மனம் வெந்து தணிகிறது..!!

 


இனிமையான எந்தன் வாழ்வை

யுத்தம் தின்று ஏப்பமிட்டது
உதவிடும் என நினைத்த கரங்களும்
உதறித்தள்ளியதே பெரும் துயரம்

ஏழ்மை என்னை வாட்டுவதால்
இதயத்தில் விசும்பல்கள் அதிகமாகிறது

ஏழையாகிப்போன மனம்
சுமை தாங்க முடியாது
நீரின்றியே தரையில் முக்குளித்து எழுகிறது

யுத்தத்தின் கோரத்தால்
கட்டிய கணவனுமில்லை
எஞ்சிய பிள்ளைகளிற்கு கால்வயிறு
நிரப்பிட வழியுமில்லை

கல்லாகிப்போன கடவுளிடம்
கையேந்தி மன்றாட மறந்ததுமில்லை
எங்கள் மன்றாட்டமதை செவிசாய்க்க அவனிற்கு நேரமும் இல்லை

தொண்டை அடைக்கும் துயரமும்
வெளிவரத் துடிக்கும் கண்ணீரும்
முட்டி மோதுவதால்
குழிக்குள் அகப்பட்ட கும்பிடுபூச்சியாக
தவிக்கிறேன்

சன்னங்கள் துளைத்ததால்
நோயாளியென்றாகி தள்ளாடுகிறது தேகம்
ஆறுதல் தந்து கைகொடுக்க உற்ற உறவென்று யாருமில்லை
வெறுமையாகிப்போன வாழ்க்கை
பாடாய்ப் படுத்துதே

கொரோனா என்ற கொடிய நோயினால்
கூலி வேலையுமிழந்து
ஏழ்மையால் வாடி வதங்குகிறோம்
கந்தல் உடையோடு தவிக்கிறோம்

கருகிப்போன காட்டைப்போல்
மனம் வெந்து தணிகிறது
காலமே எனக்கு எப்போது
நல்வழி தருவாய்
என் பிள்ளைகள் வயிறு முழுமையாக
நிரப்புவதற்கு

தீராத ஏக்கங்கள் தொடர்கதையாகிறது அடிவானமும் தலைசாய்க்கும்
நான் பெற்ற பிள்ளைகளின்
பசியின் அழுகுரல் கேட்டால்.

-பிரபாஅன்பு-
யாழ்ப்பாணம்
14.09,2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.