நோயாளியை திட்டாதீர்கள்- காரணியை விரட்டுங்கள்!!

 


ஆனை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்பார்கள். 

ஆனால் அன்றோ எட்டுத் திக்கும் கிடுகிடுக்க வைக்கும் 

நோயாளியின் முட்டு கீதம் வந்தது பின்னே!

அப்பனின் திட்டுக் குரல் வந்தது முன்னே, 

மூச்சை வேகமாக உள்ளெடுத்துக் கொண்டிருந்தான். உள்ளெடுப்பது விரைவாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் மூச்சை வெளிவிடுவது தான் சிரமமாகவும், ஓசையுடன் கூடியதாயும் இருந்தது. அவனுக்கு வயது 10-12 அளவில்தான் இருக்கும். முகத்தில் அப்பிக் கிடந்த சோர்வு வியர்வையுடன் சேர்ந்து சிதம்பிக் கொண்டிருந்தது. மூக்கு மடல்கள் வேகமாக விரிந்து சுருங்கின. நெஞ்சறை பொருமிப் பொருமி வதங்கிக்கொண்டிருந்தது. 

ஆம் கடுமையான ஆஸ்த்மா இழுப்பின் இயலாமை. தொய்ந்து, நொந்து அடியெடுக்க முடியாமல் மெதுநடையில் வந்து கொண்டிருந்தான்.

'சும்மா கிடக்கிறானே. ஆடாத ஆட்டம் ஆடுறது. இப்ப முட்டு வந்தால் நாங்கள் வேலையை விட்டுட்டு இவரோடை ஆஸ்பத்திரிக்கு திரிய வேண்டிக் கிடக்கு.'

 ஆதரவு கொடுக்க வேண்டிய கை, அணைக்காவிட்டாலும் பரவாயில்லை எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்க எரிச்சல்தான் வந்தது. அதை அடக்கிக் கொண்டு,

'இப்படி முட்டு அடிக்கடி வாறதோ' திசை திருப்ப முயன்றேன். 

'இல்லை. எப்பெண்டாலும்தான் வாறது. அது எங்கை வாறது?. இதுகள் தாங்களாதானே தேடுறது. இன்ரவெலுக்கை சும்மா கிடக்க ஏலாது. வியர்க்க களைக்க விளையாடுறது... 

.. ஏனடா இண்டைக்கும் விளையாடினனியோ. ஏன் வாயைத் திறந்து சொல்லன். வாற கோபத்துக்கு ஒரு அடி விட்டால்தான் சரி' 

திசை மாற மறுத்து மந்தை மாடு அதே வழியில் தொடர்ந்தது.

பாவம் பிள்ளை! அதின்ரை வேதனை புரியாமல் கத்துகிற தகப்பன். மிருகங்களை விட கேவலமான சீவன். 

தகப்பனின் அலட்டலைக் கேட்டு நேரத்தைத் தொலைப்பதில் பிரயோசனமில்லை என்பது புரிந்தது. மூச்சைத் தணிப்பதற்கு  Nebulize பண்ணுவதற்கு ஆயத்தம் செய்தேன்.

இன்று இவனுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் கூட அன்று ஆஸ்த்மா கடுமையாக இழுத்தது. அதில் பலருக்கு இவனுக்கு செய்தது போலவே காஸ் மூலம் மருந்து (Nebulize) பிடிக்க வேண்டியிருந்தது.

ஆனால் அவர்கள் யாரும் விளையாடியிருக்கவில்லை! இதை அந்த அப்பனுக்கு சொல்லி என்ன பிரயோசனம்!

ஆஸ்த்மாவிற்கு விளையாட்டு கூடாதென்றில்லை. உண்மையில் ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் தினமும் உடற் பயிற்சி செய்வது நல்லது என்றே கூறப்படுகிறது. உடற் பயிற்சி எல்லோருக்கும் அவசியமானது, ஆஸ்த்மா உள்ளவர்கள் உட்பட. ஏனெனி;ல் சுவாசத் தொகுதி உட்பட முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அது உதவுகிறது. 

'ஆஸ்த்மா இருக்கும் போது ஓடினால், விளையாடினால், உடற் பயிற்சி செய்தால் மூச்செடுக்கக் கஸ்டமாக இருக்குதே' என நீங்கள் சொல்வது கேட்கிறது. 

உண்மைதான். ஆஸ்த்மா இழுக்கும் போது உடலுக்கு வேலை கொடுத்தால் அத் தருணத்தில் அதிகரிக்கவே செய்யும். அதற்காக அவற்றைக் கைவிடக் கூடாது. ஆஸ்த்மாவைத் தணிப்பதற்கான இன்ஹேலரை உபயோகித்துவிட்டு அவற்றைச் செய்தால் பிரச்சனை எதுவும் இருக்காது.

'இண்டைக்கு முழுகிப் போட்டு தயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டவ' ஆஸ்த்மா இழுக்கும் மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்தவர் குரலை அடக்கிக் கொண்டு என் காதில் போட்டார். வாயை வயிற்றைக் கட்டி கவனமாக இருக்காமல் விட்டுட்டு இப்ப தொல்லைப் படுகிறா என்று சொல்லாமல் சொல்லி மனைவியில் குற்றம் சாட்டும் தொனி முனைத்து நின்றது. 

'அவ சீவியத்திலை ஒரு நாளும் முழுகினதும் இல்லை, தயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டதும் இல்லை. இண்டைக்கு மட்டும்தான் செய்தவவோ?' என்று கேட்க வேணும் போலிருந்தது. பெரிய மாங்காய் பூட்டு உயிர்தெழுந்து வந்து என் வாயை அடக்கியது. 

முழுகி தலையைச் சுத்தமாக வைத்திருப்பது சளி பிடிப்பதைக் குறைக்குமே ஒழிய கூட்டாது. பால் தயிர் வாழைப்பழம் உட்பட எந்த உணவுமே ஆஸ்த்மாவைத் தூண்டுவதில்லை. வாழைப்பழம், தயிர், வெண்டிக்காய் போல பல ஆரோக்கியமான உணவுகளை குளிர் சாப்பாடு என்று சொல்லித் தவிர்க்கும் 'பரம்பரை நோய்' எங்கள் சமூகத்தின் முதிசம்.

சில உணவுகள் ஆஸ்த்மாவைத் தூண்டும் என்பதும் எமது பாரம்பரிய நம்பிக்கை 

உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுமே ஒழிய ஆஸ்த்மா தூண்டப்படுவது இல்லை என்றே சொல்லலாம்.

'இவன் எந்த நேரமும் பிரிட்சைத் திறந்து கூல் தண்ணி குடிக்கிறவன். குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ. குளிர்ச் சாப்பாடுகளுக்கு சளிபிடிக்கும் எண்டு எத்தினை முறை சொன்னாலும் கேக்கிறானே? நீங்கள் சொன்னால்தான் கேப்பான்' ஆஸ்த்மா இழுப்புப் பையனைக் கூட்டி வந்த அம்மாவின் முறைப்பாடு இது.

'தம்பி நீ கூல் தண்ணி குடிக்கிறதெண்டால் குடி. இரவிலை வெக்கையெண்டாலும் குடி. பரவாயில்லை. ஒண்டும் செய்யாது' எண்டு நான் சொன்னதும் அம்மா கொதித்து எழுப்பினா.

அம்மாவுக்கும் கொஞ்சம் கூல் தண்ணி குடுத்தால்தான் கொதி அடங்கும்! 

ஐஸ்கிறீம், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொண்டால் தொண்டை அரிப்பது போன்ற உணர்வு சிலருக்கு ஏற்படுவதுண்டு. அதற்கும் ஆஸ்த்மாவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.  திடீரென குளிர் பட்டதால் தொண்டையில் ஏற்படும் சாதாரண பிரதிபலிப்பு அது.

'இவ்வளவு காலமும் இல்லாத இந்த கோதாரி விழுந்த வருத்தம் இப்பத்தான் எனக்கு வந்திருக்கு' என்றார் மூட்டு இழுப்போடு வந்த ஒரு 65 வயது தாத்தா.

ஆஸ்த்மா என்பது பொதுவாக சிறுவயது வியாதி என்றொரு எண்ணம் பெரும்பாலனவர்களுக்கு இருக்கிறது. இளவயதில் ஏற்படும் சளித்தொல்லை வயது கூடக் கூட மறைந்துவிடும் என்பார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவனாகும் போது சுவாசத் தொகுதி விரிவடைவதாலும், நோயெதிர்புச் சக்தி பெருகுவதாலும் அவ்வாறு நேரலாம். ஆனால் இது எப்போதும் உண்மையல்ல. முதல் முதலாக முதுமையில் ஆஸ்த்மா வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதே போல சிறுவயதில் வந்த ஆஸ்த்மா முதுமையிலும் விட்டுப் பிரியாதவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

'ஏ.சி யுக்குள்ளை வேலை செய்ததாலைதான் பிரச்சனை' என்றான் ஒரு இளைஞன். ஆனால் அவன் பல வருடங்களாகவே ஏ.சி போட்ட அலுவலகத்தில் தான் வேலை செய்கிறான் என்பதை நான் அறிவேன். எனவே அது காரணமல்ல. 

'ஏ.சி கிடந்திட்டுப் போகட்டும் முதலில் சிகரட் புகைப்பதை நிறுத்தும்' கராராகச் சொன்னேன்.  

அவனைப் பரிசோதிக்க கிட்ட சென்ற போது பக்கெண்டு அடித்த சிகரட் வாடைதான் அவ்வாறு சொல்ல வைத்தது. சிகரட் புகை மட்டுமல்ல, நுளம்புத் திரி புகை, விறகு எரிக்கும் புகை போன்றவை ஆஸ்த்மாவைத் தூண்டும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம்.

அதே போல தலையணை, படுக்கை விரிப்பு, குசன் கதிரைகள், மென்மையான பொம்மைகள் போன்றவற்றில் மறைந்திருக்கும் தூசிப் பூச்சி ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணிகளாகும். அவற்றை அடிக்கடி தோய்த்து வெயிலில் காயவிட்டு ஒழிக்கலாம். 

சிகரட் புகை போலவே கற்பூரம் சாம்பிராணி புகைகள், பெயின்ட் மணங்கள், பொடி ஸ்ப்;ரே தூசி தட்டுதல் போன்றவையும் ஆஸ்த்மாவைத் தூண்டுபவையாகும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளின் ரோமம் போன்றவையும் முக்கிய காரணங்கள் என்பதால் ஆஸ்த்மா தொல்லை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அல்லது அதற்கேற்ற சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டும்.

அன்று சளி இருமல் என்று வந்தவர்கள் பலர். அதிலும் பலருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. அன்றைய சீதோஸ்ண நிலை காரணமாயிருக்கலாம். வெப்ப நிலை குறைவாக இருந்தது. காற்று வீச்சு அதிகமில்லை. ஈரப்பதம் அதிகமாயிருந்து. கடுமையான கால நிலைகளும் திடீரென மாறும் காலவெட்ப நிலைகளும் ஆஸத்மாவை தூண்டும் காரணிகளில் முக்கியமானது.

எனவே பாவம் நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை 'நீ செய்தது தான் காரணம் எனத் திட்டி அவர்கள் வேதனையை அதிகரிக்காதீர்கள். 

நோயாளியை திட்டாதீர்கள் நோய்க் காரணியை விரட்டுங்கள்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.