சாரா’ஸ் (மலையாளம்) - திரை விமர்சனம்!!

 


குழந்தைகளை கவனிப்பது என்றாலே அன்னா பென்னுக்கு (சாரா) வேப்பங்காய் கசப்பு. அதனால் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்றும் அப்படியே செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற தனது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் உறுதியாக இருக்கிறார் அன்னா பென்.


சினிமாவில் இயக்குனராகும் முயற்சியில் இறங்கும் அன்னா பென், தனது கதை சம்பந்தமாக விவாதிக்க, பெண் மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறார். அப்போது அந்த மருத்துவரின் இரண்டு சுட்டி குழந்தைகளை கவனித்துக் கொண்டு அந்த வீட்டில் மருத்துவரின் தம்பி சன்னி வெய்ன் தங்கி இருக்கிறார். அவருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சலிப்பாக இருக்க, ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென பேச்சுவாக்கில் கூறுகிறார்.

இதைக்கேட்ட அன்னா பென், அவர்தான் தனக்கான சரியான ஜோடி என முடிவு செய்து, காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டுகிறார். ஒரு படம் இயக்கும்வரை திருமணம் வேண்டாம் என இருவரும் முடிவு செய்தாலும், சன்னி வெய்னின் அம்மாவின் பிடிவாதம் காரணமாக இருவருக்கும் உடனடியாக திருமணம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அன்னா பென் எவ்வளவோ கவனமாக இருந்தும், எதிர்பாராத விதமாக கர்ப்பமாகிறார். வீட்டில் அனைவருக்கும் தெரிந்து சந்தோசப்பட, அதுவரை குழந்தைகள் என்றால் பெரிய அளவில் விரும்பாத சன்னி வெய்ன் கூட, தான் அப்பாவாக போகிறோம் என மகிழ்ச்சி அடைகிறார்.

ஆனால் திருமணத்திற்கு முன் தாங்கள் போட்ட ஒப்பந்தத்தை சன்னி மீறுவதாகவும், தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பதால், அதற்கு கர்ப்பம் தடையாக இருக்கும் என கூறி, கருவைக் கலைப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார் அன்னா பென். இதனால் கணவன் மனைவிக்குள் விரிசல் விழுகிறது. சினிமா லட்சியத்தையும், குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்கிற வைராக்கியத்தையும் குடும்பத்திற்காக அன்னா பென் விட்டுக்கொடுத்தாரா ? இல்லை, தனது நிலையில் பிடிவாதமாக நின்று சாதித்தாரா என்பது மீதிக்கதை.

இன்றைய நவீன சூழலில் இளம் தம்பதியர் பலர் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவதற்கு காரணம், குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது சந்தோசத்திற்கு அது ஒரு தடையாகவும், அதை பார்த்துக் கொள்வதே ஒரு சுமையாகவும் இருக்கும் என்கிற எண்ணத்தில் தான். அதை இந்தப்படம் முழுவதும் எதார்த்தம் மீறாமல் நகைச்சுவை இழையோட அதேசமயம் ஆலோசனை என்கிற பெயரில் போரடிக்காமல் கொடுத்திருப்பதில் தான் இந்தப்படம் வெற்றிக் கோட்டை எளிதாக தொடுகிறது.

மூடிய குளிர்பதன அறைக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணாக ஹெலன் படத்தில் எப்படி மொத்த கதையையும் தன் மீது தாங்கினாரோ, அதேபோல இந்த இந்தப் படமும் முழுக்க முழுக்க நாயகி அன்னா பென்னை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என நினைக்கும் ஆயிரத்தில் ஒருத்தியாக, தனது கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியிருக்கிறார் அன்னா பென். எப்போதும் புன்னகை பூத்த முகமாக காட்சியளிக்கும் அன்னா பென் தனது பள்ளிக்கால ஆரம்ப காட்சியிலேயே நம்மை வசீகரித்து விடுகிறார். சினிமாவுக்காக அவர் முயற்சி செய்வது, தனக்கான காதலனே அடையாளம் காண்பது என நகைச்சுவை முகம் காட்டினாலும் தனது லட்சியத்துக்கும் வைராக்கியத்திற்கும் ஒரு தடை வரும்போது பொங்கி எழவும் செய்திருக்கிறார் அன்னா பென்.

பெரும்பாலும் இரண்டாவது கதாநாயகனாக அல்லது வில்லனாக நடித்து வந்த சன்னி வெய்ன் இந்த படத்தில் மீண்டும் கதாநாயகனாக மாறி இருக்கிறார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் இவர் சரிசமமாக இருமுகம் காட்டி, நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளை வெகு சரளமாக கையாளுகிறார் சன்னி வெய்ன்.

குழந்தை நல மருத்துவராக வரும் சித்திக் சில காட்சிகளே வந்தாலும் நாயகியின் பிரச்சனையை அவரது கண்ணோட்டத்திலிருந்து அணுகுவதும் அதற்கேற்ற தீர்வை கூறுவதும் என மருத்துவத்தை தாண்டிய ஒரு முற்போக்கு சிந்தனையாளராக சபாஷ் சொல்ல வைக்கிறார். பேரன் பேத்திகளை கொஞ்சம் வேண்டும் என்கிற சராசரி அம்மாவாக மல்லிகா சுகுமாரன் நடிப்பில் எதார்த்தம் காட்டியிருக்கிறார்.

அதேசமயம் இப்படி குணாதிசயம் கொண்ட ஒரு பெண்ணின் அம்மா அப்பாவாக இருந்து கொண்டு, அதனால் ஏற்படும் மனக்கஷ்டங்களை கூட நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ளும் மன முதிர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அன்னா பெண்ணின் பெற்றோராக வரும் இருவரும். குறிப்பாக மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியர் பென்னி பி.நாராயம்பலம் இந்த படத்தில் நாயகியின் தந்தையாக நடித்து ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேசமயம் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது முதல் படமான ஓம் சாந்தி ஓசானாவில் வடிவமைத்திருந்த நாயகி நஸ்ரியா மற்றும் அவரது பெற்றோரின் மறு பிம்பமாகவே, இந்த படத்தில் அன்னா பென்னும் அவரது பெற்றோரும் உலா வருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விக்ரமன் பட பாணியில் பாடல்கள் மூலம் காட்சிகளை அழகாக முன்னோக்கி நகர்த்துவதற்கு ஷான் ரகுமானின் இசை உதவி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் படமாக்கப்பட்ட படம் என்பதாலோ என்னவோ அடிக்கடி அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் நடந்தாலும், நாமும் அந்த வீட்டின் உள்ளே வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி

ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இதற்கு முந்திய படங்கள் எப்போதுமே பெண்களை மையப்படுத்தி, பெண்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற, அவர்களது உரிமைகளை, நியாயங்களை அவர்கள் பக்கம் நின்று பேசுகின்ற படங்களாகவே இருந்திருக்கின்றன. இந்தப்படமும் அந்த பாதையில் இருந்து கொஞ்சமும் விலகவில்லை. இதற்குமுன்பு வந்த படங்களில் குழந்தை பெற்றுக் கொள்ள கதாநாயகி மறுப்பதற்கு வெவ்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதில் ஆரம்பத்தில் இருந்து அழுத்தமாக சொல்லப்படும் காரணம் கொஞ்சம் புதுசுதான்.

குடும்பத்தில் யார் விட்டுக்கொடுத்து போக வேண்டும் எந்த இடத்தில் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்கிற குழப்பத்தில் இருக்கும் இளம் தம்பதியினர், இந்த படத்தை பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை

சாராஸ் ; ஆயிரத்தில் ஒருத்தி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.