தமிழ் அரசியல்வாதிகள் கண்ணீர் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் – வி.எஸ்.சிவகரன்

 


தமிழ் அரசியல்வாதிகள் கண்ணீர் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் திருவிழா வணிகத்தை மூலதனமாக்கி ஆதாயச்சூதாடிகளாக அடுக்கு மொழியில் மிடுக்கு வார்த்தையை உணர்ச்சி பொங்க உருவேற்றி உணர்வைத் தூண்டி பதவி சுக போகத்தில் மிதக்கிறார்கள் இவர்களிடம் தமிழ்த்தேசிய அற அரசியலை எதிர்பார்க்க முடியுமா? என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐக்கியத்துடன் ஒருமித்து நீதி கோர முடியாதவர்களிடம் காணாமல் போன 146,679 பேரை இவர்களால் கண்டுபிடிக்க வழி வகுக்க முடியுமா?


கடந்த 12 ஆண்டுகளாக எந்த விதமான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை கோசங்களுக்கு அப்பால் இலட்சியமும் இல்லை இலக்கும் இல்லை அணிகளாக பிரிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள்


கடந்த ஜனவரி மாதம் தமிழ்க்கட்சிகளை ஒரு நிரலுக்குட்படுத்த நாம் பட்ட வலிகள் எண்ணற்றவை. தமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை.


பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உளமார புரிந்து கொண்டு அவர்கள் துயர் துடைக்க எந்த அரசியல்வாதியும் இதுவரை முனையவில்லை. தமிழினத்தை சிங்களவர்கள் கூறு போடுவதை விட தமிழ்க் கட்சிகளே தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு சிதைந்து சின்னாபின்னமாக்கி விட்டனர்.


பாவம் தமிழ் மக்கள் புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தேர்தல் வணிகர்களால் கூறு போட்டு விற்கப்படுகிறார்கள் அவர்களது வலிகளை இந்த எலிகள் எள்ளி நகையாடுகின்றன. புலம்பெயர்ந்த சில அமைப்புகளும் சில பன்னாட்டு தூதரகங்களும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள் ஆழம் பார்த்து ஆட்டுவிக்கின்றன .


தமிழ் மக்கள் சிந்திக்காமல் இதே நிலையில் தொடர்வார்களாயின் இன்னும் ஒரு தசாப்தத்தில் முழுமையான அடையாளத்தை நாம் இழந்து விடுவோம். குறுகிய மனோநிலையில் கட்சி பேதங்களும் குழு மோதல்களும் காட்டிக் கொடுப்புக்களும் கூடவே இருந்து குழி பறிப்புக்களுமே இன்றைய தமிழ் அரசியலின் வகிபாகம் சந்தி சிரிக்கிறது இவர்களின் வெறுமை அரசியலை.


போலிக் கூட்டுக்களும் பொய்மை வாதங்களும் நீலிக் கண்ணீரும் தமிழ்மக்களின் இருப்பை மேலும் மேலும் கேள்விக்கு உட்படுத்துகிறது என்பதை இவர்கள் புரியாதது வேதனையே!


ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மாற்றம் வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் வேறு வழி நாடவேண்டும். இரண்டு இல்லையேல் தமிழினத்தை ஆராட்சியிலே தான் தேட வேண்டியிருக்கும். என்பதே மறுக்க முடியாத உண்மை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.