கடற்கரும்புலி மேஜர் காந்தி அவர்களின் நீங்காத நினைவுகள்!

  

முரட்டுப்பிள்ளை….

“கடாபி” இது அவளுக்கு முன்னால் அல்ல பின்னால் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் பெயர். அந்தப் பெயரை அவளுக்கு முன்னால் சொல்ல யாருக்கும் துணிவு இருக்காது. அந்தளவுக்கு முரட்டுக் குணங்களைத் தன்னகத்தே கொண்டவள்தான் அவள்.

பாசறையில் ஏதாவது பளுவைத் தூக்க வேண்டியிருந்தால், ‘காந்தி” என்று சொல்லத் தேவையில்லை தானாகவே முன்வந்து தோளில் அடிப்பாள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையிருக்காது. நாங்கள் இரண்டு மூன்று பேர் செய்யும் வேலையை அவள் தனியாளாகச் செய்து முடிப்பாள்.

கடற்கரை மணலில் பளுத் தூக்கி நடப்பது எளிதானதல்ல… நாங்கள் தள்ளாடுவோம், காந்தி நிமிர்ந்து கொண்டு நடப்பாள். மணலில் ஏதாவது ஊர்தி புதைந்து விட்டால், நாங்கள் எத்தனைபேர் தள்ளியும் அசையாத ஊர்தி காந்தி வந்து தொட்டால் காணும் அசைந்து விடும்.

கடலில் படகுகள் இறக்கும் போது முதிர்வும் பட்டறிவும் மிக்க ஊர்தி ஓட்டுநர்கள் போலக் காந்தியும் தனது உழவு ஊர்தியில் படகுக் காவிகளைக் கொளுவி மிக இலாவகமாக படகுகளைக் கடலுக்குள் இறக்கிவிட்டுப் படகுத் தாங்கியை வெளியே கொண்டுவருவாள்.

கடலில் காந்தி படகை ஓட்டினால் எங்களுக்குப் படகில் நிற்க அச்சம். ஏனெனில், அவளது ஓட்டத்தின் விரைவு அப்படி… உந்துருளியில் எட்டு அடிப்பது போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று படகில் எட்டடிப்பாள். அவள் படகைத் திருப்பி வெட்டும் விரைவில் நாங்கள் எதையாவது பிடிக்கத் தவறினால் கடலுக்குள் விழ வேண்டியதுதான்.

‘காந்தி” மெல்ல ஓட்டு என்றால், சொன்னதற்காக இரு மடங்கு விரைவைக் கூட்டி விட்டுக் கேட்பாள். ‘இப்ப எப்படியிருக்கு…” இவளது இந்தப் படகோட்டும் பயிற்சி பல கடற் சண்டைகள் வெற்றியுடன் நகரக் காரணமாக இருந்தது. மேலே ‘கிபிர்” என்றால் காந்தி செலுத்தும் படகு கிபிரை விட விரைவாக ஓடும்…

போராளிகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எப்படியும் காந்தியின் அணி வெல்லும். கூடைப்பந்துப் போட்டியில் காந்தியை மறிக்கும் கன்னை பாவம்… கயிறிழுத்தல் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை…

காந்திக்கு எதையும் ஒளிச்சு மறைச்சுப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் நின்றுதான் பேசுவாள். வெட்டொன்று துண்டிரண்டு எனத்தான் அவளது பேச்சு இருக்கும். அவளிடம் எதற்கும் அஞ்சாத துணிச்சல் இருந்தது.

‘காந்தி” கடலிலே படகினை இறக்கும் போது ‘அப்பப்பா” பாட்டுச் சொல்லும் விதம் கூட வேறுபட்டதுதான். அம்மப்பாச் சொல்லும் போது அவளது குரல் ஓங்கி ஒலிக்கும், மற்றவர்களின் குரல்கள் பின்னால் இழுபடும். அவள் குரலுக்கு கட்டுண்டது போல விரைவாய்ப் படகு கடலில் இறங்கும்.

கடலுக்குள் இறங்கும் படகின் அணியத்தைப் பிடித்துப் படகைச் சீராக்கி விடவும் காந்திதான் முன்னணியில் நிற்பாள். காந்தி வெளித்தோற்றத்தில், செயற்பாட்டில் முரட்டுக்குணமாகத் தெரிந்தாலும், அவளுக்குள் இளகிய மனம் இருந்தது. மென்மையான உணர்வுகள் இருந்தன. ஆனால், அன்பை வெளிப்படுத்தத் தெரியாததனால் அந்த ஒரேயொரு விடயத்தில் மட்டும் அவள் தோற்றுப்போனது உண்மைதான்.

‘காந்தி” மக்களுக்காகத் தன்னை உவப்பீகை செய்யத் துணிந்த ஒரு கரும்புலி. அவளுக்கு தாக்குதலுக்கான படகு கொடுத்தாயிற்று. இனி எந்த நேரத்திலும் அவளுக்கான இலக்குக் கிடைக்கும். தனது இறுதி விருப்பாய்ச் சிறப்புத் தளபதியிடம் அவள் ஒன்றை மட்டும் கேட்டாள்.

‘அண்ண நானொருக்கா வெளியால போய் வரப்போறன்” ஒரு கரும்புலியின் கடைசி ஆசை அது, அவர் உடனே அனுமதித்தார். வெளியில் சென்றவள் நேரே போன இடம் எல்லோருக்குமே வியப்புத்தான். அன்பைச் சொரியும் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம், வெற்றிமனை, அன்புச்சோலை என அன்பு மழையில் நனையும் அந்தச் சோலைகளில் தான் சில மணிநேரம் கழித்துவிட்டு வந்திருந்தாள். வந்தவள் ஒரு பெரிய பொதி ஒன்றைச் சிறப்புத் தளபதியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், ‘அண்ண இத நான் வீரச்சாவடைந்த பிறகு திறந்து பாருங்கோ…” அவரும் அதை வாங்கித் தனது மிசையத்தில் வைத்திருந்தார்.

16.09.2001 கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கிய ‘டோறா” இதுதான் அவளுக்கான இலக்காகியது. ‘பாகையைச் சொல்லுங்கோ மிச்சத்த நான் பாக்கிறன்” அந்தக் கம்பீரக் குரல் கேட்கப் பாகை சொல்லப்பட்டது. சில நொடிப் பொழுதுகள் எந்தப் பிசிறும் இல்லாத இடியால் டோறா மூழ்கிப்போனது.

மிசையத்தில் இருந்த பொதியைத் திறந்து பார்த்தபோது கண்ணாடிச் சட்டத்துக்குள் இருந்து கறுப்புச் சீருடையில் முரட்டுப்பிள்ளை காந்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

நினைவுப்பகிர்வு:- பிரமிளா.
விடுதலைப் புலிகள் (04.09.08)

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.