியவில்லை”.

அம்மம்மாவின்  கைகள் ஆதியின் தலையை வருடிய படிதானிருந்தன. அங்கு கனத்த மௌனம் இருளோடு இருளாக உலாவியது.

சிறிது நேரத்தின் பின்பு சின்ன மாமா தான் எல்லோர் மௌனத்தையும் கலைத்தார். “

“அது சின்னதொரு “ஒப்பிறேசன்”

துடையில் ஒரு ஓட்டை போட்டு வயர் விட்டுப் பார்க்கிறதாம்.. நீங்களும் குழம்பி, சும்மா இருக்கிறவனையும்  பயமுறுத்தாதையுங்கோ என்றார்.

குட்டி மாமாவைக் கொழும்பு கூட்டிச் சென்ற நாட்களில்.. ஆதி இரவுகளில் திடுக்கிட்டு கத்திக்கொண்டு எழும்பி, எழும்பி அழுவான்.

அன்ரிதான் அவனுக்கு ஆறுதல் சொல்லுவா. அப்படி அவனின் பல இரவுகள் கழிந்தன.

ஆனால் இன்று..  பல ஆண்டுகள் கடந்து அவனது மனக்கிடக்கையில் கிடந்த அந்த நினைவுகள் ஆற்று வெள்ளம் போன்று மடைதிறந்து ஓடியது. அந்த நினைவுகளுடன் அருகில் நடந்து கொண்டிருந்த மாமாவைப் பார்த்தான். அவரும் ஏதோ யோசனையில் நடந்து கொண்டிருந்தார்.

************************************************************

ஆதிக்கு நடேசன், செல்லப்பாவின் நினைவு மனதில் தோன்றியது. செல்லப்பா எப்பொழுதும் இரட்டை அர்த்தத்தில்தான் கதைப்பார். ஆனால்.. நாகரிகமான வார்த்தைகளைத் தெரிவு செய்து. 

ஆதிக்கு அங்குள்ளவர்கள் நாளடைவில் பழக்கமானார்கள். நடேசனும் ஒருமாதிரி ஆதியிடம் வந்து சேர்ந்து விட்டான். 

     ஒரு மனிதன் மனதளவில் சந்தோசமா இருக்கும் போது அவனின் பேச்சும் மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தும் பாங்கும் எப்படியிருக்கும் என்பதை நடேசரைப் பார்த்துத்தான் ஆதி தெரிந்து கொண்டான்.

          அந்த விடுதியில் காலை ஜேர்மன்மொழி வகுப்பு நடைபெறும். மதியச் சாப்பாட்டின்     பின்பு ஒவ்வொரு அறையாகச்  சென்று அரட்டையடிப்பது தான் அவர்கள் பொழுது போக்காகக் கழிந்தது.

 நடேசன் “சகோதரம் அண்ணையின்” அறையில் தங்கினார்.

ஒரு நாள் நடேசன் செல்லப்பாவுடன் கதைத்துக் கொண்டிருக்கையில் கதையோட கதையா  கேட்டார்...

“அண்ண....

ஏன் என்ர ஆளைச் சகோதரம் என்று கூப்பிடிகினம்?”

அட அதை ஏன் கேக்கிறியள்... !

ஒரு எக்காளமிட்டு சிரிப்புச் சிரித்து ஓரு ஐந்து சதம் பெறுமதியில்லாத கதையையும் மனிசன் உயிர்ப்பித்துச் சொல்லும்.

கேக்கிற எங்களுக்கும் சுவாரிசியம் தான். ஆனால் பின்னாடி  அட “உதுக்கே” மனிசன் இவ்வளவு “அக்சன்” போட்டவர் என நினைக்கத் தோன்றும்.

“உவன் வந்த புதிசில நின்டவன் போனவன் எல்லாரையும் சகோதரம், சகோதரம் என்று தான் கூப்பிடுவான்.. அப்ப பெடியள் சும்மா இருப்பாங்களோ,  சகோதரம் என்று பெயரையே வைத்து விட்டார்கள்.”          

!!!

ஆதியும், நடேசனும் ,செல்லப்பாவின் சாப்பாட்டை ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.

 செல்லப்பாவுக்கு சமையலில் அப்படி ஒரு கைப்பக்குவம். பெருஞ்சீரகம், உள்ளி , போன்றவற்றைக் கறிக்குள் போடும் போது  இது என்னென்ன பலன்களை உடலுக்குத் தரும் என்ற விபரத்தைச் சொல்லித்தான் கறிக்குள் சேர்ப்பார். 

ஆனால்... முருங்கைக்காய்க் கறி வைக்கும் போது முழு விபரத்தையும் சொல்ல மாட்டார். கதையைத் துவக்கிப் போட்டு இடையில் விட்டு விடுவார் . “நடேசனும் செல்லப்பாவும் விழுந்து, விழுந்து “ சிரிப்பார்கள்.

ஆதிக்கு  எதுவும்  புரியாமல் முழியைப் பிரட்டுவான். என்ன என்று கேட்டால்...  

“கொம்மான் வேலையால் வரக் கேள் “

என்று பதில் வரும். அவனும் அத்துடன் விட்டு விடுவான்.

நடேசன் பல்கலைக்கழக கதைகளைக் கால் வைத்துக், கை வைத்துச் செல்லப்பாவிடம் சொல்லிச் சொல்லி  சிரிப்பார். இரண்டு பேரும் சிரித்துச் சிரித்தே மதியச் சமையலை முடித்துப் போடுவார்கள்.

செல்லப்பா கேட்டார்..

“தம்பி  நடேசா உனக்குக் காதல் ஒன்றுமில்லையே.”

 ஆதி சிரித்தவாறு...

அடிறா.... சக்க ...

இது தான் கேள்வி எனக் கத்தினான். “

“நடேசன் ஒரு பக்கமா தலையைக் கவிழ்ந்தவாறு.. ஓசிக் கதை கேட்பதென்றால் அண்டமெல்லாம் விரியுமே... “..

ஆதியைப் பார்த்து சொன்னார். 

பிறகு திருப்பி நடேசன் ஒரு போடு போட்டார்.

ஏன் செல்லப்பா ...அங்க போவான்..?

இடையில வரேக்க மும்பாய்,  பிராங் போட்டில நடந்த கதையெல்லாம் இருக்கு .... “

ஒரு சிரிப்புச் சிரித்தவாறு ஆதியைப் பார்த்தான். ஆதிக்குச் சிரிப்பு மறைந்து நெஞ்சு டி... க்.. என்றது. 

நடேசன் ஓரளவு பாடுவார் எனத்தெரியும். பாவி குரலெடுத்துப் பாடினான் ...எனக்கொரு “காதலி இருக்கின்றாள் “என்ற பாட்டு நாங்கள் இருவரும்   அப்படியே மெய்சிலிர்த்துப் போனம்”. 

காதல் அனுபவமில்லாத, பலமுறை பாடிப்பார்க்காத  ஒருவரால் அப்படி உயிரின் ஜீவன் துடிக்கிற மாதிரிப் பாட முடியாது. செல்லப்பா நடேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்.......

 நடேசன் தன் கதையைச் சொல்லத் துவங்கினான்.

தொடரும்......Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.