கவிஞர் தாமரையின் உணர்ச்சிபூர்வ பதிவு!

 


சென்னை மாநகராட்சியில் ’தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகையை மீண்டும் பார்த்தவுடன் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது என கவிஞர் தாமரை தனது பேஸ்புக்கில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


தேர்தலுக்குப்பின் எந்த அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமரிசனம் செய்ய ஓர் ஆறுமாதமாவது தர வேண்டும் என்பது நியாயமானது!. அதிலும் இந்தக் கொரோனா காலம் கொடுங்காலம் !.


அப்படித்தான் இன்றைய தமிழ்நாட்டு அரசுக்கும் தந்து பிறகு பேசலாம் என்று நினைத்தால், புதிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதற்கு இடமே தரவில்லை. ஆறு மாதங்களென்ன, ஆறு மணி நேரத்திலேயே அதிரடிகளை ஆரம்பித்து விட்டார். ஒன்றை வியந்து முடிப்பதற்குள் அடுத்தது அடுத்தது என்று ஆறுகளாக அடித்துப் போய்க் கொண்டேயிருக்கிறார்.


நேர்மையாளர்கள் என்று பொதுவாக அறியப்பட்ட அதிகாரிகளுக்கு முக்கிய உயர் இடங்களைத் தந்து வலுவான வளையத்தை உருவாக்கிக் கொண்டபோதே தெரிந்து விட்டது, அவர் வெறும் வாய்ப்பேச்சுக்காக 'சிறப்பான ஆட்சி'யைத் தரப்போவதாகச் சொல்லவில்லை என்று!.


முந்தைய ஆட்சியின் கசடுகளைக் களைவதற்கும் புதிய குழு தங்கள் பணிகளைப் புரிந்துகொண்டு அடுத்த அடி எடுத்து வைப்பதற்குமான இடைவெளிகூட மிகமிகக் குறைவு !


கொரோனாவுக்கு முகங்கொடுக்க எடுத்த நடவடிக்கைகளிலிருந்து 'ஒன்றிய'த்துக்கு ஓலை அனுப்பியும் தினம்தினம் நல் அறிவிப்புகளை வெளியிட்டும் ஒவ்வொரு துறையையும் தனித்தனியாகச் சீர்தூக்கி செயல்படுவதன் ஊடாக நேற்றைய 'தமிழ்நாடு' ஆவணம் வரை அனைத்தும் சிறப்போ சிறப்பு ! அதிலும் நேற்று ரிப்பன் மாளிகையில் 'தமிழ் வாழ்க' மீண்டும் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்து விட்டது ! தமிழ்நாடு தன் இழந்த பெருமைகளை/உரிமைகளை எப்போது அடையுமோ என்றேங்கிக் கிடந்த என் போன்றோர்க்கு இந்த ஆனந்தக் கண்ணீர் தேவையானதாகத்தான் இருக்கிறது !


தமிழ் வாழ்க என்று ஒரு பெயர்ப்பலகை வைப்பதோ தமிழ்நாடு என்று அழைப்பதோ சாதாரண சூழ்நிலையில் பெரிய விதயங்கள் இல்லைதான் ! ஆனால், தமிழ்நாடு முற்றுகையிடப்பட்ட நிலையில், தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலைத் தடுத்தாடுவதற்கு தகத்தாய தலைமை ஒன்று தேவைப்படுகிறது.


பதவியேற்று இன்னும் ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அந்த நம்பிக்கையை இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்தி விட்டார் என்றால் மிகையில்லை. ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உழைக்கிறார் என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது அவரது செயல்பாடுகள் ! எத்தகைய அலங்கோலமான சூழல் இருந்தாலும் தலைமை சரியாக இருந்தால் நிலைமை சீர்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்திருக்கிறார். தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு அவர் அரணாக இருக்கும் வரையில், தமிழ்ச்சான்றோர்கள் தமிழுணர்வாளர்கள் அவருக்கு அரணாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை ! வாழ்த்துகிறோம் மாண்புமிகு முதல்வர் அவர்களே !


செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது

காதினிலே !...


பி.கு :அரசியல் அறிந்தோர்க்கு எதை நோக்கிய நகர்வு என்று தெரிந்தேயிருக்கும் ! அடுத்த ஐந்தாண்டுகள் அதிகம் புழங்கக்கூடிய சொல்லாக இருக்கப்போவது 'மாநில சுயாட்சி' அல்லவா !


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.