'பொய்யா விளக்கு':ஆவண சாட்சியம்
'உண்மை எல்லாருக்கும் தெரியும்'என்று மருத்துவர் வரதராஜாவின் மனைவி, 'பொய்யா விளக்கு'படம் முடிவடையும் தருணத்தில் கூறுவார். இலட்சக்கணக்கான மக்கள், முள்ளிவாய்க்காலுள் நெருக்கித் தள்ளப்படும்வரையிலும் அதன் பின்னரும் என்ன நடந்ததென்பதை உலகநாடுகள் அறியும். இனப்படுகொலையை நடத்திமுடித்தவர்களும் அறிவார்கள். ஆனால், இலங்கை அரசதரப்பானது, அவ்வாறு ஏதும் நிகழவில்லையென்பதை தொடர்ந்து மறுத்துவருகிறது. அந்த மறுப்பு எத்தகைய அபத்தமானது, பொய்யானது என்பதை, இறுதிவரை மக்களோடு இருந்து, அவர்களுக்கு மருத்துவத் தொண்டூழியம் புரிந்து, ஈற்றில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, துப்பாக்கிமுனையில் 'அப்படி ஏதும் நிகழவில்லை'என சொல்லவைக்கப்பட்ட மருத்துவர் வரதராஜா அவராகவே தோன்றி வாழ்ந்த 'பொய்யா விளக்கு' படத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் திரைப்படத்தை தனேஷ் கோபால் இயக்கியுள்ளார். அமேசான் பிரைமில் பார்க்கக் கிடைக்கிறது.
இப்போது அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் மருத்துவர் வரதராஜாவின் உண்மைக் கதையே இதுவாகும். காயமுற்றுக் கதறும் மக்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறும்படி அரசதரப்பால் வற்புறுத்தப்பட்டபோதிலும் அதை மறுத்து அங்கே தங்கிய அவர் தன் கண்ணால் கண்ட காட்சிகளை திரைப்பட சாட்சியமாக்கியுள்ளார். ஏற்கெனவே செய்திகள் மூலம் அறியப்பட்டவை, சானல் 4 இன் 'இலங்கை: கொலைபடு களம்'இன்னபிற ஆவணப் படங்கள், எழுத்து சாட்சியங்கள் இவற்றோடு இந்த 'பொய்யா விளக்கு'ம் இணைகிறது.
எவ்வளவுதான் மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு பார்க்க எத்தனித்தாலும், மனிதமனத்தின் தாங்குதிறனுக்கு அப்பாற்பட்டதாகவே அந்தக் கொலைபடுகளம் அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொருவரும் தத்தம் உளவாரோக்கியத்தின் நிமித்தம் இத்தகைய படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதும் ஒருவகையில் தப்பித்தலே. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரும் நெருப்பு அணையாமலிருப்பதற்கு இத்தகைய ஆவணப்படங்கள் அவசியமாகின்றன.
போர்க்களத்தினுள் நின்று தம் சகமனிதர் கொல்லப்படும் கொடூரத்தைக் காண்பதென்பது வாழ்நாள் துயரம். நீளும் துர்க்கனவு. மனப்பிறழ்வுக்கு இட்டுச்செல்லக்கூடியது. இன்னுஞ் சொல்லப்போனால், இனப்படுகொலைக்குச் சாட்சியமாயிருந்தவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. அவர்கள் இறந்தகாலத்தின் இரத்தச்சகதியினுட் சிக்கி மீளமுடியாதவர்களாகவே இருப்பார்களென்பதற்கு மருத்துவர் வரதராஜாவே சாட்சி.
சித்திரவதையாளர்கள் தமக்குத் தேவையான ஆயுதங்களை கலைநேர்த்தியுடன் அடுக்கிவைப்பதைப் போல, எல்லாம் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டே நிகழ்த்தப்பட்டுள்ளன. ஓரிடத்தில், மருத்துவர் வரதராஜா தன் மேலிடத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ உதவி கேட்பார்: "இங்கு மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற எங்களிடம் மருத்துகளோ மருத்துவ உபகரணங்களோ இல்லை". அதற்கு அந்த மருத்துவ அதிகாரி கூறும் பதில், "அவர்களை அங்கேயே விட்டுவிட்டு நீங்கள் வெளியேறுங்கள்"என்பதாகவே இருக்கும். மேலும், "இங்கே மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். நீங்களோ எண்பதாயிரம் பேர்தான் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஏன் அவ்விதம் கூறுகிறீர்கள்?"என வரதராஜா வினவுவார். அதற்கான பதில் என்னவென்பதை நாமறிவோம். எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும்போது, கொல்லப்படும் மக்களுக்குக் கணக்குக் காட்டவேண்டியதில்லை. தன்னுடைய கொலைவெறியாட்டத்தை தான் விரும்பியவண்ணம் ஆடித் தீர்க்க இலங்கை அரச தரப்பு திட்டமிட்டிருந்திருக்கிறது என்பதே அதற்கான பதிலாகும்.
"எங்களுக்கு என்ன தேவையோ அதை நீ சொல்லவேண்டும். அதைத் தவிர்த்து வேறெதையேனும் சொல்வாயானால், உன்னுடைய குடும்பம் உயிரோடு இருக்காது. நீ இருக்கமாட்டாய். நாங்கள் உனக்கு என்ன சொல்லித் தந்திருக்கிறோமோ அதையே செய்தியாளர் சந்திப்பில் சொல்லவேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ அல்ல"என்பது, கொல்லும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள சித்திரவதையாளரின் குரல். அந்த அச்சுறுத்தலுக்கு அக்கணம் இணங்கி, உயிரோடு வெளியேறி இன்று ஐக்கியநாடுகள் சபையில் இனப்படுகொலைக்கான சாட்சியமாக மருத்துவர் வரதராஜாவின் குரல் ஒலிக்கிறது.
காண நேர்ந்த காட்சிகளால் மனம் பிறழ்ந்து அலையும் அந்த இளைஞன், தன் பிள்ளையைப் பறிகொடுத்தபின்னும், மக்களைக் காப்பாற்றுவதற்காக மனிதாபிமானத்தோடு சளைக்காது உழைக்கும் செல்வம், மகனைப் பறிகொடுத்து பேரப்பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கும் முதியவர், ஐ.நா.அதிகாரி எல்லோரும் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக வாழ்ந்திருந்தார்கள். நடித்திருந்தார்கள் என்றெழுத கைகூசுகிறது.
'உண்மைக்கு ஒரு சாட்சி இருந்தாகணும்
உதிர்ந்தாலும் விதையாகிப் பயிராகணும்'
அற்புதமான இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
இனியொரு போர் வேண்டுமென மனச்சாட்சியுள்ள எவரும் எண்ணமாட்டார்கள். ஆனால், தம் நலத்திற்கு ஊறும் நன்மையும் ஏற்படுவதற்கிணங்க போர்க்குற்றத்தின் தராசு முள்ளை உயர்த்தியும், தாழ்த்தியும் வரும் சக்திபொருந்திய நாடுகளுக்கு, இந்த 'பொய்யா விளக்கு' ஒரு கட்டத்தில் உதவும். உதவவேண்டும்!
இந்த ஆவண சாட்சியத்தை நேர்த்தியான கலைப்படைப்பாக்கிய இயக்குநர் தனேஷ் கோபாலுக்கும், தான் கிடந்துழன்ற இருண்ட காலத்தை மீண்டுமொரு முறை வாழ்ந்து இனப்படுகொலையின் சாட்சியமாக்கிய மருத்துவர் வரதராஜாவுக்கும் பாராட்டுகள்.
கருத்துகள் இல்லை