பணமொன்றே வாழ்வாகா!!


பெரும்சொத்து பணமன்று வீடு மன்று

   பெயர்சொல்ல வாங்குகின்ற நிலமு மன்று
அரும்பாடு பட்டவற்றைச் சேர்த்த போதும்
     அதுவெளியே சொல்லாமல் ஓடிப் போகும் !
இருக்கின்ற போததனை அனுப வித்தும்
     இன்பமாக வாழ்வுதனை நடத்து தற்கும்
அரும்உடலோ நோயின்றி இருக்க வேண்டும்
     அறுசுவையில் உணும்நிலையும் நமக்கு வேண்டும் !

பணத்தோடே இனிப்புநோயும் சேர்ந்தி ருந்தால்
     பணந்தன்னை வேடிக்கை பார்ப்ப தன்றி
உணவுண்ண இயலாது பழங்க ளையும்
     உண்ணுதற்கு முடியாமல் ஏங்க வேண்டும் !
பணத்துடனே இரத்தழுத்த நோயும் வந்தால்
     பசியடக்க உப்பில்லா சோறு தானே
கணக்கின்றிச் செல்வந்தான் இருந்த போதும்
     கவலையின்றி இருந்தால்தான் வாழ்வி னிக்கும் !

போதுமென்ற மனமில்லாப் போது வெற்பாய்ப்
     பொருள்வீட்டுள் இருந்தபோதும் அமைதி தாரா
ஊதுகின்ற பலூனைப்போல் பெருக்கு தற்கே
     உடல்மனத்தின் செயலிருந்தால் பயனே இல்லை !
ஏதுமின்றிப் பதவிபணம் எதுவு மின்றி
     எழில்மனமும் கொடைப்பண்பும் இருந்தால் போதும்
மோதுபவர் எவருமின்றி மதிப்பு யர்ந்து
     மொத்தத்தில் வாழ்வினிலே மகிழ்ச்சி துள்ளும்!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.