மூன்று அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகளா?


அந்த நாட்டு அரசன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு அதிக அளவிலான அதிகாரங்களையும் கொடுத்தான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் நிலையினையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

“நாங்கள் தவறுகள் ஏதும் செய்யவில்லை. மக்களுக்காகவேத் தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எங்களைப் பற்றித் தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” என்றனர் அந்த அதிகாரிகள்.

அந்த அதிகாரிகள், தாங்கள் செய்யும் ஊழலை மிகத் திறமையாகச் செய்திருக்கிறார்கள். அந்த மூவருமே ஊழல் பேர்வழிகளா? அல்லது ஏதாவது நல்லது செய்திருக்கிறார்களா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.

“அதிகாரிகளே, மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக் கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளைக் காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்” என்றான் அந்த அரசன்.
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதைச் சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் வசதியாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியேச் செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு என்றன் அரசன்.

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் இறந்து போனார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.