பட்டப்பெயர்க் காலங்கள்..!!


நாங்கள் உட்பட ஒவ்வொருவருக்கும் சிறுவயது முதல் இன்றுவரை "பட்டப்பெயர்கள்" அற்ற மனிதர்களைக் காண்பது மிக அரிது. ஒவ்வொரு பட்டப்பெயருக்கும் பின்னால் அவர் சார்ந்த ஏதோ ஒரு பின்னணி நிச்சயம் இருக்கிறது. அது நக்கலாகவோ, சீரியஸான விடயமாகவோ, நகைச்சுவையகவோ இருக்கலாம்.


இன்று நாங்கள் திருமணமாகி கணவன் என்ற பதவியடைந்து , அப்பா புரோமோஷனும் பெற்று சமூகத்தில் பெரியவர்களாகி வெவ்வேறு நிலைகளில் வாழ்ந்தாலும் இந்தப் பட்டப்பெயர்களைச் சொல்லி அழைக்கும்போது அவை எங்களிடையே இருக்கும் நெருக்கத்தையும் நட்பின் ஆழத்தையும் மற்றவர்களுக்கு பெருமைபட இலகுவாக உணர வைத்து விடுகிறது என்பது உண்மை.

 நண்பர்களுக்குள் மட்டுமன்றி வேறு நபர்களுக்கும் பட்டங்கள் சூட்டப்படும், குறிப்பாக எங்கள் ஆசிரியர்களுக்கு ஏராளமான பட்டங்களை அள்ளி வழங்கி இருந்தோம்.


முழியன், பல்லி, காகம், லொக்கி,சுரைக்காய், ஒட்டல், குரங்கி,பூனை………

இதெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

சிறு வயதில் எங்கள் ஏரியாவில் எங்களுக்கு வைக்கப்பட்டிருந்த‌இருந்த சில பட்டப்பெயர்கள். 

எங்கள் ஏரியாவில் அப்போது எல்லோருக்கும் பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. எங்களுக்குள் சிறுவயது மோதல்கள் வருவது சகஜமாக இருக்கும் அப்போது தப்பித்தவறிப் பட்டப் பெயர்களை கூப்பிட்டோமோ...போச்சு... பெரும்பாலும் அது பெரியவர்கள் சண்டையில்தான் போய் முடிந்திருக்கிறது. எங்கள் ஒழுங்கையின் ஒருமருங்கில் பாசி பிடித்திருந்த மதில்ச் சுவரில் பட்டப் பெயர்களை எழுதி வைத்து விடுவோம். அதனைப் பாதிக்கப் பட்ட குறிப்பிட்ட நபர் சார்ந்த குடும்பத்தினர் புலனாய்வு செய்யும் அளவிற்குப் போய் பெரியவர்கள் சண்டையில் போய் முடியும். 


இதே பட்டப்பெயர்கள் சற்று வளர்ச்சியுற்று தரம் 7,8,9 படிக்கும் காலங்களில் எங்களுக்குள் மட்டுமன்றி எங்களோடு டியூஷனில் படிக்கும் நண்பிகளுக்கும் பட்டங்கள் சூட்டப்பட்டன. அதிலும்  எங்கள் நண்பிகளுக்கு பட்டங்கள் சொல்லி பகிடியடித்தோமோ அது டியூஷன் சென்டர் பொறுப்பாளர் வரை போய் நாங்கள் ஏதோ கொலைக் குற்றம் செய்த குற்றவாளிகள் போல் நடாத்தப்பட்டு அப்பா அம்மாவை கூப்பிட்டனுப்பிக் கண்டனங்கள் தெரிவிக்குமளவிற்குச் சென்று விடும்.


அப்போது எம்முடன் படித்த நண்பிகளுக்கு புழுக்கை, ஊர்க்குருவி, பீரங்கி, பிளக் பியூட்டி, அஸ்காரிஸ், சோலாப்பூரி, வெளவால் என்று பல்வேறு தினுசுகளில் பட்டங்கள் சூட்டப்பட்டிருந்தன.


இதைவிட இதேகாலப்பகுதியில் பாடசாலையில் எங்களிடையேயும் பட்டப்பெயர்கள் இருந்தன. அப்படிப் பட்டப்பெயர்களைத் தப்பித்தவறி யாருக்காவது சொன்னோமோ இந்தத் தடவை அப்பா, அம்மா, டீச்சர் விசாரணை எல்லாம் இல்லை சம்பந்தப்பட்ட நாங்களே அக் ஷனில் இறங்கி விடுவோம். 

கெ ளரி( KELARI), பேப்புத்தர், தலைவர், கிருபானந்தவாரியார், புழுக்கை, ஹிட்லர், பீபீ கிறீம், கண்ணாடிப்பாப்பா, கோழிப்பீ, முட்டை, முனிவர், பாவாடை, எலி இப்படிப் பல பெயர்கள் எம்மிடையே உலாவின.


தொடர்ந்து உயர்தரம் படிக்கும்போது இதேபோன்று பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டாலும் நாங்கள் அதை கோபமாகவோ , ச‌ண்டையாகவோ எடுத்துக் கொண்டதில்லை. மாறாக எங்கள் சொந்தப் பெயர்களை விட நாங்கள் "மச்சான்" அல்லது அந்தந்தப் பட்டப்பெயர்களாலேயே நண்பர்களை இன்றுவரை அழைத்துக் கொள்கிறோம்.

இக்காலத்தில் எனக்கு அற்புதா என்ற நண்பன் வைத்தானே ஒரு பட்டப்பெயர் "AK" என்று, அதன் ரகசியம் எனக்கும் அவனுக்கும்தான் தெரியும். அதை விட எமக்குள் மொட்டைக்காந்தி, வெள்ளை, கோதாரி, அம்பர்,கேணி, போண்டா, மொட்டை, புத்தர்,றோசி, பல்லு இன்னும் பல பட்டப்பெயர்கள் பிரபலமாக இருந்தன!

சிறுவயதில் கோபத்தைத் தூண்டிய பட்டப் பெயர்கள் வளர்ந்த பின் எங்கள் நட்பின் ஆழத்தை சொல்லும்  முத்திரைகளாக விளங்குவதாக உருமாறி நிற்கின்றன!

-கொளரிதாசன்-

சுவிட்சர்லந்து 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.