விஜய் என்ன சாதி? ரகசியத்தை வெளியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்!

 


ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அந்தோணி சாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’.

இந்தப் படத்தில் விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ளார். சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத் தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன்.சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவர்களது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(செப்டம்பர் 11) காலை சென்னையில் பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, மாணவர்களிடம் சாதி சாயம் பூசக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்திற்கு பயன் தரும் படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..?

என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் குறிப்பிட்டேன். முதலில் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். பள்ளியை மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறிய பின்புதான் அமைதியாக ஒப்புக் கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் ‘சாதி’ என்கிற இடத்தில் ‘தமிழன்’ என்றுதான் இருக்கிறது.

சாதிக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

பாலிவுட் கதாசிரியரான சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்கு பெயர் வைப்பார். அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு ‘விஜய்’ என்றுதான் பெயர் வைப்பேன். அதனால்தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன். விஜய் என்றாலே ‘வெ‌ற்றி’ என்றுதான் அர்த்தம். அந்த வெற்றி இவரோடு ஒட்டிக் கொள்ள வேண்டும்..” என்றார்.

படத்தின் நாயகனான விஜய் விஷ்வா பேசும்போது, ”அட்டக்கத்தி’, ‘குட்டிப்புலி’ ஆகிய படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பின்னர் மீண்டும் அவர்களை தேடி வாய்ப்பு கேட்க போனபோது அங்கே சாதி பார்க்கப்படுவது போல உணர்ந்தேன். அதனால் சாதி பார்க்காத ஆட்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என முடிவெடுத்தேன்.

இன்று இந்த விழாவுக்கு நிறைய சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தோம். ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட சாதி தலைவரின் நினைவு நாள் என்பதால் அதை வைத்து தாங்களாகவே தொடர்புபடுத்திக் கொண்டு இந்த விழாவுக்கு வர மறுத்துவிட்டார்கள்.

தற்போது தமிழில் நிறைய படங்கள் சாதியை பற்றி வருகிறது. ஆனால், இந்தப் படத்தில் சாதியை பற்றியே பேச வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ”சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்கக் கூடாது என ஒரு மசோதாவை தாக்கல் செய்துவிட்டால் போதுமே.. ஆனால் அதை செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள்.

நானும் ‘சின்னக் கவுண்டர்’ போல சாதி பெயரில் படம் எடுத்தவன்தான். ஆனால் எந்த சாதியையும் தூக்கி பிடிக்கவில்லை. யாரையும் தாழ்த்தியும் பேசவில்லை. இது போன்ற சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இங்கே பேசிய இயக்குநர் சாய் ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் ‘அம்மா திரையரங்கம்’ என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்த ஆட்சியில் அதை ‘கலைஞர் திரையரங்கம்’ என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்கும் சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டித் தந்து சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று பேசினார்.

படத்தின் இயக்குநரான அந்தோணிசாமி பேசும்போது, ”எஸ்.ஏ.சி. சார் சொன்னதுபோல சினிமாவில்தான் சாதி பார்ப்பது இல்லை என்கிற நிலை முன்பு இருந்தது. ஆனால், இப்போது சினிமாவில் சாதி பற்று கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ தொடங்கியுள்ளது.

‘திரௌபதி’ படத்தின் இயக்குநரே படத்தின் போஸ்டரில் தன் சாதிக் கொடியை பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டி விழாவிற்கு வர மறுத்து விட்டார். இப்போது என்னால் நிறைய பேச முடியவில்லை.. அடுத்தடுத்த மேடைகளில் நிறைய விஷயங்களை சொல்லப் போகிறேன்…” என்று கூறினார்.

-இராமானுஜம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.