திருவிழா - கவிதை!!

 


தேர் திருவிழாக்களுக்கு

நீங்களும் சென்றிருக்கக் கூடும் 

என்னைப் போலவே!

கிராமிய மணம் நுகர்வதற்கென்றே

நகரவாசிகளையும்

அழைத்து வந்துவிடும்

ஆற்றல் கொண்டவை திருவிழாக்கள்!

தூரத்து உறவுகளின் வருகையால்

சலசலப்பும் கலகலப்புமாய்

ஒவ்வொருவர் மனதுக்குள்ளும்

ஓடிக்கொண்டிருந்தது தேர்!

ஒன்று கூடி உண்ணுகையில்

இனிப்பாய் இருக்கும்

கட்டி வந்த புளிசோறு!

வெறிச்சோடிக்கிடந்த சாலைகளில்

புதிதாய் முளைத்திருக்கும்

பொம்மைக் கடைகளில்

குவிந்துகிடக்கிறது

குழந்தைகளின் மனங்கள்!

வடம் பிடித்து தேரை

இழுத்துவிடுகின்ற தந்தையால்

அடம்பிடிக்கும் குழந்தையை

இழுக்க முடியவில்லை!

அதிசயமாய்  தென்படுகிறது

தொலைந்து விட்டதாய்

எண்ணிக்கொண்டிருந்த தாவணிகள்!

மீசையைவிட வேகமாய்

காதல் துளிர்த்த இளைஞர்கள்

தேடிக்கொண்டிருந்தார்கள் அவரவர்

தேவதைகளை!

மனங்களை மட்டும் ராட்டினத்தில் சுற்ற வைத்து

வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர்!

மனங்களை 

வெளியே குதிக்க வைத்து விட்டு

அலறுகிறார்கள் ராட்டினத்தில் சிலர்!

ஆடுகளை வெட்டி

ரத்தம் புசித்தவர்கள்

தலைமயிரை மட்டும்

அங்கேயே வைத்தார்கள்

ஆண்டவனுக்கு காணிக்கையாய்!

சத்தம் நிரம்பிய

திருவிழாக் களத்தை விட்டு

வீடு திரும்பிய நான்

அமைதியாய் கண்ணுறங்குகையில்

பேரிரைச்சலாய் 

கேட்டுக்கொண்டேயிருக்கிறது

மகனை தொலைத்துவிட்ட அந்த

தாயின் கதறல்!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

                                    க.சித்தார்த்தன்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.