தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!


தமிழகத்தில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதற்கான மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனவே தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளைத் தனி அலுவலர்கள் நிர்வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களது பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது. இதனிடையே 2019இல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

இறுதியாகக் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தனி அலுவலர்களின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஏழு தினங்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இரண்டாம் திருத்தச் சட்ட முன் வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இந்த மசோதாவில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கும் 9 மாவட்டங்களில் [விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ) தனி அலுவலர்களின் பதவிக் காலம் மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தனி அலுவலர்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பதவி காலத்தையும் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.