திசை மாறிய பறவைகளாய்..!


திசை மாறிய பறவைகளாய்

அசைபோடும் நினைவுகளோடு

கசை அடிபட்ட காவலன் போல்

பசையற்ற வாழ்க்கை இங்கு


கலையிழந்த மண்டபம்போல்

கலங்கிய நீரோடை போல்

கலைந்திட்ட கனவுகளோடு

விலை போகிற மனிதம் இங்கு


சிறகு ஒடிந்த பறவையாய்

பறந்திட சிறு வழியும் இன்றி

கறைபடிந்த நினைவுகளோடு

சிறைவாடும் கைதி இங்கு


தேசத்தின் தோழமை எல்லாம்

தேசங்கள் கடந்து இருந்தும்

பாசமுடன் பலமுறை கதைப்பினும்

பாரமாகும் மனங்கள் இங்கு


காப்பரண் வாழ்க்கை தன்னில்

காவல் நேரக்கடமையில்தூங்கி

கால்கடுக்க தண்டனை பெற்றதும்

கானல்நீராகி கனக்கிறதுநெஞ்சம்


ஒரு தட்டில் உணவு உண்டு

ஓரணியில் திரண்டு எழுந்து

ஒற்றுமையாய் வாழ்ந்த நாட்கள்

ஒவ்வொன்றும் கண்ணீராய்

கரைகிறது


அண்ணனாய் ஆசைத் தம்பியாய்

அக்காவாய் அருமை தங்கையாய்

பாசமாய் நேசத் தோழமையாய்

பணி செய்த நாட்கள் எல்லாம்

பகற்கனவு ஆகிப் போனதே...


பார்த்திடவும் பலகதை பேசிடவும்

பாசமுடன் ஏங்குகிறதுஇதயமிங்கு 

பழஞ்சோறு என்றாலும்

பாசறைத்தோழியரோடு சேர்ந்துண்ண தவிக்கிறது தினம்

துடிதுடிக்கிறது தோழமை இங்கே..


❣️அருந்தமிழ்.❣️

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.