உங்கள் தொகுதியில் முதல்வர்!


 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இதுவரை 75,546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் மக்களின் கோரிக்கை மனுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றார். அதற்கென தனித்துறை உருவாக்கப்பட்டு, மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு மனுவுக்கும், தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அதன் உண்மை தன்மை போன்றவற்றை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், தாங்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எடுக்கப்பட்டு வருகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியபோது, ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இன்று காலை வரை 75,546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.