முகநூல் பதிவினால் கைதானோரின் உறவினர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

 


திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர்.தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்,  திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள்  ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் 27.11.2020 திகதியன்று, எனது மகனான பாலகிருஷ்ணன் ரதிகரன் (28 வயது)  முகநூலில் கவிதை ஒன்றினை பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுமார் ஒரு வருடமாக எனது மகனை இழந்து, எங்களது குடும்பம்  துன்பத்தில் உள்ளது. எனவே, ஜனாதிபதி எமது நிலைமையை உணர்ந்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சண்முகராஜா கலைச்செல்வி தெரிவித்துள்ளதாவது,  “கடந்த 02.07.2021 திகதியன்று  எனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) கைது செய்யப்பட்டார்.

மேலும், எங்களது குடும்பம் அவரது உழைப்பில்தான் வாழ்கின்றது. ஆகவே எனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டி வினோத் லிஷாலினி தெரிவித்துள்ளதாவது, “எனது கணவர் கிறிஸ்டி வினோத் (36 வயது) கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட எனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றது.

ஆகவே, அவரை விடுதலை செய்து எங்களது துயரை போக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.