இலங்கை வர்த்தக சங்கத்தின் அறிவிப்பு!!

 


தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தத் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த நிகழ்ச்சித்திட்டங்களை, கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையினைத் தடையாகக் கொள்ளாமல், ஜனாதிபதி செயற்படுத்தியுள்ளார்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரைவான வேலைத்திட்டத்துக்கு பங்களிக்க முடியும் என்று இலங்கை வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தனர்.

1839ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை வர்த்தக சங்கம், தற்போது 560 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் தழுவிய வகையில் பிராந்திய வர்த்தக சபை குழுமம் வியாபித்துள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் மூலம் நாட்டை வேகமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ஜனாதிபதி முன்னெடுத்து வரும் முயற்சிகளை சங்கத்தின் புதிய அதிகாரிகள் பாராட்டினர்.

வீதி வலையமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் வேகமாக அபிவிருத்திச் செய்யப்பட்டுள்ளன. அதன் நன்மைகள் குறுகிய காலத்தில் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினைச் செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இலங்கை வர்த்தகச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மீள்பிறப்பாக்க வலுச்சக்தி, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை, வர்த்தக சபையின் தேசிய கொள்கைகள் குழுக்கள் விசேட கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நடைமுறையில் உள்ள சில சட்ட திட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதைரியமடைந்துள்ளனர். இதுபோன்ற தடைகளை நீக்குவதும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஜனாதிபதி கூறினார்.

அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் முன்வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்க அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கை வர்த்தகச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹான்ஸ் விஜேசூரிய, புதிய தலைவர் வி. கோவிந்தசாமி மற்றும் இலங்கை வர்த்தக சபையின் புதிய பணிக்குழாமினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.