முகமூடிகள் - கட்டுரை!!



 

முகத்தை மூடும் கவசம் இல்லாமல் இப்போதெல்லாம் வெளியே செல்ல முடியாது.  தற்போதைய நோய்த்தொற்று எமக்கு வலியுறுத்தியுள்ள  மிக முக்கியமான  அங்கி  இதுவாகும்.  நாம் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும்  இதை அணிந்தே தீரவேண்டும்.  

இதே யதார்த்தம் பலரது மனதிற்கும்  பொருந்தி   விடுகிறது.  அதாவது  அகத்தின் அழகை அல்ல, அகத்தின் அழுக்கை மறைத்து  பலர் முகமூடி போட்டுவிடுகின்றனர்.  பார்ப்பதற்கு  அன்பும் கருணையும் கொண்டவர்களாக  தெரியும் பலருக்கும்  பின்னே வக்கிரங்களும் இச்சைகளும் தான்  கொட்டியிருக்கிறது. 

உன்னதமிக்கவர்கள் என நாம் சிலாகித்துக்கொள்ளும்  பலர் உண்மையில் அப்படியில்லை.  மனித சுபாவங்கள்  பல வகை என்பதை நாம் ஏற்றுக்  கொள்ளத்தான் வேண்டும்,  ஆனால்,  உடைபட்ட மனங்கள் எப்போதும்  பழைய அழகுடன்  ஒட்டிக்கொள்வதில்லை. 

பெரும்பாலும் ஆண்களே மனதிற்கான முகமூடிகளை அணிவது அதிகம். அந்த வெளி உருவத்தில் ஏமாந்த பெண்களின் நிலைப்பாட்டை  சொல்லிக்கொள்ள முடியாத இயல்பின்மையான சூழலே  நிலவுகின்றது. பகிர்ந்து கொள்ள முடியாத துன்பங்களின் ரணம் என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்,. அதன் வியாபிப்பில் வெறும் மன உழைச்சலே  மிஞ்சுகிறது.

வெற்றிகள் பறைசாற்றப்பட்ட அளவிற்கு ஆண் சுபாவங்கள் அதிகம் வெளிப்படுத்தப்படுவதில்லை. பண்டைக்கால   இலக்கிய வாழ்வியலில் கூட  அரசர்களின்  வீரதீரங்கள் சொல்லப்பட்ட அளவிற்கு அந்தப்புர ராணிகளின் மனக்கிடக்கைகளோ,  அன்றாட வாழ்வின் சித்தாந்தங்களோ  சொல்லப்படவில்லை  என்பதே உண்மை. 

காகித வனங்களில்  சிதறித் தெறித்த  வெற்றுத் தாள்களைப் போல பெண்மன உணர்வுகளும் அர்த்தமற்று கிடக்கிறது.  தடுக்கி விழுந்த தடயங்களை  எடுத்தியம்பமுடியாத நிலையில்  பல விதமாக மாறிக் கொண்டிருக்கிறது அந்த முகமூடிகளும்....


கோபிகை. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.