வெற்றியைத் தொடருமா இந்தியா?

 


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்சில் (ஆகஸ்ட் 25) தொடங்குகிது. கடந்த ஆட்டத்தைப்போல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிரடி ஆட்டம் தொடருமா என்ற ஆவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், மழையால் முடிவு பாதிக்கப்பட்டது. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்குச் சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியைப் பெற்றது.

இதே போல மூன்றாவது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை. முதல் இரண்டு போட்டியைப் போலவே இந்த டெஸ்டிலும் நான்கு வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஒரு வேளை ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளது. லீட்ஸ் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அஸ்வின் இடம் பெற்றால் இஷாந்த் சர்மா நீக்கப்படுவார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், கிறிஸ்வோக்ஸ், பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. மார்க்வுட் இடத்தில் சகிப்மெக்மூத் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 129ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 128 போட்டியில் இந்தியா 30இல், இங்கிலாந்து 48இல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

-ராஜ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.