மன்னாரின் முத்து- மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன்!

 “4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும்.


எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும்.

வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும்.

நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும்.

சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை.

மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சுபன் காட்டிய கரிசனையையும், அவனுக்கும் மக்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் பரஞ்சோதி சொல்லிக் கொண்டிருந்தான்.

“குடுபங்கள் பிரிஞ்ச சிக்கல் எண்டால் சுபன் நேரடியாகவே தலையிடும். எவ்வளவு குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கும்.”

மன்னாரில் கள்ளியடியில் பிறந்த சுபனின் குடும்பம் பெரியது. ‘அண்ணே…… என்னை வளர்க்க எனது அப்பர் 100 மாடு வளர்த்தாராம்’ என்று சுபன் சொல்லிச் சிரிக்கும்.

மழைக்கு இருண்ட வானத்தில் மின்னல் வந்து சிறிது நேரம் தரும் வெளிச்சத்தில் இருட்டே தெரியாதது போல, சுபன் சிரிக்கும்போது அவனது பல்லின் வெண்மையில் அவன் கறுப்பு முகம் மறைந்து போகும். மாட்டில் பால் கறக்கும்போது ‘சர்’, ‘சர்’ என சீராக வரும் ஒளிபோலவே சுபன் கதையும் சீராக, மெல்லிய இசை நயத்துடன் ஒலிக்கும்.

“அப்பர் சொந்தமா மாடு வளர்த்தவரோ, இல்லை ஊரிலை இருக்கும் மாடுகளைப் பிடித்து வந்து அடைத்து வளர்த்தவரோ” என நாம் சுபனைக் கிண்டல் செய்வதுண்டு.
“இந்தியாவிலே பயிற்சி முகாமிலே, சுபனை மாட்டுக்குள்ளதான் காணலாம். சுகயீனமான பயிற்சிப் போராளிகளை பராமரிக்கப் பால் தேவைப்பட்டது. அதை சுபன் செய்தது.”

தமிழ்நாட்டில் ஒரு மலைப்பகுதியில் இந்த பயிற்சி முகாம் இருந்தது. அடிக்கடி கிழே வந்து பால் எடுத்துச் செல்லமுடியாது.

மன்னாரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையை சுபன் காட்டினான்.

விதைக்காத நெல்வயல்களை விதைக்க முயற்சி செய்தான்.

மக்கள் குறை தீர்க்க அடிப்படை வசதிகளை அங்கே அமைக்க முயன்றான்.

‘உயிலங்குளத்திற்கும் அடம்பனுக்கும் இடையில்தான் மன்னார் நகரம் அமைய வேண்டும்’ என சுபன் அடிக்கடி கூறும். ‘தமிழீழத்தில் அப்படித்தான் இருக்கும்’ என சொல்லிக் கொள்ளும்.

மன்னார் மாவட்ட போராளிகளின் குடும்பங்களின் துன்பங்கள் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும்.

மன்னாரில் வீரச்சாவைச் சந்தித்த எல்லாப் போராளிகளின் நிழற்படங்களுடன் கூடிய ஒரு வீடு. முதன் முதலில் தமிழீழத்தில் மன்னாரில் தான் அமைக்கப்பட்டது.

“மாவீரர் துயிலும் இல்லத்தை மிகவும் சிறப்பாக அமைக்க சுபன் கவனம் எடுத்திச்சு. அடிக்கடி சென்று பார்க்கும். கடைசியாகவும் பல வேலைகளைச் செய்யச் சொல்லிச்சு. ஆனால் பார்க்கத்தான் ஆள் இல்லாமல் போச்சு.”

பரஞ்சோதியின் நா தளதளத்தது.

“எதையும் ஆழமாகச் சிறப்பாகச் செய்யணும் எனச் சொல்லும்; செய்தும் காட்டும்.”

“தோரணம் கட்டிக்கொண்டு நின்றேன். சுபன் வந்ததைப் பார்த்தேன். ஏதோ பிழை பிடிக்கும். பின் தானே நின்று கட்டிக்காட்டும். நான் ஒழிச்சிடுவேன். ஆள் வந்திச்சு. பார்த்து விட்டு தோரணங்களை அவிட்டுக் கட்டிச்சு. பரஞ்சோதி எங்கே என்று கேட்டுது போனேன்.”

“தோரணம் கட்டினது சரியா” என்று கேட்டது. “சரிதான்” என்றேன்.

“ஒன்றிலை நாலு முசிச்சு கட்டி இருக்கிறீங்க, இன்னுமொன்றிலே மூன்று முடிச்சு போட்டிருக்கிறீங்க. எல்லாம் ஒரு சீராக இருந்த நல்லதுதானே” என்று சொல்லிச்சு.

“இப்படித்தான் எந்த விடயமென்றாலும், அது சின்ன விடயமென்றாலும் சரியாகச் செய்ய வேண்டும். எனச் சொல்லும்.”

“பிழை யாரும் விட்டா கண்டிக்கும். பிழைகளை தெளிவாக விளங்கப்படுத்து.”

“கண்டிச்சுப்போட்டு நல்லா அரவணைக்கும்.”

“கண்டிப்பும், அரவணைப்பும் அதை எப்போதும் குறிப்பிட மறந்திடாதீங்க” என்றான் பரஞ்சோதி.

“பண்டிக் கருக்கள் என்றால் சுபனுக்கு விருப்பம். தொதொல், மசுகெட் இருவும் விருப்பம்.”
“ஆள் நல்லா சமைக்கு. ஓய்வா இருந்தா சமைக்கும்; சமைச்சு எல்லோருக்கும் சாப்பிட கொடுக்கும்.”

ஒரு நாள் ஒரு ஐயாவை கூட்டி வந்தாங்க. அவர் சமையலிலே பெரிய ஆள் அதைச் செய்வார் இதைச் செய்வார் எண்டாங்க.

சுபன் விதவிதமாக ‘அது செய்வீங்களா இது செய்வீங்களா எனக் கேட்டுது. அவருக்கு ஒன்றுமே செய்யத் தெரிந்திருக்கலை. சுபன் தான் அவருக்கு செஞ்சுகாட்டும்.

அந்த ஐயாவும் சமையலும்………… அது பெரிய பகிடி

மழை பெஞ்சா இரவிலே நித்திரை இல்லை என்று தெரிஞ்சுக்கணும். சுபன் வேட்டைக்குப் போகும். நாங்க துவக்கி தூக்கினா மானுக்கோ, முயலுக்கோ தாங்க தப்பிக்கலாம் எனத் தெரியும்.

சுபன், ‘நீ போய் எடுத்து வா’ என்று சொல்லிவிட்டு சுடும். குறி தப்பாது.

குறி தவறாமல் சுடுவதில் மட்டுமில்லை, ஆயுதங்களில் சுபன் மிக கவனம். எத்தனையோ போராளிகளின் குருதிசிந்தி பெற்ற ஆயுதம்’ என்று அடிகடி சொல்லி, ஆயுதங்களை மிக கவனமாகக் கவனிக்கும்.

ஆயுதம் பேணுதல் எப்படி இருக்க வேணும் என்று நான் விளக்கத் தேவையில்லை. அது உங்களுக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டு பரஞ்சோதி.

கண்டிப்பும், அரவணைப்பும் அது முக்கியம் அதை மறந்திடாதேங்கோ என்றான்.

மடு ஏதிலிகள் தங்ககத்தை ஒழுங்குபடுத்த சுபன் கடுமையாக உழைத்தான்.

இப்படியான ஒரு சிக்கலை மன்னார் சந்தித்தது. இது தான் முதல் தடவை.

இருக்கும் குறைந்த வசதிகளுடன் தன்னால் இயலக் கூடியதை அவன் செய்தான்.

இந்தியாவில் பயிற்சி முடித்து திரும்பிய சுபன், லெப்.கேணல் விக்டரோடு நின்று மன்னாரில் செயற்பட்டான். 1986 இன் நடுப்பகுதியில் மன்னாரில் நடந்த ஒரு சண்டையில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற சுபன். அதன் பின் தலைவரோடு மூன்று ஆண்டுகள் நின்றான்.

02.04.1987 காங்கேசன்துறை தங்ககத்தில் சிறிலங்கா படைகளுடனான மோதலில் காயமடைந்தான்.தலைவர் பிரபாகரனைத் தேடி, மணலாற்றுக் காட்டில் இந்தியப் படையினர் ‘செக்மேற்’ 1, 11, 111 என்ற இராணுவ நடவடிக்கைகளைச் செய்தபோது, அந்தச் சண்டைகளில் நின்றான்.

15.04.1989 அன்று வெளி ஓயாவில் சிங்களப்படையை மறைந்து தாக்கிய நிகழ்ச்சியில் முதன்மைப் பங்கு வகித்தான்.

1989 நடுப்பகுதியில் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான்.
சுபன் பொறுப்பேற்று சிறிது காலத்தில், மேஜர் சுட்டியின் தலைமையில் மன்னார் மருத்துவமனையில் இந்தியப் படையின் சிறிய தங்ககம் மீதான தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலில் 24 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.

நாலு ‘பிறண்’ இலகு இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

1990 இன் ஆரம்பத்தில், கிளிநொச்சிக் காட்டுப் பகுதியில் இருந்த ஈ.என்.டி.எல்.எவ் துரோகக் கும்பலின் முகாம்மீது நடாத்தப்பட்ட பெரிய தாக்குதலில், சுபன் ஒரு பகுதி பொறுப்பாக இருந்தான்.

தமிழீழ – சிறிலங்காப் போர் மீண்டும் வெடித்த பின் தலைமன்னார் பழைய பாலம் படைத்தங்ககம் (15.06.1990), கயுவத்தை தங்ககம் (21.06.1990) என்பன முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன.

கயுவுத்தையில் இருந்த பவல் வாகனம் ஒன்று கையகப்படுத்தப்பட்டது.

சிலாவத்துறை, ஆனையிறவு படைத் தங்ககங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சுபன் கலந்துகொண்ட முக்கிய தாக்குதல்களாகும்.சுபனின் காலத்தில் வஞ்சியன் குளத்திலும் (29.04.1991) வேப்பங்குலத்திலும் (30.03.1992) நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்கள் புகழ்பெற்ற தாக்குதல்களாகும்.

வஞ்சியன் குளத்தில் 60 இற்கும் மேற்பட்ட படையினரும், வேப்பங்குளத்தில் 24 படையினரும் கொல்லப்பட்டனர். இவற்றில் இருந்து முறையே 50 இற்கும் 30 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டன.

தமிழீழத்தில் மிகப் பெரிய அளவில் காவல் உலா வந்த படையினர் மீது அதிரடித் தாக்குதால் நடத்தப்பட்டு அடிப்படை அணி முற்றாக அழிக்கப்பட்ட நிகழ்ச்சி வஞ்சியன் குலத்தாக்குதல் ஆகும்.

“வாங்கலை இறங்கு துறையில் வந்து அடிப்பம் (09.10.1990) என்று எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அங்கு தாக்குவிட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் வெளியே வேண்டும். அத்தாக்குதலில் 6 படையினர் கொல்லபட்டனர்.

பூநகரித் தாக்குதல் பற்றி (25.09.1992) நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. இரண்டரை மைல் இராணுவ வேலியை அழித்து, 62 காவலரண்களை தகர்த்தோம். 25 படையினர் கொல்லப்பட்டாங்க. 30க்கு மேல் ஆயுதங்கள் கைப்பற்றினோம். அதில்தான்….. ஆள் காயப்பட்டுவிட்டது என்றுதான் சொன்னாங்க. உடம்பைத்தான் கொண்டுவந்தாங்க.

எந்தத் தாக்குதல் எண்டாலும் கடைசி வேவுக்கு சுபன் வரும். வந்து பார்த்து யார் யார் எங்கு நிலையெடுக்க வேண்டும். என்ன செய்யவேண்டும். என்று சொல்லும்.அதன் பிறகுதான் தாக்குதல் நடக்கும். ஆள் பக்கத்திலே நிக்குது எண்டாலே ஒரே உற்சாகமாக இருக்கும்.

“அண்ணே, செய்ய முடியாது, என்று ஒன்றும் இல்லை” என்று சுபன் அடிக்கடி சொல்லும்.

சுபனின் அகரமுதலில் ‘முடியாது என்று ஒன்று இல்லை’.

– களத்தில் (11.12.1992) இதழிலிருந்து

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.