குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கியமானவை!




ஆரம்பத்தில் குழந்தைகளுக்குப் புரிந்து கொள்ளும் திறன் என்பது குறைவு. தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். சிறுவயதில் அவர்கள் அதிக நேரத்தைப் பெற்றோர்களுடன் தான் செலவிடுவர். எனவே பெற்றோர்களின் செயல்கள் மற்றும் பேச்சுக்களே குழந்தைகளின் மனதில் பதிந்து அதையே பின்பற்றத் தொடங்குவர். ஒரு விஷயத்தைச் சொல்லிப் புரியவைப்பதை விடச் செய்து காட்டுங்கள். ஒரு செயலை செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகளை உணர வையுங்கள். உங்களின் முழு நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். அவர்கள் காலையில் பல் துலக்குவதிலிருந்து இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு செயலையும் எதற்காகச் செய்கிறோம் என்று சொல்லிக் கொடுங்கள். நிறையக் குழந்தைகள் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆதலால் நீங்கள் ஒரு உணவைச் சாப்பிடச் சொல்வதற்கு முன் அந்த உணவைப் பற்றிய நல்ல கருத்துக்களைக் கூறுங்கள். உதாரணமாக, இட்லி மிகச் சுவையாக இருக்கும். மிக ஆரோக்கியமானது, இதைச் சாப்பிட்டால் நன்றாக விளையாடலாம். விரைவில் பெரியவனாகலாம் போன்ற நேர்மறை கருத்துக்களைக் கூறுங்கள். முக்கியமாக அன்பு, உதவி, விட்டுக்கொடுத்தல், ஒழுக்கம், மரியாதை போன்ற பண்புகள் மிக முக்கியமானது. அவர்கள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது அன்பாகச் சண்டை போடாமல் விளையாடச் சொல்லிக்கொடுங்கள். "சண்டைபோட்டால் உன்னுடன் யாரும் விளையாட வரமாட்டார்கள்", "சண்டைபோட்டால் அம்மாவுக்குப் பிடிக்காது என்று சொல்லுங்கள்". இவ்வாறு சொல்லிக்கொடுத்து வளர்ப்பதால், அவர்கள் விரைவில் நற்குணங்களைக் கற்றுக்கொள்வர். மிகமுக்கியமான ஒன்று, உங்கள் குழந்தையை அடிக்கவோ அல்லது அவர்களிடம் வெறுப்பாக பேசுவோ அல்லது குழந்தையின் முன் சண்டை போடவோ கூடாது. குழந்தைகள் எதையாவது கேட்டு அடம்பிடித்தால், உடனே செய்து விடாதீர்கள். "இல்லை" என்று அன்பு கலந்த கண்டிப்புடன் கூறுங்கள். இல்லையெனில், அடம்பிடித்தால் எதையும் அடைந்து விடலாம் என்ற மனநிலை உருவாகிவிடும். குழந்தையை வளர்ப்பது மிக முக்கியமான பொறுப்பு. அதனால் அவர்களுக்காக நேரம் செலவழித்து நற்குணங்களைக் கற்றுக்கொடுத்து நல்ல மனிதனாக உருவாக்குங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.