மறக்க முடியாத நடிகை சித்ரா

 


ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு இன்று பலர் அவராக நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், கங்கணா ரணாவத், நித்யா மேனன் என பலரும். ஆனால் யாருமே ஜெயலலிதா போல் இல்லை என்பதே நிஜம். அவர் உயிரோடு இருந்தபோதே கம்பீரமாக ஜெயலலிதாவாக நடித்தார் ஒரு நடிகை.

அவர் அளவுக்கு பந்தம் இப்போது ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகைகளுக்கு இல்லை.

அவர் தான் மறைந்துவிட்டசித்ரா.

சித்ரா ரஜினியின் அவள் ஒரு தொடர்கதை, ஷூட்டிங் பார்க்கச்சென்று பாலச்சந்தரின் கண்ணில் பட முதன்முதலில் கேமரா முன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கேள்வியின் நாயகனே பாட்டில் ரஜினி தரும் கடிதத்தை ஸ்ரீவித்யாவிடம் ஓடிச்சென்று கொடுத்த சிறுமி சித்ரா. பின் 'அவள் அப்படித்தான்' படத்தில் சிறுவயது ஸ்ரீப்ரியாவாக ருத்ரய்யா இயக்கத்தில் நடித்தார்.

அடுத்து பெரிய பெண்ணாகி சிங்கீதம் சீனிவாசராவின் 'ராஜபார்வை' படத்தில் கமலை திருமணம் செய்ய வரும் பார்வையற்ற பெண்ணாக.....எல்லோருமே சிறந்த இயக்குனர்கள்.

பின் 'என் உயிர் நண்பா' படத்தில் நாயகி. ரஜினியின் ஊர்க்காவலன் படத்தில் மையக்கரு ரோல்.

'புத்தம் புது பயணம்' படத்தில் நர்சாக வருவார். ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும் சித்ரா மறக்கமுடியாத கதாபாத்திரம். ரொம்ப ரொம்ப பாப்புலராக்கியது. இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் தான். இதயத்துக்கு இதமானது இதயம் நல்லெண்ணெய் என சொன்னவரின் இதயமே நின்று போனது காலம் குறித்த முரண்.

தமிழில் கவனிக்கப்படவில்லை என்றாலும் மலையாளத்தில் சித்ரா மாதக ராணி என சேட்டன்களால் போற்றப்பட்டவர். முதல் படமே மோகன் லாலோடு தான் நடித்தார். 90களில் தான் 'அத்வைதம்' படத்தில் 'நீலக்குயிலே சொல்லு' பாடல் மோகன்லாலோடு மழைப்பாடல். என்ன ஒரு பாவனை

'அமரம்' படத்தில் முரளியின் வயது ஆகியும் திருமணம் செய்யாத தங்கை. ப்ளஸ் டூ படிக்கும் பெண் குழந்தைக்கு தந்தையான மம்முட்டியை விரும்பும் அவர் வரும் காட்சிகள்...அடடா ரகம். அதுவும் இயக்கம் பரதன். அழகாக்க அவரை விட வேறு யார்.

சுரேஷ் கோபியின் 'ஏகலவ்யன்' படத்தில் அவர் ஹேமாம்பரம் என்கிற பெண் சாமியாராக வருவார். அவர் பாடும் துக்கம் கலந்த 'நந்த கிஷோரா ஹரே மாதவா' அன்றைய காலத்து ஹிட் பாடல்.

மோகன்லாலின் தேவாசுரத்தில் லாலின் முன்னாள் வைப்பு. அழகாக நடித்திருப்பார். அவரை விலை பேச வரும் நெப்போலியனை பேசி ஓட்டி விடும் நடிப்பு சிறப்பு.

இப்படித்தான் உச்சத்தில் நடித்துக்கொண்டிருந்த போது 98ல் 'மந்திரி மாளிகையில் மனசம்மதம்' என்கிற படத்தில் ஜெயலலிதாவாக நடித்தார்.

ஜெயக்குமாரி என்கிற மந்திரி ரோல் சித்ராவுக்கு. சசிகலாவாக இப்படத்தின் நாயகியாக நடித்த மீரா என்கிற நடிகையின் நிஜ அம்மா நடித்தார். சும்மா சொல்லக்கூடாது. கனக்கச்சிதம் அவருக்கு ரோல்.

மலையாளிகளின் ஸ்பூஃப் ரோலாக ஜெயலலிதாவின் வேடம் ஜெயக்குமாரியாக மாற்றி எடுக்கப்பட்டது. சசிகலா சொர்ணகலாவாக்கப்பட்டார். நாயகனாக ஷீலாவின் மகன் ஜோர்ஜ் விஷ்ணு, மீரா நாயகியாக நடித்தனர்.

சித்ரா நடித்துக்கொண்டிருக்கும் போதே தாயார் இறந்து விட தந்தைக்கும் உடல்நலமில்லாமல் போகிறது. அதனால் நடிப்பை ஒதுக்கி விட்டு தந்தையை கவனித்துக்கொள்ள செல்கிறார். அப்போதே விஜயராகவன் என்கிற தொழிலதிபரோடு திருமணம் நடக்கிறது.

பல வருடங்களுக்குப்பின் சினிமாவுக்கு திரும்பிய அவரை காலம் இவ்வளவு சீக்கிரம் கொண்டு போகுமென நினைக்கவில்லை. அழகான நடிப்பு இருந்தும் ஏனோ நாயகியாக வரமுடியவில்லை. மறக்க முடியாத சித்ரா, ஆகஸ்ட் 21 அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

-இராமானுஜம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.