உதிர்ந்த மலர்களுக்கு உள்ளத்தால் அஞ்சலி...!

14/08/2006அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலை.


துயிலறை  விட்டு துள்ளலோடு

துள்ளிக் குதித்து எழுந்த சிறுமிகளின் துள்ளல் நிற்கும் முன்னே -அவர் உயிர்

துடிப்பையே ஒரு நொடியில் நிறுத்தி விட்டான்.


வானுயரப் பறந்து வந்த வல்லூறுகளின் இரைச்சல் இன்னும் காதுகளில் எதிரொலிக்கிறது. திட்டமிட்டு பிஞ்சுகளைக் கொன்று வஞ்சம் தீர்த்தானே பாவி...


சொல்லாமல் போன உங்கள் மௌனம்

சொல்லிச் சென்றது பல விடயங்களை

எல்லோரும் நிறைந்து இருந்தும்

எதுவும் சொல்லாமல் போனது ஏனோ...?


எண்ணற்ற  எண்ணங்களை தினம்

எண்ணத்தில்  சுமந்து உங்களை

எண்ணி எண்ணியே  ஆயிரம்

ஏக்கங்களோடு  ஏங்குகின்றோம்....


சில்வண்டுகளின் ரீங்காரம் போல்

சிதைக்கப்பட்ட ஆன்மாக்களின் குரல்கள்

செவிப்பறையில்  தினம் முட்டிமோதி குருதி வழிகின்றது...


மறுக்கப்பட்ட நீதியை வேண்டி

மானசீகமாக இரஞ்சுகின்றன...

மனிதாபிமானமற்ற உலகில்

மனிதத்தை மதிக்கும் மனங்கள் தான் எங்கே....?


முடிவற்று போனவர்களின் முடிவை எதிர்பார்த்து இன்னும் மூச்சை இழுத்து வைத்து பலர் முனகல்களோடு காத்திருக்கின்றார்கள்... முடிவு வரும் என்ற எண்ணத்தில்....


வாரீசுகளை வாரிக்கொடுத்து

வாடி நிற்கும் உறவுகளின்

வதனங்கள் வருடங்கள் பல கடந்தும் இன்னும் மலரவில்லை-அவர்

வாழ்வும் இன்னும் சிறக்கவில்லை....


செஞ்சோலை  நிலம் முழுதும்

செங்குருதியால் சிவந்தது அப்போ...

பிஞ்சுகளும் பெரியவரும்

அஞ்சி ஓடி அலறித் தவித்து 

கதறித் துடித்து கண்ணீர் விட்டு

உயிரை நீத்து வெற்றுடலாகிப் போனாரே....


ஆறாத் துயர் உடனும்

தீராத வேதனை உடனும்

சோர்ந்து போனோம்

சோதரிகள்  உம்மைக் கண்டு

செய்வதறியா மனநிலையில்

திக்கற்று ஏதிலிகளானோம்....


நினைவுகளோடு

    அருந்தமிழ்

    13/08/2021





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.