சிறிதளவான விடுவிப்பில் பிரியா-நடேஸ் குடும்பம்!

 


புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரின் அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ள போதும் அவர்களது நிரந்தர எதிர்காலம் குறித்த முடிவு எதுவும் வெளியாகவில்லை.

பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்று அறிவித்தார்.

எனினும் இந்த அறிவிப்பு பிரியா-நடேஸ் குடும்பம் நிரந்தர விசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழியைத் திறக்கவில்லை என்றும் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக அவர்கள் community detention-இல் வாழ அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் Alex Hawke கூறினார்.

இதேவேளை குருதித்தொற்றுக்காக பெர்த்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் தருணிகாவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வாழும் வகையில் பெர்த்தில் இக்குடும்பம் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி community detention placement-இன் கீழ் பாடசாலைகள் மற்றும் ஆதரவு சேவைகளை இலகுவில் பெறக்கூடிய இடமொன்றில் அவர்கள் தங்கவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி பிரியா-நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை தொடரும் பின்னணியில், தடுப்புக்காவலில் சிறுவர்களை வைத்திருப்பது தொடர்பிலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு "பொருத்தமான இரக்கத்தை" காண்பிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் Alex Hawke கூறினார்.

கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். தந்தையும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் சென்று தருணிகாவுடன் இணையவுள்ளனர்.

இதேவேளை தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுவடைந்ததுடன், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பலரிடமிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்ட பின்னணியில் குடிவரவு அமைச்சர் Alex Hawke-இன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.