தேவேந்திரனே குற்றவாளி!!


ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கொஞ்சம் சாமர்த்தியசாலியும் கூட. அவன் தோட்டம் ஒன்று அமைத்து, இரவு பகலாக அதனைப் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் அவனது தோட்டத்தில் பசு மாடு ஒன்று புகுந்து, மரக்கன்றுகளை மேய்ந்து விட்டது. அதனைக் கண்ட அந்த செல்வந்தன், ஆத்திரத்தில் தடியைக் கொண்டு ஆத்திரம் தீரும்வரை பசுமாட்டைப் பலமாக அடித்தான். அதில் பசு இறந்து போனது.

செல்வந்தன் பசுவை அடித்துக் கொன்ற சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. ஊர் மக்கள் அனைவரும் அவனது இல்லத்திற்கு வந்து அவனிடம் பசுவை வதைத்தது பற்றி கேட்டனர்.

சமயோசித புத்தி கொண்ட செல்வந்தன் தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இதற்கு நான் பொறுப்பல்ல என்று வாதிட்டான்.

‘மக்களே! நான் எதற்காக பசுவைக் கொல்ல வேண்டும்? பசு மிகவும் சாதுவானது. கோமாதா என்று அனைவராலும் வணங்கப்படுகிறது. அதனால் நான் பசுவைக் கொல்லவில்லை. என் கைகள்தான் அதைக் கொன்றது. கைக்கு அதிதேவதையாக இருப்பது தேவேந்திரன். அதனால் பசுவைக் கொன்ற பாவம் இந்திரனையே சேரும். என்னைச் சேராது. அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?’ என்றான்.

தான் ஒரு அப்பாவி போலவும், ஒன்றுமே அறியாதவன் போலவும், கருணை உள்ளம் கொண்டவன் போலவும் நடித்து, தன்னுடைய குற்றத்தை தேவேந்திரன் மீது தூக்கிப்போட்டான்.

செல்வந்தன் இப்படித் தன் மீது அபாண்ட பழி போடுவதை தேவேந்திரன் அறிந்தான்.

ஒரு வயதான முதியவர் வேடம் தாங்கி பூலோகம் வந்து செல்வந்தனைச் சந்தித்தான். ‘ஐயா! இந்தத் தோட்டம் யாருடையது?’. ‘எனக்கு சொந்தமானதுதான்’ என்றான் செல்வந்தன்.

முதியவர் வேடத்தில் இருந்த இந்திரன், ‘தோட்டத்தை நன்றாகப் பராமரித்திருக்கிறீர்கள். உங்களின் வேலைக்காரர்கள் மிகவும் திறமைசாலிகள் போல் தெரிகிறது. அதனால்தான் மரங்களும், செடிகளும் நேர் வரிசையில் அமைந்துள்ளன’ என்றான்.

அதை மறுத்த செல்வந்தன், ‘இல்லை... இல்லை... அனைத்துக்கும் நான்தான் காரணம். என்னுடைய மேற்பார்வையில்தான் அவர்கள் இதைச் செய்தார்கள். எல்லாம் என் முயற்சி’ என்று தற்பெருமை அடித்தான்.

‘சரி நான் நம்புகிறேன். இந்தப் பாதை.. அதை யார் அமைத்தது?’ என்றான் இந்திரன். அதற்கும் நான் தான் என்று பெருமைபடக் கூறினான் செல்வந்தன்.

இதையெல்லாம் உங்களுடைய சாதனை என்கிறீர்கள். அவற்றிற்குரிய பெருமையும் தங்களுக்கே உரியது என்று கூறுகிறீர்கள். அப்படி இருக்கும்போது, பசுவைக் கொன்ற பாவத்துக்கு மட்டும் தேவேந்திரனைக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?’ என்று கூறிவிட்டு, முதியவர் வேடத்தில் இருந்த இந்திரன் மறைந்தான்.

செல்வந்தன் தன் தவறை உணர்ந்து வருந்தினான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.