கொழும்பு ஊடகத்தின் செய்தி - உள்ளே கோத்தா, வெளியே ருத்ரா - பரபரத்த நியு யோர்க்!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது , இலங்கையை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பியதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்போது கோட்டாபயவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது.

இதன்போது  ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொலையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம்.

உகாண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் ஒருமுறை இந்த அரங்கில் உரையாற்றினார் என்பதையும் அறிவோம். இந்நிலையில் இந்த அரங்கில் கோட்டாபய உரையாற்ற அனுமதிக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குரலெழுப்பியிருந்தார்.

சர்வதேச நீதிப்பொறிமுறையினை நிராகரித்து உள்ளகபொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை கோட்டாபய வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை என்பது தமிழர்களின் நிலைப்பாடு மட்டுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு என்பதனை வலியுறுத்தினார்.

அத்துடன் இலங்கை அரசாங்கம் , அதன் அரசாங்க கட்டமைப்பு யாவிலும் ஆழவேரூன்றியுள்ள இனநாயகம், இனவெறியின் உண்மையினை உலகம் அறியும் என்பதோடு, இதன் ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமில்லை என்பதனை, சிறிலங்காவின் வரலாறு பல தசாப்தங்களாக நன்கு நிரூபித்துள்ளதாகவும் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்திருந்தார்.

தமிழினத்தின் மீது நடந்தேறிய குற்றங்கள் என்பது ஒரு தனிநபராலோ அல்லது தனிப் பட்டாலியனாலோ அல்ல, மாறாக சிறிலங்கா அரசால் நிகழ்தப்பட்டது. என்றும், குற்றத்தை புரிந்தரே நீதிபதியாக இருக்க முடியாது என்பது பொது அறிவு மற்றும் அடிப்படை சட்டக் கொள்கையாகும் என்பதனையும் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.

அதோடு கோட்டாபயவுக்கு தார்மீக தைரியம் இருந்தால், சிறிலங்காவின் தலைவராக ரோம் சட்டத்தில் கைச்சாத்திட்டு, பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்ததோடு, அவர் அதை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், ஏனென்றால் அவர் ஒரு கோழை எனவும் அவர் இடித்துரைத்தார்.

ஐ.நாவில் உரையாற்ற கோட்டாபய ராஜபக்சேவுக்கு ஐ.நாவின் நெறிமுறைகள் அனுமதித்தாலும், 1987ம் ஆண்டு ஐநாவில் பொதுச்சபைக்கு வருவதற்கு அப்போதைய ஒஸ்திரிய அதிபர் கர்ட் வால்ட்ஹெய்முக்கு விசா வழங்க மறுத்ததைப் போலவே, கோட்டாபயவுக்கும் அமெரிக்கா அனுமதி மறுத்திருக்கலாம் என்பதையும் கூற வேண்டும் கூறிய வி.உருத்திரகுமாரன், இரண்டாம் உலகப் போரில் அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் மறுக்கப்பட்டதனையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, கோத்தாவை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் அவர் நுழைவதை மறுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் கோரியிருந்த வி.உருத்திரகுமாரன், இன்று கோட்டாபயவுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் இங்கிருந்து ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பஷீருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் என்றும், நீங்கள் அவருடைய அணியில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளே உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் கோட்டாபயவை வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.