அவசரகால நிலை ஏன் ஆபத்து?

 


நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலைமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டவாக்கமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் தனது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் நேற்று நள்ளிரவிலிருந்து அவசரகால நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு இது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாடு ஆபத்திலிருந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும். இதனால்தான் பொதுமக்கள் பொது சுகாதார அவசரகாலச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

அதுதொடர்பில் தனிநபர் சட்டவரைவு ஒன்றையும் நான் பாராளுமன்றில் முன்வைத்துள்ளேன். அதனை விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்றுவதாக அரசு அண்மையில் தீர்மானித்தது.

அவ்வாறிருக்கையில் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையிலே தற்போது அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன் ஆபத்து என்னவென்றால், இதனைத் தொடர்ந்து முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டவாக்கமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும். இதனை நாம் வலுவாகக் கண்டிக்கின்றோம் - என்றார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.