வங்கிகளில் கடன் பெற்றோருக்கு சலுகை!

 


கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.


இந்த விடயம் மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையொன்றின் மூலம் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, செயற்பாட்டு பிரிவு மற்றும் செயற்பாடற்ற பிரிவு ஆகியவற்றின் கீழான கடன் வசதிகளை ஒத்திவைத்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகிய சலுகைகளை வழங்குமாறும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் இழப்பு, வருமான இழப்பு, விற்பனை இழப்பு அல்லது வணிகங்கள் மூடப்படுதல் ஆகிய நிதி ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ள தனிநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, வங்கிகள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


இதன்படி, அடிப்படைக் கடன் பெறுமதி, வட்டி அல்லது இவை இரண்டையும் அறவிடுவதை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை வங்கிகள் ஒத்திவைக்க முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளரின் கடன் மீளச் செலுத்தும் திறன் மற்றும் அவரது நிதித்தன்மை வலுவடைவதற்கு தேவையான காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, கடன் வசதிகளை நீண்ட கால அடிப்படையில் மீளக் கட்டமைக்கவும், வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, வங்கி மற்றும் கடன் பெறுநர் ஆகிய இரு தரப்பினரும் தற்போது காணப்படும் குறைந்த அளவிலான வட்டி வீதங்களுக்கு அமைய, ஏற்றுக் கொள்ளக்கூடிய வட்டிவீதமொன்று தொடர்பில் இணக்கப்பாட்டை மேற்கொள்ள முடியும் என, மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், செயற்படு மூலதனம், அடகு வசதி, தற்காலிக மேலதிகப் பற்று மற்றும் குறுகிய கால நிதி வசதிகள் உள்ளிட்டவற்றுக்கான மீள் செலுத்துகை கால எல்லையை வங்கிகள் நீடிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


வாடிக்கையாளரின் கடன் மீளச் செலுத்தும் திறன் உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு, மே 15 ஆம் திகதியின் படியான செயற்பாடற்ற பிரிவின் கீழான கடன் வசதிகளையும் நீண்ட காலத்திற்கு மறுசீரமைக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய, கடன் பெறுநர்களின் கோரிக்கைக்கு அமைய, கடன் தவணைக் கட்டணங்களை மீளச் செலுத்துவதற்கு, மேலதிக கட்டணங்கள் இன்றி 10 நாட்களுக்கு மேற்படாத சலுகைக் காலமொன்றை வழங்க முடியும் எனவும், மத்திய வங்கி கூறியுள்ளது.


அத்துடன், 5 இலட்சம் ரூபாவுக்கு குறைவான பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடியாகும் காலத்தையும், மீளத் திரும்பும் காசோலைகள் மற்றும் காசோலை நிறுத்தற் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஜுன் 30 வரை நீடிக்குமாறும், குறிப்பிட்டுள்ளது. மேலும், கடன் அட்டைகள் மற்றும் ஏனைய கடன் வசதிகளுக்கான தாமதக் கட்டணங்களையும், ஜுன் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், கடன் வசதிகளை ஒத்திவைத்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகிய சலுகைகளுக்கு பதிலாக, தனது கடன் வசதிகளை ஆகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்கூட்டியே செலுத்தி முடிவுறுத்த விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணத்தை அறவிடாதிருக்குமாறும், உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.


இதற்கமைய, கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்கள், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற விசேட வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து முழுமையான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என, மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை , குறித்த சலுகைகளை வழங்குவதற்கு கட்டணங்கள் எதனையும் அறவிடக் கூடாது எனவும், சலுகைகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான கடன் பெறுநர்கள், எதிர்வரும் ஜுன் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.