‘கோடியில் ஒருவன்’ இன்று வெளியாகிறது!


தமிழ் சினிமாவில் தலைப்பின் மூலமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மிகச் சொற்பமான நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.

இதுவரை விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான தலைப்புகளைக் கொண்டது. பிச்சைக்காரன், சைத்தான், எமன், திமிரு புடிச்சவன் ,கொலைகாரன் என சொல்லிகொண்டே போகலாம்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமான புதிய படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ எனவும் பெயர் வைத்துள்ளனர்.

இப்படிப் படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டருக்கு மக்களை வரவழைக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி. கடைசியாக 2019ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் கொலைகாரன் என்ற படம் வெளியானது

கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியிட முடியாமல் முடங்கிக்கிடந்த படங்களில் ‘கோடியில் ஒருவன்’ படமும் ஒன்று.

‘மெட்ரோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா, கே.ஜி.எஃப் படத்தின் வில்லன் ராச சந்திர ராஜு நடித்துள்ளனர்.

மேலும் ஐ.எம்.விஜயன், பிரபாகரன், சச்சின் ஆகியோரும் நடித்துள்ளனர். அடித்தட்டு மக்களுக்கான கல்வி, அதன் அவசியத்தை வலியுறுத்தும் கோடியில் ஒருவன் படத்தில் டியூசன் மாஸ்டராக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படம் முழுக்க சென்னை நகரைச் சுற்றியுள்ள குப்பத்துப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியபின் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான லாபம், கங்கனா ரணாவத் நடித்திருந்த தலைவி என இரு படங்களையும் திரையரங்குகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தன. கடந்த 8,9 தேதிகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தன.

இந்த நிலையில் இன்று வெளியாகும் கோடியில் ஒருவன் பெரும் எதிர்பார்ப்புடன் திரையிடுகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். அதனால்தான் தமிழகத்திலும், பிற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் 9 விநியோகப் பகுதிகளில் 367 திரைகளிலும், கர்நாடகா மாநிலத்தில் 125 திரைகளிலும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 327 திரைகளிலும் கோடியில் ஒருவன் இன்று வெளியாகிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.டி.ராஜா மற்றும் சஞ்சய்குமார் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்

-இராமானுஜம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.