இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும்

 


இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

இசாலினியின் மரணம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2021.07.15 ஆம் திகதி டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி இசாலினியின் மரணம் தொடர்பிலும், காவல்துறையினரின் விசாரணைப் போக்கு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ரிசாட் பதியுதீனின் வீட்டில் குறித்த சிறுமி வேலைசெய்து வந்துள்ள நிலையிலேயே சிறுமியின் மரணம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுமி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக மரண விசாரணை தொடர்பில் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இவ்வருடம் யூன் 12 ஆம் திகதிவரை 3500 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் 2020 ஆம் ஆண்டு சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக 235 முறைப்பாடுகளும் இவ்வாண்டு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, எந்தவொரு அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை என்பதையே இத்தகைய புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. குடும்பங்களில் நிலவும் வறுமை காரணமாக கல்வியைத் தொடரவேண்டிய சிறுவர்கள், சிறுவர் தொழிலாளிகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். 16 வயதுவரை கட்டாயக் கல்வியை வலியுறுத்தும் இலங்கையில், சிறுவர்கள் கல்வியைத் தொடரமுடியாத அளவுக்கான பொருளாதார நெருக்கடிகளை இந்த அரசே ஏற்படுத்துகின்றது.

இதனால், இத்தகைய சிறுவர்களின் மரணங்கள், இவ்வாறான அரசின் தவறுகளை மூடிமறைப்பதற்காக தற்கொலையாக மாற்றப்படுகின்றதா என்கின்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. குறித்த சிறுமியின் மரணம் மற்றும் நடைபெற்றிருந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைகள், எவ்வித பக்கச்சார்போ, தலையீடுகளோ இன்றி நேர்மையாக நடைபெறவேண்டும். எவராயினும் குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

இதுவே, ஈடுசெய்ய முடியாத சிறுமியின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த ஆறுதலாக அமையும். சிறுமி இசாலினிக்கு நடந்த துஸ்பிரயோகங்களையும், விசாரணையின் இழுத்தடிப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன், சிறுமியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.