பயணத்தடையின் போது யாழ் . மக்களுக்கான விசேட அறிவித்தல்!!


 பயணத்தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.


குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், வட மாகாண கொரோனா செயலணியினுடைய விசேட கூட்டமொன்று இன்று காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி மூலம் இடம்பெற்றிருந்தது.


கூட்டத்தில் தற்போதுள்ள மாகாண நிலைமைகள், யாழ்.மாவட்ட நிலைமைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிலைமைகள் தேவைகள், வைத்திய உபகரணங்கள் தேவைப்பாடுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பாடுகள் மற்றும் வைத்தியசாலைகள் வசதிகள் போன்ற குறைபாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனுடைய குறைபாடு நிவர்த்தி செய்வதற்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.


குறிப்பாக வட மாகாணத்திலிருந்து அதிகளவான வாகனங்கள் வெளியேறுவதன் காரணத்தினால் பயணத் தடை காலத்தின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவுறுத்தல் மிக விரைவில் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் கடல் மார்க்கமாக எல்லை மீறி பிரவேசிப்பது தொடர்பிலும் இங்கே ஆராயப்பட்டுள்ளது.


இதேவேளை , தற்போதைய யாழ்.மாவட்ட கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,


யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. நேற்று இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனையின்படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் இன்றுவரை தொற்றுக்குள்ளானோர் 2729 ஆக காணப்படுகின்றது. தற்போது வரை 36 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2526 குடும்பங்களைச் சேர்ந்த 6331 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


இந்த நிலையிலே யாழ் மாவட்டத்தில் மொத்தமாக நான்கு கிராமங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கின்றோம். அந்த வகையிலே தெல்லிப்பழை பிரதேச பிரிவிலே பலாலி வடக்கு அண்ரனி புரம் கிராமம், தையிட்டி , காரைநகரில் ஜே47 கிராம சேவகர் பிரிவு அதே நேரத்தில் தற்போது நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே103 அரசடி கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப்பகுதியினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நான்கு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே 80 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வாரம் 11 மில்லியன் பெறுமதியான உணவுப்பொருட்களுக்கான நிதி கோரி விண்ணப்பித்து இருக்கின்றோம். அதேநேரத்தில் நடமாடும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் உணவுப்பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் செயற்பாடு பிரதேச செயலர்கள் கிராம சேவகர்கள் முன்னெடுத்துள்ளனர். அத்தோடு வாகனங்கள் வாகன உரிமையாளர்கள் மற்றும் அந்த வாகனத்தில் பயணிப்போர் போன்ற விபரங்களை பிரதேச செயலர் ஊடாக விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு பொதுமக்கள் தமது அத்தியாவசிய சேவைகளை வீடுகளிலிருந்து பெற்றுக் கொள்ள கூடியதாக இந்த செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மேலும் பேக்கரி பொருட்கள் நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல உணவுப் பொருட்களும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்ககூடியவாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர ஏனைய மிக மிக அத்தியாவசியமான வைத்தியசாலை செல்வோர் விமான நிலையங்களுக்கு செல்வோர் போன்றவர்களுக்கு மாத்திரம் பயணத்தடை அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது.


இந்த நிலைமையில் சகல பொதுமக்களும் பொறுமையாக பயண தடையினை அனுசரித்து பயணத் தடை காலத்தில் வீடுகளிலிருந்து தேவையற்ற விதத்தில் நடமாடாது செயற்படுதல் வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி செயற்படுவது மிக அவசியமாகும். இந்த அபாயமான நிலைமையினை கடந்து செல்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். எனவே பொதுமக்கள் இந்த அசௌகரியமான நிலையை அனுசரித்து சற்று பொறுமையாக செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.


மேலும் யாழில் கொரோனா இடைக்காலச் சிகிச்சை நிலையங்களை பொறுத்தவரையிலே கோப்பாய் அதேபோன்ற வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையங்கள் கொரோனா இடைக்கால பராமரிப்பு நிலையங்களாக செயற்படுகின்றன. கோப்பாயில் 229க்கும் மேற்பட்டோரும் வட்டுக்கோட்டையில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் வெகுவிரைவில் நாவற்குழி இடைக்கால சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.