இலங்கை - ருமேனியா நட்புறவு புதிய தலைவர் நியமனம்

 


இலங்கை - ருமேனியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இச்சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியூடியா மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல புதிய செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி பொருளாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் ஹாசிம் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கை-ருமேனிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதானது இருநாட்டு பாராளுமன்றங்கள் மற்றும் மக்களுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவுகளை மேலும் விருத்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

1957ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியே இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகியதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினர். கொவிட்-19 தாக்கம் குறைவடைந்ததும் இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் கல்விச் சுற்றுலாக்களுக்கான வாய்ப்புக்கள் பல இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை-ருமேனிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மேலும் விருத்தி செய்யப்படும் என்றும், இது விடயத்தில் தூதுவரின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.