அதிர்ஷ்டமில்லாதவன் - குட்டிக்கதை!!


ஒருமுறை அர்ச்சுணனும் கிருஷ்ணனும் வீதியில் உலா வந்தார்கள்.

வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

அர்ச்சுணன் மனமிறங்கி 1000 பொற்காசுக்களைக் கொடுக்க வயோதிகர், “ஆகா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு உபயோகப்படுமே...” என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இதைத் தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் இரவில் வீட்டிற்குள் புகுந்து களவாடிச் சென்று விட்டான்.

சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ்வழியே வந்த அர்ச்சுணன் வயோதிகரின் நிலையைக் கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து, "இதையாவது பத்திரமாக வைத்திருந்து, வாழ்க்கையை சுகமாக்கிக் கொள்ளுங்கள்..." என்றான்.

இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்குக் கொண்டு சென்ற வயோதிகர், தன் மனைவி பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து, அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு... கவனமாகப் பாதுகாத்து வந்தார்.

இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்தப் பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.

அப்போது பானையை கழுவும் போது அந்த விலையுயர்ந்த கல் ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

அவள் நீரெடுத்துக் கொண்டு வீட்டில் நுழையும் சமயம் வெளியேச் சென்ற வயோதிகர் அந்தக் குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி, “எங்கே அதிலிருந்த கல்?” என்று மனைவியைக் கேட்டான்.

ஏதுமறியாத மனைவி நடந்ததைக் கூற, உடனே ஆற்றிற்குச் சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்குச் சோகத்துடன் திரும்பினான்.

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற...

அர்ச்சுனன், கண்ணனிடம், “இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்...” என்று கூறினார்.

அதை ஆமோதித்த கண்ணனும், “இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டுமே கொடு...” என்றார்.

ஆச்சிரியப்பட்ட அர்ச்சுனன், 2 வராகன்கள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டுக் கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை... வெறும் 2 வராகன்கள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடப் போகிறது...?" எனக் கேட்டான்.

கண்ணன், "எனக்கும் தெரியவில்லை... ஏதோத் தோன்றியது... அதனால் சொன்னேன்... என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, நாம் அவன் பின்னாலேயேச் செல்லலாம்..." எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

வயோதிகர் வீட்டடிற்குச் செல்லும் வழியில் ஒரு மீனவன், “உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்கிறாயா...?” எனக் கேட்டான்.

உடனேத் தனக்குள் யோசித்த வயோதிகர், “இந்த 2 காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒரு வேளை பசியைக் கூடப் போக்காது...” என எண்ணி, அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலேத் திரும்ப விடலாம்...” என்ற முடிவுடன் வாங்கினார்.

பின் ஒரு மீனை ஆற்றில் விட்டு விட்டு, அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்து மீனின் வாயில் விரலை விட்டுச் சிக்கியிருந்ததை எடுத்தார்.

அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்.

“ஆம்... அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது”

உடனே சந்தோசத்தின் மிகுதியால்... "கடவுளே! என்னிடமேச் சிக்கி விட்டது..." என்று கூச்சலிட்டார்.

அதே நேரம்... முன்பு இவர் வீட்டில் திருடிய கள்வன் யதார்த்தமாக அவ்வழியே வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓட... கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.

கள்வன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

அதை அனைத்தையும் வயோதிகருக்குக் கொடுத்து அனுப்பிய அர்சுணன்,0 கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்...?" எனக் கேட்க,

கண்ணனும் சிரித்துக்கொண்டே… "இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததைத் தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லைத் தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்... ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை... ஆனால், இப்போதோ தன்னிடமிருப்பது மிகக்குறைவானதாக இருந்தும் தனக்கு உதவாவிட்டாலும்... இன்னொரு உயிராவது வாழட்டுமே... என தன்னலமில்லாது நினைத்ததால் தான்... அவனை விட்டுச் சென்ற செல்வம் அனைத்தும் அவனுக்கேக் கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை..." எனக் கூறினார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.