32 ஆவது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆரம்பம்!


32 ஆவது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இன்று(23) ஜப்பான் – டோக்கியோவில் ஆரம்பமாகின்றன.

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு வரை பிற்போடப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளில் இலங்கை உள்ளிட்ட 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

339 உட்பிரிவுகளுடன் 33 விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

1896ம் ஆண்டு முதல், 04 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, 1964 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகின்ற போதும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஒலிம்பிக்கில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படுவதை தவிர்க்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் அதன் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.