சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021!


 தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ள கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2021 திங்கள் லுட்சேர்ன்  மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர், தேசியக்கொடியேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் வணக்கப் பாடல்களும் வழங்கப்பட்டன.


முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சி நிகழ்வில் பாடல்கள், கவிதை, பேச்சுக்களுடன் எழுச்சி நடனமும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.


இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும், சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றிய எமது உறவுகள் இவ்வெழுச்சி நிகழ்வில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வீரவணக்கத்தினைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் அவர்கள்   சிறிலங்காப் பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்தி வீரச்சாவாடைந்த நாளான யூலை 5 கரும்புலிகள் நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


 


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.